�உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்தில் ஜெ. கையெழுத்திட்ட ஆவணம் சர்ச்சைக்குள்ளாகிறதா?

public

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நடக்காது என்ற வாதப் பிரதிவாதங்கள் உச்சநீதிமன்றத்திற்கு வெளியேயும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

டிசம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் அறிவிக்கை, உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு மீண்டும் டிசம்பர் 9 ஆம்தேதி, அதே டிசம்பர் 27, 30 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமென அறிவிக்கை வெளியிட்டது தமிழ்நாடு தேர்தல் ஆணையம்.

இட ஒதுக்கீட்டு சட்டப்பிரிவு 6ன் கீழ் இந்த அறிவிக்கை பொருந்தாது என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. மேலும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பிலும் ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று (டிசம்பர் 11) “ தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம். அது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பிரிப்புக்கு உட்பட்ட ஒன்பது மாவட்டங்களிலும் இன்னும் மூன்று மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தாலும் அதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனை தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதுதான் இப்போது கூடுதல் விவாதமாக நடந்து வருகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக வழக்கறிஞர் வில்சன்,

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தான் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு சார்பில் 2016 அக்டோபரில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிக்கையில் 1991 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் நடைபெறும் என்று, உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தொடுத்த அவதூறு வழக்கின் போது தமிழக அரசின் கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா கூறியிருக்கிறார்.

ஆனால் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் முகுல் ரோத்தகி 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தான் இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். ஒரே விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் ஒரு நிலைப்பாடும் உச்சநீதிமன்றத்தில் ஒரு நிலைப்பாடும் தமிழக அரசு எடுத்திருக்கிறது. மேலும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி டிலிமிடேஷன் செய்யப்பட்டதா என்பதை அரசு உச்சநீதிமன்றத்தில் எங்கும் சொல்லவில்லை. மேலும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி டீ லிமிடேஷன் கமிஷன் தான் மறு வரையறை செய்ய வேண்டும். அது இன்னும் அந்தப் பணியைச் செய்யவே இல்லை. இந்த நிலையில் எப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியும்? உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த தேர்தலை இப்போது நடத்த முடியாது” என்று கூறிய வில்சன் மேலும்,

“உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை பார்க்காமலேயே அரசு தரப்பினர் பொத்தாம் பொதுவாக பேசி வருகிறார்கள். உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்த வாய்ப்பில்லை”என்றும் கூறியிருக்கிறார்.

இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் நேற்றே சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் டெல்லி சென்றுவிட்டார். இன்று டெல்லியில் அவர் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

”உச்சநீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்றும் 9 மாவட்டங்களில் வார்டு வரையறை செய்த பிறகு மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை வெளியிட்டு மனுத்தாக்கல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திமுக தேர்தலை நடத்தக் கூடாது என்பதற்காகவே உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் என்று வழக்கு தொடுத்து வருகிறது.

இன்று உச்ச நீதிமன்றத்தில் 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் நடத்துகிறார்கள் அது தவறு என்று ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறது திமுக. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தான் இட ஒதுக்கீடு வரையறை செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அரசின் ஒரிஜினல் ஆவணங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதை ஏற்றுக் கொண்டுதான் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது”என்று கூறிய அமைச்சர் சண்முகத்திடம்,”தமிழக அரசு தாக்கல் செய்த ஆவணங்கள் புதியதாக உருவாக்கப்பட்டவை (fabricated) என்று திமுக தரப்பில் சொல்லப்படுகிறதே? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சி.வி சண்முகம், “எதிர்க்கட்சி வழக்கறிஞர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அது நிரூபிக்கப்பட்டதா? 2016 முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்ட ஆவணம் தான் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

திமுக தேர்தலை எதிர்கொள்ள பயந்து கொண்டு பல்வேறு வழிகளை நாடி ஏற்படுத்த முயல்கிறது. ஆனால் அதிமுகவிற்கு எந்தக் குழப்பமும் இல்லை. மக்களுக்கும் எந்த குழப்பமும் இல்லை. திமுகவிற்கு இந்த தீர்ப்பு சம்மட்டி அடி”என்கிறார்.

அமைச்சர் சி.வி.சண்முகம் சொன்னபடி 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படிதான் தேர்தல் நடைபெறுகிறதா என்பது குறித்து அடுத்த சர்ச்சை தொடங்கியுள்ளது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *