i’கே’ பிரச்சினைகளைப் பேசும் தமிழ்ப்படம்!

public

உலகம் சுருங்கச்சுருங்க மனிதர்களின் சிந்தனைப் புலமும், மனதின் பரப்பும் விரியவேண்டும். அதை உண்மையாக்கும்வகையில் மாற்றங்கள் மெல்ல மெல்ல நடந்தே வருகின்றன. விளையாட்டு வீரர் சாந்தி ஆணா? பெண்ணா? என சர்ச்சை கிளம்பியபோது, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஓடியது அவர் கால்கள்தானே!” என்றார். தொடர்ந்து திருநங்கைகள் நல வாரியம் போன்ற சமூக பாதுகாப்புகளும் தமிழகத்தில் அறிமுகமாகின. இந்தியாவிலே முதன்முறையாக திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் பணியை போராடி வாங்கினார் பிரித்திக யாஷினி. அவருக்கு ஆதரவாக முழுமையாக சமூக ஊடகங்களும், செய்தி ஊடகங்களும் ஆதரவாயிருந்தன. இந்நிலையில், தமிழக திரைத்துறையில் ஒரு மாற்றாக தமிழின் முதல் ‘கே’ ( தன் பால் விருப்புடையோர்) படம் உருவாகி வருகிறது.

தமிழ்த் திரைவரலாற்றில் பழமையெல்லாம் களைந்து புதிய முயற்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டு வந்தாலும், ஹோமோசெக்ஸுவாலிட்டி கதைகள் தவிர்க்கப்பட்டு வந்தன. அதைத் தாண்டி, புது முயற்சியாக குறும்பட இயக்குநர் லோகேஷ், முழுக்க முழுக்க ஹோமோசெக்‌ஷுவல் பிரச்சினைகளைப் பேசும் கதை ஒன்றை படமாக்கத் துணிந்துள்ளார். இதில், பிரபல நடிகர் ஜெயப்பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் “இப்பத்தான் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கியுள்ளது. என்னுடைய போர்ஷன் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. தமிழில், இது முதல் முயற்சி. இன்னும் சொல்லனும்னா வரவேற்கத்தக்க முயற்சி. படத்தின் கதை எனக்குத் தெரியும் என்பதால் சொல்கிறேன்; சர்வதேச அளவில் இந்தப் படம் கண்டிப்பா பேசப்படும்” என்றார். படம் பற்றி அப்படத்தின் இயக்குநர் லோகேஷ்,

“ரெண்டு வருடத்துக்கு முன்பு தமிழில் எழுதி, பைலட் ஃபிலிம் வெளியிட்ட ஸ்கிரிப்ட்தான். ஆனா, அப்போ அதற்கான சூழல் இல்லைன்னு இந்தியில் ட்ரை பண்ணினோம். ஆனா, இந்திக்குப் போகும்போது பெரியளவில் பட்ஜெட் தேவைப்பட்டுச்சு. பெரும்பாலான டெக்னிஷியன்ஸ் எல்லாம் சென்னையைச் சேர்ந்தவங்க, ஆர்டிஸ்ட் எல்லாம் மும்பை படத்தை இந்தியில் துவங்கிட்டு, ஒவ்வொரு முறையும் எல்லோரும் அங்க ட்ராவல் பண்ணவேண்டியிருந்துச்சு. செலவை குறைக்கலாம்னா இங்க வரவேண்டியதா இருந்துச்சு. ஒரு கட்டத்துல இந்தியில பண்ணமுடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. சரி வாய்ப்பு வந்த தமிழ்லயே பண்ணலாம்னு முடிவு பண்ணி, இந்தி வெர்சனை ட்ராப் பண்ணினோம். இந்த ப்ராஜெக்ட் பத்தி கேள்விப்பட்டு இன்வெஸ்ட் பண்ணி, தன்னால் முடிந்த அளவுக்கு உதவிசெய்த அணில் சக்சேனா உதவியை மறக்கவே முடியாது. எந்தவிதப் பொருளாதார எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் படம் பண்ண வந்தாங்க என்றாலும் அப்படி ஆர்வமுள்ளவங்களுக்கு அதிக செலவை இழுத்துவிட்டுடக் கூடாதுன்னுதான் நிறுத்தினோம். அதுக்குப் பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த லின் என்பவர், என் பேஸ்புக் பேஜ்ல ‘கிரௌட் பண்டிங்’ பண்ண நாங்க ட்ரை பண்ணிட்டு இருந்தை பார்த்துட்டு இந்தப் கதையை படமாக்க ஆசைப்படுறேன்னு சொல்லி, மெயில் அனுப்பியிருந்தாங்க. அவங்க தரப்பு முதலீடா அவங்களுக்கு சொந்தமான பீச் ஹவுஸ் கேரளாவில இருக்கு. அதைப் பயன்படுத்திக்கச் சொல்லி அனுமதி கொடுத்தாங்க. ஒவ்வொரு பொறுப்பையும் ஒவ்வொருத்தர் ஏத்துக்கிட்டாங்க. படத்தில் புதுசா ஒண்ணும் சொல்ல வரல. அதேநேரம், இதுபோன்ற ‘கே’ மனநிலை எல்லாம் ஆல்ரெடி இங்க இருக்கிறதுதான். ஆனால், அப்படியொரு வழக்கமே இங்க இல்லாதமாதிரி நம்மை நாமே ஏமாத்திக்கிட்டு நடந்துக்கிறோமே அதை, வெளிப்படையா பேசப்போறோம். நான் நிறைய உலகப் படங்கள் திரையிடல்களில் கலந்து கொண்டிருக்கிறேன். திரை விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன், அப்போதெல்லாம், இதுமாதிரி பாலின தேர்வு உரிமை, பாலுறவு உரிமை உள்ளிட்ட பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசும் படங்கள் ஏன், நம்நாட்டில் வரவில்லை என நினைத்ததன் விளைவுதான் இந்தப் படம். சர்வதேசத் திரையிடல்களில் இந்த கதைக்களத்துடன் இந்தியாவில் இருந்துபோகும் படமாக இது இருக்கும். கமர்சியல் எதிர்பார்ப்புகள் என்பதைத் தாண்டி பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு என்பதில்தான் அதிகக் கவனம் செலுத்துகிறோம். நடிகர்கள் கிஷோர், ஜெயப்பிரகாஷ், அபிஷேக் ஜார்ஜ், நடிகை அனுபமா குமார் போன்றவர்கள் இந்தப் படத்தில் எங்களின் பங்களிப்பு இருப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர்” என்றார்.

மாற்றுக் குரல்களுக்கான தேவை இருக்கத்தான் செய்கிறது, அதற்காக முயற்சிகளை வரவேற்போம்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *