வேலூர் : தேர்தலை நடத்த ஏ.சி. சண்முகம் டெல்லியில் மனு!

public

ரத்து செய்யப்பட்ட வேலூர் தேர்தலை மீண்டும் நடத்துமாறு வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ.சி. சண்முகம் இன்று (ஏப்ரல் 25) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை சந்தித்து முறையிட்டார்.

வேலூர் தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்ட நிலையில், தேர்தல் ஏப்ரல் 16 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. கடந்த மார்ச் 30, ஏப்ரல் 1 தேதிகளில் துரைமுருகன் வீடு, மற்றும் சில திமுகவினரின் வீடுகளில் வருமான வரி ரெய்டு நடத்தப்பட்டது. இதில் துரைமுருகனின் நண்பரான பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் இருந்து சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த 3ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் வருமான வரித் துறை அறிக்கை சமர்ப்பித்த நிலையில், வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தல் செலவின உதவி அலுவலர் சிலுப்பன் காட்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனுவில் குறிப்பிட்டதைக் காட்டிலும் அதிக பணம் அவரது இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனையில் பிடிபட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீது காட்பாடி காவல் துறையினர் ஏப்ரல் 10 ஆம் தேதியன்று வழக்குப் பதிவு செய்தனர். இதையே காரணமாக வைத்து ஏப்ரல் 16 ஆம் தேதி, ‘வேலூர் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது’ என்று அறிவித்தது தேர்தல் ஆணையம். வேலூர் தேர்தல் ரத்து நடவடிக்கை சரியானது அல்ல, பணப்பட்டுவாடா புகார்களுக்கு உள்ளான திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்துவிட்டு தேர்தலை நடத்தியிருக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமாரும் கருத்து தெரிவித்திருந்தார்.

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர் சுகுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஏப்ரல் 18 ஆம் தேதி தான் சென்னையில் வாக்களிக்கும்போது தன் தொகுதி தேர்தல் ரத்தாகிவிட்டதே என்ற வருத்தத்தில் கண்ணீர் விட்டு அழுத ஏ.சி. சண்முகம், வேலுர் தேர்தலை எப்படியாவது 4 தொகுதி இடைத் தேர்தலோடு சேர்த்து நடத்திட வேண்டும் என்று விடா முயற்சியில் இறங்கினார்.

நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான மனு தாக்கல் 22 ஆம் தேதி தொடங்கிவிட்ட சூழலில், வேலுர் அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் இன்று டெல்லி சென்று நேரடியாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை சந்தித்து, ‘ ஒருவர் செய்த தவறுக்காக மற்ற வேட்பாளர்களும், மக்களும் பாதிக்கப்படும் வகையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. எனவே மீண்டும் வேலூர் தேர்தலை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை மனுவை அளித்தார்.

“வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்வதற்கு முன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனைத்துக் கட்சிகளின் கருத்தைக் கேட்டறிந்திருக்க வேண்டும். அந்தத் தொகுதியில் போட்டியிடும் முக்கியக் கட்சியான அதிமுகவின் கருத்தை கேட்டறிந்திருக்க வேண்டும். ஆனால் கேட்கவில்லை. மேலும் புதுமையான முறையில் வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்துவிட்டு, அத்தொகுதிக்கு உட்பட்ட இரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களை நடத்தியிருக்கிறார்கள்.

தேர்தல் நடவடிக்கைகளில் குற்றம் இழைத்தோரை தண்டிப்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அப்பாவி வாக்காளர்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்படக் கூடாது. எனவே மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக வேலூர் தொகுதிக்கு மறு தேர்தல் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடத்திட வேண்டும்” என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த மனுவில் ஏ.சி. சண்முகத்தோடு முக்தார் அப்பாஸ் நக்வி, ஓம் பதக்., நீரஜ் ஆகிய பாஜகவினரும் கையெழுத்திட்டுள்ளனர்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *