சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நடந்த விபத்திற்கு ஓட்டுநரின் தவறு தான் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மாலை 4.25 மணி அளவில் பராமரிப்பு பணி முடிந்த பிறகு பேசின்பிரிட்ஜ் பணிமனையிலிருந்து தாம்பரம் வரை செல்லும் ரயில் எடுத்து வரப்பட்டது. இந்த ரயில் கடற்கரை ரயில் நிலையத்தின் நடைமேடை மீதிருந்த கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
நல்வாய்ப்பாக அன்றைய தினம் பயணிகள் யாரும் அந்த ரயிலில் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த விபத்து தொடர்பாக விளக்கம் அளித்திருந்த தெற்கு ரயில்வே, இவ்விபத்து குறித்து விசாரணை நடத்தத் தனிக் குழு அமைக்கப்படும். தொழில்நுட்ப கோளாறா அல்லது ஓட்டுநரின் கவனக் குறைவு விபத்துக்குக் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஓட்டுநரின் தவறால் தான் விபத்து ஏற்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரயில் ஓட்டுநர் பவித்ரன் பிரேக் என நினைத்து ஆக்ஸிலேட்டரை இயக்கியதால் தான் ரயில் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது என்று ரயில்வே போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சூழலில் ரயில்வே துறையின் விசாரணை அறிக்கைக்கு பிறகு ஓட்டுநர் பவித்ரன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஓட்டுநர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
**பிரியா**