போராட்டத்தில் பங்கேற்பு: கன்னியாஸ்திரீக்குத் தடை!

public

கோட்டயம் கன்னியாஸ்திரீக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்ட காரணத்துக்காக, வயநாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரீ ஒருவர் தேவாலய நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரீ ஒருவர், பஞ்சாப்பிலுள்ள ஜலந்தர் மறை மாவட்டப் பேராயராக இருந்துவந்த பிராங்கோ முலக்கல் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக கேரளக் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த செப்டம்பர் 9ஆம் தேதியன்று கொச்சி நீதிமன்றம் அருகே போராட்டத்தைத் தொடங்கினர் ஐந்து கன்னியாஸ்திரீகள். இவர்களுக்குக் கேரள மாநிலம் முழுவதுமுள்ள பெரும்பாலான கன்னியாஸ்திரீகள் ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தைத் தொடங்கிய கன்னியாஸ்திரீகளில் ஒருவர், வயநாட்டிலுள்ள மானந்தவாடி டயோசீஸைச் சேர்ந்த லூசி கலப்புரா. இவர், அங்குள்ள தேவாலய நடவடிக்கைகளில் பங்குகொள்ளத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 21) பேராயர் பிராங்கோ முலக்கல்லைக் கைது செய்வதாக அறிவித்தது கேரள காவல் துறை. கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை இன்று மதியம் வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதவழிபாடுகளில் பங்கேற்பது, பைபிள் கற்பிப்பது, மதச் சடங்குகளில் கலந்துகொள்வது உட்படப் பல நடவடிக்கைகளை மானந்தவாடி டயோசீஸைச் சேர்ந்த கன்னியாஸ்திரீ லூசியால் மேற்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவாலயங்கள் தங்களது தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டுமெனவும், கன்னியாஸ்திரீகளுக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதாகவும், போராட்டத்தின்போது அவர் கருத்து வெளியிட்டதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

நேற்று (செப்டம்பர் 23) காலை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பைபிள் போதிக்கும் வகுப்பெடுக்கச் சென்றபோதே, இந்த தடை குறித்து லூசிக்குத் தெரிய வந்திருக்கிறது. இதன் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த லூசி, தான் தேவாலயத்துக்கு எதிராக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை எனவும், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரீக்கு ஆதரவாக மட்டுமே பேசியதாகவும் கூறினார். தனக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து, அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதுவும் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

லூசி சார்ந்துள்ள செயின்ட் மேரி தேவாலய நிர்வாகம் இதை மறுத்துள்ளது. கன்னியாஸ்திரீ லூசியின் சமீபகால விமர்சனங்களைத் தேவாலயத்துக்கு வரும் பக்தர்கள் விரும்பவில்லை எனவும், இதுகுறித்து பங்கு தந்தை ஸ்டீபன் கோட்டக்கல்லுக்குத் தெரிவிக்கப்பட்டது எனவும், லூசியின் கிறிஸ்தவம் குறித்த பயிற்சி முறைகளில் இங்குவரும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், அத்தேவாலயம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அவரது கத்தோலிக்க நம்பிக்கைகளைத் தொடர்வதற்கோ, கன்னியாஸ்திரீயாக இருப்பதற்கோ, எந்தவிதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்று செயின்ட் மேரி தேவாலயம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *