மீண்டும் உயரும் கொரோனா!

public

இந்தியளவில் கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நாட்டில் ஒமிக்ரான் எனும் புதிய திரிபு பரவ ஆரம்பித்தது முதல் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டிய நிலையில், கடந்த நான்கு நாட்களாக பாதிப்பு இறங்குமுகத்தில் காணப்பட்டது. நேற்று முன்தினம் 2,55,874 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அந்த எண்ணிக்கை 2,85,914 ஆக அதிகரித்துள்ளது. முந்தைய நாள் பாதிப்புடன் ஒப்பிடுகையில் இன்றைய பாதிப்பு எண்ணிக்கை 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இம்மாதம் 21ஆம் தேதி 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஒரே நாளில் கொரோனாவால் 665 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 91 ஆயிரத்து 127 ஆக உள்ளது. நாட்டில் தற்போது 22 லட்சத்து 23 ஆயிரத்து 018 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூன்றாவது அலையில் ஒருநல்ல விஷயம் என்னவென்றால், தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படுவதில்லை. அதனுடன், இரண்டு மூன்று நாட்களிலேயே பாதிக்கப்பட்டவர்கள் குணமடைகின்றனர். அதனால்தான், தினசரி கொரோனா பாசிட்டிவிட்டி விகிதம் 16.16% ஆக உள்ள நிலையில், குணமடைவோரின் விகிதம் 93.23 சதவிகிதமாக உள்ளது.

அதேசமயம் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை மொத்தம் 163.58 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

**தமிழ்நாடு**

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளது. நேற்று முன் தினம் 30,215 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று அந்த எண்ணிக்கை 30,055 ஆக குறைந்துள்ளது.

நேற்று 1 லட்சத்து 48 ஆயிரத்து 469 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 30 ஆயிரத்து 055 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்து 94 ஆயிரத்து 260 ஆக உள்ளது. 2 லட்சத்து 11 ஆயிரத்து 270 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 25 ஆயிரத்து 221 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிற நிலையில், அதற்கு மாறாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மாநிலத்தில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி, தினசரி இறப்பு 8 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை ஜனவரி 15 ஆம் தேதியில் 19 ஆக அதிகரித்தது. இப்படியாக அதிகரித்து, நேற்று 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 312 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்த 48 பேரில் குறைந்தது 31 பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், எட்டு பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 48 இறப்புகளில் 21 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர், மதுரையில் தலா நான்கு பேர்,கோவை மற்றும் சேலத்தில் தலா இரண்டு பேர் மற்றும் 11 மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

**கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்**

தினசரி பாதிப்பு தொடர்ந்து 30 ஆயிரத்திற்கு மேல் இருந்து வருகையில், தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 2356 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக சென்னையில் 1868 பகுதிகளும், செங்கல்பட்டில் 121 பகுதிகளும், தஞ்சாவூரில் 62 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. அதேசமயம், கள்ளக்குறிச்சி, கரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், விழுப்புரம், மயிலாடுதுறை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *