jஇந்திய வங்கிகளின் வாராக்கடன் பிரச்சனை!

public

2003-2008 காலத்தில் வட்டிவிகிதம் சற்றே உயர்வாக இருந்தபோதும், பொருளாதாரம் வேகமாக வளர்ந்ததால், இந்தியாவின் பெருமுதலாளிகள் சகட்டுமேனிக்கு பொதுத்துறை வங்கிகளிடம் மக்கள் பணத்தைக் கோடிக்கணக்கில் கடன் வாங்கினர். அப்பணத்தை சாலைகள், நெடுஞ்சாலைகள், எரிசக்தி, மின்சாரம், துறைமுகம், விமான நிலையம் என உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் முதலீடு செய்தனர்.

ஆனால், 2009-க்குப் பிறகு, வட்டிவிகிதம் உயர்ந்ததாலும், அரசின் கொள்கை முடிவுகள் பலவும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டதாலும், பல திட்டங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர அரசின் அனுமதியும், வங்கியிலிருந்து கடனும் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதில் பலர் கடன் மோசடி செய்தார்கள் என்பது வேறு கதை. இதனால், பெருமுதலாளிகள் கடனைத் திருப்பித்தர முடியாத நிலைக்கு வந்தனர்; பொதுத்துறை, தனியார் வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் (NPA) பங்கு வேகமாக வளர்ந்தது. செயல்படாத சொத்துக்களைச் செயல்படவைக்க வங்கிகள் முயற்சி செய்தபோதும், அவற்றில் பல சொத்துக்கள் வாராக்கடன் (bad debts) ஆகிவிட்டன.

2009-10 – 2013-14 காலத்தில் இந்தியாவின் வணிக வங்கிகளில் (commercial banks) ரூ. 5.7 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்கள் செயல்படாத சொத்துக்களாக மாறின; 2014-15 – 2017-18 காலத்தில் மட்டும் ரூ. 16 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்கள் செயல்படாத சொத்துக்களாக மாறின. 2009-10 – 2013-14 காலத்தில் இனி திரும்பப்பெறவே முடியாது என்று முடிவுசெய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் தொகையின் மதிப்பு ரூ. 55,000 கோடி; 2014-15 – 2017-18 காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் தொகையின் மதிப்பு ரூ. 4 லட்சம் கோடி. இது வங்கிகளின் லாபத்தைக் குறைத்தது மட்டுமல்லாமல், வாராக்கடனை ஒட்டி வங்கிகள் தங்கள் முதல்பணத்தில் (capital) இருந்து தனியே ஒதுக்கி வைக்கவேண்டிய வைப்புப் பணத்தின் (provisioning) பங்கையும் அதிகரித்தது.

இவ்வளவு கடன் தள்ளுபடி செய்துள்ள பின்னும் 2018 மார்ச் முடிவில் ரூ. 10.4 லட்சம் கோடி மதிப்புள்ள செயல்படாத சொத்துக்களை வங்கிகள் வைத்திருந்தன. கடனைத் திருப்பித்தராதவர்களில் ரூ. 5 கோடிக்கு அதிகமாகக் கடன் வாங்கியவர்களின் பங்கு 80 விழுக்காட்டிற்கும் அதிகம். முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், இதை “Riskless Capitalism” என்கிறார்.

தொழில்முனைவோர்கள், தொழிலதிபர்கள் செய்யும் முதலீடுகள் பலன்தராமல் போவதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால் அந்த இழப்புகளைப் பொருட்படுத்தாமல் துணிந்து செய்யப்படும் முதலீடுகள் பெரும் லாபத்தைத் தந்தால் அதை அனுபவிக்கப்போவதும் அவர்களே. அதனால், முதலாளித்துவத்தில் “ரிஸ்க்” எடுப்பதே சிறந்தது என்பார்கள். ஆனால், பொதுமக்கள் பணத்தில் ரிஸ்க் எடுத்து, இழப்பு நேரிடும்போது அதனை வங்கிகள் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பது எவ்வகை முதலாளித்துவத்தில் சேரும் என்பதை அதன் ஆதரவாளர்கள்தான் சொல்ல வேண்டும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *