முதல் பெண் மருத்துவர் ஆனந்திக்கு டூடுள் வெளியிட்ட கூகுள்!

public

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்தி கோபால் ஜோஷியின் 153ஆவது பிறந்த நாளையொட்டி அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் இன்று (மார்ச் 31) கூகுள் டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்குப் படிப்பு என்பது சர்வசாதாரணமாக உள்ளது. ஆனால் 1885ஆம் ஆண்டுகளில் பெண்கள் படிப்பது என்பது சுலபமானது அல்ல. அதுவும் மருத்துவப்‌ படிப்பென்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அமெரிக்கா போன்ற படித்த நாடுகளில்கூட, பெண் கல்வி பரவலாக அங்கீகரிக்கப்படாத காலகட்டம் அது. அப்படிப்பட்ட காலகட்டத்திலும் அமெரிக்காவில் மருத்துவருக்குப் படித்து பட்டம் பெற்றார் இந்தியாவைச் சேர்ந்த ஆனந்தி கோபால் ஜோஷி.

ஆனந்தி மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் 1865ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய 9ஆவது வயதில் இவருக்கும் கோபால்ராவ் ஜோஷி என்பவருக்கும் திருமணம் நடந்தது. கோபால்ராவ் முற்போக்குச் சிந்தனையாளராகவும் பெண்கல்விக்கு ஆதரவாளராகவும் இருந்ததால் தன்னுடைய மனைவியான ஆனந்தி கல்வி கற்க வேண்டும் என எண்ணினார். ஆனந்திக்குப் படிப்பிலிருந்த ஆர்வத்தைக் கண்டுகொண்ட அவர் கல்வி பயிலவும் ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ளவும் கோபால்ராவ் உதவினார்.

சில வருடங்கள் செல்ல ஆனந்திக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த 10 நாட்களில் மருத்துவ வசதியில்லாததால் குழந்தை இறந்து போனது. குழந்தையின் மரணம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தாம் ஒரு மருத்துவராக வேண்டுமென்ற எண்ணம் அவருக்குள் தீவிரமாக எழுந்தது. கோபால்ராவும் ஆனந்தி மருத்துவம் படிப்பதற்கு ஊக்கமளித்தார். அமெரிக்காவில் மருத்துவம் படிப்பதற்குத் தேவையான நிதியையும் திரட்டி, அவரை அமெரிக்காவுக்கு மருத்துவம் படிக்க அனுப்பிவைத்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 1883ஆம் ஆண்டு வந்த ஆனந்தி பென்சில்வேனியாவில் உள்ள பெண்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். உலகிலேயே பெண்களுக்கான மருத்துவ படிப்பு முதன்முதலில் அங்குதான் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆனந்தி தன்னுடைய 21ஆம் வயதில் பென்சில்வேனியா பெண்கள் மருத்துவக் கல்லூரியில் 1886ஆம் ஆண்டு மருத்துவர் பட்டம் பெற்றார்.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையோடு அதே ஆண்டில் இந்தியா திருப்பிய அவரைக் கவுரவிக்கும் விதமாக, கோலாப்பூர் உள்ள ஆல்பர்ட் எட்வர்டு மருத்துவமனையில் பெண்கள் பிரிவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கும்போதே அங்கு நிலவிய கடும்குளிர் மற்றும் உணவுகளால், ஆனந்தியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, காசநோய் அவரைத் தாக்கியிருந்தது.

இந்தியாவில் பெண் மருத்துவர்களின் அத்தியாவசியத்தை உணர்ந்தும் விதமாகப் பெண்களுக்காக இந்தியாவில் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கவேண்டும் என்பது ஆனந்தியின் பெரும் கனவாக இருந்தது.

ஆனால் அவருடைய கனவு நனவாகாமலேயே 1887ஆம் ஆண்டு தனது 22ஆவது வயது நிறைவடைவதற்குள் காச நோயால் ஆனந்தி காலமானார். இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான ஆனந்தியின் 153ஆவது பிறந்த நாளையொட்டிக் கூகுள் இன்று டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ஓவியர் கஷ்மீரா சரோடு இந்த டூடுளை வரைந்துள்ளார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *