�தெருவில் வசிப்பவர் பெயரில் சுவிஸ் வங்கியில் ரூ.30,000 கோடி – நீடிக்கும் மர்மம்!

public

பாகிஸ்தானில் தெருவில் வசிக்கும் ஒருவரது பெயரில் சுவிஸ் வங்கியில் நான்கு பில்லியன் டாலர் – இந்திய மதிப்பில் 30,000 கோடி ரூபாய் இருப்பதாக வெளியான செய்தியைக் கேட்டு அவரே அதிர்ச்சியடைந்துள்ளார்.
பாகிஸ்தானிலுள்ள குல்பர்க் லாகூர் என்ற இடத்தில், சாக்கடைகள் ஓடும் பகுதியில் வாழ்ந்து வருகிறார் ஜாவேத். அந்தச் சேரிப்பகுதியில் அவர் வாழ்ந்த வீட்டைக்கூட அரசு இடித்துவிட, தன் தாயுடன் அதே இடத்தில் ஒரு கூரையின் கீழ் வாழ்கிறார். அவரின் பெயரில் பிரபல சுவிஸ் வங்கியான கிரெடிட் சூயிஸ் வங்கியில் இரண்டு வங்கிக்கணக்குகள் உள்ளன. ஆனால், ஜாவேதுக்கு பாகிஸ்தானில் எந்த வங்கிக்கணக்கும் கிடையாது. அவர் இதுவரை பாகிஸ்தானை விட்டு வெளியேறி எந்த வெளிநாட்டுக்கும் சென்றதும் கிடையாது.
இந்த நிலையில் 2003ஆம் ஆண்டு, அவரது 26 வயதில், அவர் பெயரில் கிரெடிட் சூயிஸ் வங்கியில் ஒரு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு பாஸ்போர்ட் கூட கிடையாது. அதன்பின் 2005ஆம் ஆண்டு பாஸ்போர்ட் ஒன்றுக்கு விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார். ஆனால், அவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் மீண்டும் அவர் பெயரில் அந்த வங்கியில் இரண்டாவது கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை ஜாவேதின் வங்கிக்கணக்குகளில் ரூ.30,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளன.
யாரோ ஒருவர் ஜாவேத் பெயரில் கணக்குகள் தொடங்கி பணத்தை போட்டு வந்துள்ளார் என்ற செய்தியை ஜெர்மன் செய்தித்தாள் ஒன்று வெளியிட்டதையடுத்து விசாரணைகள் தொடங்க தற்போது இரண்டு கணக்குகளும் மூடப்பட்டுள்ளன.
தன் பெயரில் இவ்வளவு பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் செய்தி கேட்டு ஜாவேத் அதிர்ச்சியடைந்துள்ளார். அவரது தாய் பர்வீன் அக்தரோ, “ஜாவேதுக்கு சாப்பாட்டுக்கே வழியில்லை, இதில் அவனது மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். அவளுக்கான செலவுகளையே ஜாவேதின் மாமனார் வீட்டில்தான் கவனித்துக்கொள்கிறார்கள். அப்படி எங்களுக்கு அவ்வளவு பணம் இருந்தால், நாங்களும் அவர்களைப் போல பெரிய மாளிகையில் வாழ மாட்டோமா என தூரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் வீட்டைக் காட்டுகிறார்” பர்வீன்.
1977ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்தவர் ஜாவேத். அந்த நாளில் முகமது ஜாவேத் என்ற பெயரில் பிறந்தவர் இவர் மட்டும்தான். அத்துடன், சுவிஸ் வங்கியில் கணக்குத் தொடங்க பாஸ்போர்ட் தேவை. அப்படியிருக்க, அவரது அடையாளங்கள் எப்படி திருடப்பட்டன என்பது மர்மமாகவே நீடிக்கிறது.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *