cஅதிக மழை: குறைந்த பேரீச்சை விளைச்சல்!

public

கோவை மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேரீச்சை விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.வறட்சியான காலநிலையில் வளரும் பேரீச்சை மரங்கள் நாட்டில் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் விளைவிக்கப்படுகிறது. தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. அதன்படி கோவை மாவட்டம் நெகமம் அருகே ஜக்கார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பேரீச்சை மரங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கிருந்து பேரீச்சை பழங்கள் அறுவடை செய்யப்பட்டு திருச்சி, சென்னை போன்ற வெளிமாவட்டங்களுக்கும், இலங்கை, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் தென்னை விவசாயம் பிரதானமாக இருந்தாலும், பேரீச்சை சாகுபடியும் கணிசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழு உரமிட்ட நிலத்தில் சொட்டுநீர் பாசனத்தில் பேரீச்சை விளைவிக்கப்படுகிறது. ஏக்கருக்கு 70 மரக்கன்றுகள் என்ற விகிதத்தில் நட்டு பராமரிக்கப்படுகிறது. வாரம் ஒருமுறை மட்டுமே பாசனம் வழங்கப்படுகிறது.

ஆண்டு சாகுபடி என்பதால் பூப்பூக்கும் காலம் முதல் பிஞ்சு உருவாகும் காலம் வரை முறையாக நீர் பாசனம் செய்தால் விளைச்சல் அதிகம் கிடைக்கும். இந்த மரங்களை சிவப்பு கூன்வண்டுகள் தாக்குகின்றன. அவற்றை அழிக்க சொட்டு நீருடன் மருந்து கலந்து பாய்ச்சப்படுகிறது. இது தவிர குருவிகள், மயில்களால் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் காய் பிடிக்கும் ஏப்ரல் மாதம் முதல் அறுவடை செய்யப்படும் ஆகஸ்ட் மாதம் வரை நான்கு மாதக் காலம் பேரீச்சை குலைகள் பாலித்தீன் பையால் மூடி பாதுகாக்கப்படுகிறது. ஒரு மரத்தில் அதிகபட்சமாக, 24 குலைகள் பிடிக்கும்.

தற்போது ஜக்கார்பாளையம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரங்களில் எந்த குலைகளும் பிடிக்கவில்லை. ஒவ்வொரு குலையிலும் 15 கிலோ காய்கள் கிடைக்கும். மொத்தமாக ஒரு மரத்துக்கு குறைந்தபட்சமாக 75 கிலோ முதல் 125 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும். அதன்படி ஏக்கருக்கு 9,000 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும்.

பெரும்பாலும் ஈரோடு, கோவையில் இருந்து வந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்வார்கள். நடப்பு பருவத்தில் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு மாதத்துக்கு முன்பே பேரீச்சை அறுவடையும், விற்பனையும் நிறைவடைந்து விட்டது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் எங்கும் விளைச்சல் இல்லாததால் அறுவடை தொடங்கவில்லை. மேலும் கடந்த ஆண்டும் விளைச்சல் இல்லை.

இதற்கு காரணம், பேரீச்சை மரத்திற்கு தண்ணீர் அதிகளவு தேவை இல்லை. ஆனால் அதிக மழை பொழிவு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விளைச்சல் குறைந்துவிட்டது. இதனால் பேரீச்சை விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதன் காரணமாக பேரீச்சை விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *