30 சதவிகிதம் பேருந்துகள் மட்டுமே இயங்கியதால் பொதுமக்கள் அவதி!

public

போக்குவரத்துத் துறை ஊழியர்களின் 13வது ஊதிய உயர்வு ஒப்பந்தம், ஓய்வுபெற்ற ஊழியர்களின் நிலுவையிலுள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துத் துறை ஊழியர்கள் மே 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில் 30 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம், ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் பணியிலுள்ள ஊழியர்களின் நிலுவையிலுள்ள பணப்பலனை தமிழக அரசு உடனடியாக அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, கடந்த மே 12, 13, தேதிகளில் போக்குவரத்துத் துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, நேற்று மே 14ஆம் தேதி சென்னையில் உள்ள பல்லவன் அலுவலகத்தில் மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் போக்குவரத்துத் துறை தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ஊழியர்கள் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிலுவை தொகைக்காக, 750 கோடி ரூபாய் ஒதுக்குவதாகவும் முதல் கட்டமாக ரூ.500 கோடி தருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார். அதை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்க மறுத்து விட்டனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் போக்குவரத்துதுறை தொழிற்சங்க பிரதிநிதிகள் திட்டமிட்டபடி போக்குவரத்துத் துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனாலும், நேற்று மாலையே தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் பேருந்தை இயக்காமல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், வெளியூர் சென்ற பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், இன்று மே 15ஆம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தபடி வேலைநிறுத்தம் நடைபெற்றது. இன்று சென்னையில் 30 சதவிகிதம் அளவே அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் உள்ள பாரிமுனை, அடையாறு, மந்தைவெளி, செண்ட்ரல், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் உள்ள பணிமனைகளில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தன. போக்குவரத்து ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பெரும்பாலான ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதில் ஆளும் கட்சியான அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தின் ஒரு பிரிவினர் மட்டுமே பங்கேற்கவில்லை.

எப்போதும் பேருந்துகள் சென்றபடியே இருக்கும் சென்னை அண்ணா சாலையில் 15 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து சென்றாலே அது அதிசயம் என்பது போன்ற நிலையே இருந்தது. சுட்டெரித்த வெயிலில் பொதுமக்கள் பேருந்துகளுக்காக காத்திருக்காமல் ஆட்டோக்களைத் தேடிப் போனார்கள். சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்குமே இன்று நல்ல வசூல்தான். சென்னை கடற்கரை – வேளச்சேரி ஆகிய ரயில் தடங்களில் சிறப்பு ரயில் இயக்கபட்டாலும் கூட்டம் அதிகம் காணப்படவில்லை. ஆனால், செங்கல்பட்டு – தாம்பரம் – சென்னை கடற்கரை வழித் தடத்தில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அதே போல, சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் வழக்கத்தைவிட கூட்டம் பெரிய அளவில் காணப்பட்டது. ஆட்டோக்கள் நிரம்பி வழிந்ததால் செண்ட்ரல் அருகே போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது.

பேருந்துகள் குறைவாகவே இயக்கப்பட்டதால் பேருந்துகள் பயணிகளால் நிரம்பி வழிந்தது. அதே போல, காலை முதல் இயக்கப்பட்ட பேருந்துகளும் ஷிஃப் முடிந்த பிறகு ஓட்டுநர்கள் பணிமனைகளில் நிறுத்திவிட்டு சென்றார்கள். பொதுமக்களின் வசதிக்காக மினி பஸ்களும், தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

செண்ட்ரல் ரயில் நிலைத்திலிருந்து வந்த ஆம்பூரைச் சேர்ந்த கணேசன் நம்மிடம் கூறுகையில், இந்த வேலை நிறுத்தத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் இல்லை. ஏனென்றால், மாணவர்களுக்கு லீவு. அதே போல, வெயில் என்பதால் பெரிய அளவில் மக்கள் வெளியே வரவில்லை. அப்படி வெளியே வந்தவர்களும் பேருந்துகளுக்காக காத்திருக்காமல் ஆட்டோக்களில் சென்றுகொண்டிருக்கிறார்கள். பேருந்துகள் இயங்காவிட்டாலும் இந்த ஸ்டிரைக்கை ஆட்டோக்கள்தான் முறியடித்துள்ளது என்று கூறினார்.

சென்னை பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் அதிமுக சார்பு சங்கத்தில் உள்ள பத்மநாபன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரிடம் பேசினோம். அப்பொது அவர்கள் கூறியதாவது, 33 சதவிகித பேருந்துகளே ஓடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது உள்ள ஆளும் கட்சியின் தொழிற்சங்கம் ஓ.பி.எஸ். அணி, எடப்பாடி அணி என்று இரண்டாக பிரிந்துள்ளது. அதனால், தான் இந்த வேலை நிறுத்தம் வெற்றிபெற்றுள்ளது. இந்த இரு அணிகளும் ஒன்றாக இருந்திருத்தால், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை 90 சதவிகிதம் முறியடித்திருப்பார்கள். மேலும், 30 சதவிகித ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மட்டுமே விரும்பி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மற்றவர்கள் எல்லாம் பயத்தின் காரணமாகவே வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலில் போக்குவரத்துத் துறை நட்டத்தில் இயங்குவதைத் தடுக்க வேண்டுமென்றால், ஆண்டுக்கு ஒரு முறை பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதே போல, இந்த பிரச்னையில், மற்ற தொழிற்சங்கங்கள் வலியுறுத்தும் ஊழியர்களின் கோரிக்கைகள் உண்மைதான் என்றாலும், ஒரேயடியாக அரசாங்கத்தை நெறுக்குவது சரியா என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்

சென்னை பல்லவன் இல்லத்தில் வெளியே வந்த ஆளும் கட்சி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஊழியர் ஒருவரிடம் பேசினோம். அவர் கூறுகையில், உண்மையில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் 75 சதவிகிதம் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. பொதுவாக ஒரு வேலை நிறுத்தம் 45 சதவிகிதம் நடந்தாலே அதுவே பெரிய வெற்றிதான். ஆனால், இது 75 சதவிகிதம் அளவுக்கு உள்ளது. தொழிற்சங்கத்தில் ஓ.பி.எஸ். அணி, எடப்பாடி பழனிசாமி அணி என்று எதுவுமில்லை. இதுவரை வேலை செய்யாமல் இருந்த ஆளும் கட்சி தொழிற்சங்க ஊழியர்களே இப்போது பேருந்துகளை இயக்குகிறார்கள். இந்த நாட்களிலாவது அவர்கள் வேலை செய்யட்டும் என்று கூறினார்.

இதனிடையே பல்லவன் இல்லத்துக்கு அருகில் உள்ள செண்ட்ரல் பணிமனையில் மோகன்ராஜ் என்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் பணிமனையின் வாயிலில் போர்வையை விரித்துப் படுத்து மறியல் செய்தார். அங்கே பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த காவலர்கள் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், அவர் முரண்டு பிடிக்கவே போலிசார் அவரை பலவந்தமாக தூக்கிச் சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இதையடுத்து, பல்லவன் இல்லத்தில் இருந்த தகவல் தொடர்பு அதிகாரி (பி.ஆர்.ஓ.)மாய குமரேசனிடம் பேசினோம். அவர் கூறுகையில் இதுவரை 30 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. வெளியூரிலிருந்து இதுவரை 60 ஆம்னி பஸ்கள், மினி பஸ்கள் வந்திருப்பதாகக் கூறினார். மேலும், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக தினக்கூலி ஓட்டுநர்/நடத்துனர் ஆக பணியாற்ற கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் அசல் சான்றிதழ்களுடன் அருகில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக கிளையின் மேலாளரை உடனடியாக நேரில் அணுகினால் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்படும். அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என்றார்கள்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் சென்னை புறநகர் பேருந்துகள் பெரும்பாலும் அந்ததந்த பணிமனைக்கு அனுப்பாமல் அங்கிருந்தே இயக்கப்படுகிறது. பணிமனைக்கு அனுப்பினால் ஏதேனும் பிரச்னை ஏற்படாலாம் என்று அச்சப்படுவதாக பணிமனை வாகனப் பதிவாளர்கள் கூறுகின்றனர்.

கோயம்பேட்டில் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அடிக்கடி நிறைய பேருந்துகள் உள்ள ஊர்களுக்கு கூட குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன. இதனால், மக்கள் பேருந்தில் நெரிசலில் ஏறிச் செல்கின்றனர். சென்னை நகரில் பேருந்துகள் குறைவாக இயக்கப்பட்டதால், நகரின் உள்ளடங்கிய சில இடங்களில் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். மையப் பகுதியில் உள்ள மக்கள் அந்தளவுக்கு பாதிக்கப்படவில்லை. இதே நிலைதான் தமிழகத்தின் காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கங்களிலும் நிலவுகிறது.

சென்னையில் பேருந்துகள் இயக்கப்படாததால், பெரிய அளவில் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று கூற முடியாது. ஏனென்றால் மக்கள் உடனடியாக ஆட்டோக்களில் பயணம் செய்ய தயாராகிவிட்டார்கள். ஆனால், இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 2 நாட்களில் தமிழகம் ஸ்தம்பிக்கும் நிலைவரும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *