Jஅருவி: 500 பெண்களுக்கு ஆடிஷன்!

public

சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளை பெற்றுவரும் அருவி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (டிசம்பர் 6) பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் அருண் பிரபு, நாயகி அதீதி பாலன், இயக்குநர் கவிதா பாரதி, இசையமைப்பாளர் வேதாந்த், ஒளிப்பதிவாளர் ஷெல்லி, படத் தொகுப்பாளர் ரேமன்ட், கலை இயக்குநர் சிட்டிபாபு, நடிகர்கள் ஸ்வேதா சேகர், அஞ்சலி வரதன், மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “இதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச் சிறந்த படம் இதுதான். உலகளவில் நடைபெறக் கூடிய திரைப்பட விழாக்களில் நீங்கள் தயாரித்த படங்களைப் பற்றி கூறுங்கள் என்று கேட்கும்போது சில படங்களின் பெயர்களை மட்டும்தான் என்னால் கூற முடிந்தது. ஏன் என்னுடைய எல்லா படங்களின் பெயர்களையும் என்னால் கூற முடியவில்லை என்ற சிந்தனை என்னுள் இருந்து வந்தது. அப்போதிருந்து கண்டிப்பாக இனி பெயர் சொல்லும் வகையில் படங்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இயக்குநர் சக்தி சரவணன் நான் பிரியாணி படத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது இப்படத்தின் கதையை கேட்குமாறு என்னிடம் கூறினார். இரவு 9 மணிக்கு மேல்தான் அருவி படத்தின் கதையை இயக்குநர் அருண் பிரபு என்னிடம் கூறினார். அவர் கதை சொன்னவிதமே புதுமையாக இருந்தது. கதை சொல்லும்போது அந்த கதாப்பாத்திரமாகவே மாறி இசையோடு கதையைக் கூறினார். நாங்கள் படத்தின் கதையைப் பெரிதாக நம்பினோம். மக்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்குள் இப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “அருவியை பொறுத்தவரை படத்தை நாங்கள் இந்த பட்ஜெட்டில்தான் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்கள் தயாரிப்பு குழுவும், இயக்குநர் குழுவும் கடுமையாக உழைத்து தரமான படமாக உருவாக்கியுள்ளனர். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்தனர். இயக்குநர் ஷங்கர் அவருடைய படங்களை எடுக்க எந்த அளவுக்கு மெனக்கெடுவாரோ, அதே அளவுக்கு அருணும், அவருடைய குழுவினரும் அருவிக்காகக் கடுமையாக உழைத்தனர்” என்று படக்குழு குறித்து பேசினார்.

கதாநாயகிக்கான தேடல் குறித்து பேசும் போது, “அருவி கதாபாத்திரத்தில் முதலில் இரண்டு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பின்னர் புதுமுகத்துக்கே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அருவி கதாபாத்திரத்துக்காக 5௦௦ பெண்களை இயக்குநர் ஆடிஷன் செய்தார். நான் அவரிடம், ‘நீங்கள் நிஜமாகவே கதாநாயகிக்காக ஆடிஷன் செய்கிறீர்களா அல்லது 5௦௦ பெண்களை சந்திக்க வேண்டும் என்று ஆடிஷன் செய்கிறீர்களா’ என்று கேட்டேன். சென்சாரில் இந்தப் படத்தை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற பயம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அவர்களுக்கு இந்தப் படம் பிடித்திருந்தது. நல்ல படம் என்றார்கள். சில படங்கள் எளிதாக சென்சார் ஆகிவிடும் என்று நினைப்போம். ஆனால் எதிர்பாராத ஒன்றுதான் நடக்கும். அந்த வகையில் இந்தப் படத்தின் அனுபவம் எனக்குப் புதுமையாக இருந்தது” என்று கூறி தனது உரையை எஸ்.ஆர்.பிரபு நிறைவு செய்தார்.

இயக்குநர் அருண் பிரபு பேசும்போது, “இந்த அருவி திரைப்படம் மனிதத்தைப் பற்றி பேசும் படமாக இருக்கும். நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிய என்னுடைய குருக்களான இயக்குநர்கள் பாலுமகேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு நன்றிகள்” என்று கூறினார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *