^புதிய தடத்தை உருவாக்கிய படைப்பாளி!

public

ந.முத்துசாமியின் பிறந்த நாள் (மே 25) சிறப்புப் பதிவு

ஒவ்வொரு எழுத்தாளரின் ஆளுமை மலர்ச்சிக்கேற்ப வித்தியாசமான படைப்பாக்கங்கள் அவர்கள் சார்ந்த மொழிக்கு வந்து சேர்கின்றன. சென்ற நூற்றாண்டிலிருந்தே படைப்பு வெளிப்பாடுகள் பெரிதும் இதழ்கள் வாயிலாகவே நிகழ்ந்துவருகின்றன. இந்தத் தொடரோட்டத்தில் ‘எழுத்து’ பத்திரிகை மூலம் அறிமுகமானவர் ந.முத்துசாமி. நவீனத் தமிழ் நாடக வரலாற்றில் அழுத்தமான முத்திரை பதித்த இவர், தன் சிறுகதைகளால் தமிழ்க் கதைசொல்லல் மரபில் புதுத்தடத்தை உருவாக்கியவர்.

முத்துசாமி இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இதில் தேர்தெடுக்கப்பட்ட 14 சிறுகதைகள் அடங்கிய ‘நீர்மை’ என்ற முதல் தொகுதி 1984ஆம் ஆண்டு வெளிவந்தது. முத்துசாமி 1936ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள புஞ்சை என்னும் கிராமத்தில் மே 25ஆம் தேதி பிறந்தார்.

அந்த கிராமத்துச் சூழல் கட்டமைத்த மனவோட்டம் சார்ந்து இயங்குபவர். தன்னை அறிந்து கொள்ளும் தேடலாகவே எழுத்து இவருக்கு அமைந்துள்ளது.

தமிழ் நாட்டின் நவீன நாடகச் செயல்பாடுகள் கூத்துப்பட்டறையில் மையம் கொண்டிருக்கவில்லை அல்லது கூத்துப்பட்டறையில் தொடங்கி, கூத்துப்பட்டறையோடு முடிந்துவிடவும் இல்லை. அவை பன்முகத்தன்மை கொண்டு பல மையங்களில் விரிந்து படர்ந்திருக்கிறது. எனினும் கூத்துப்பட்டறையும், ந.முத்துசாமியும் இல்லாமல் தமிழ்நாட்டின் நவீன நாடக வரலாற்றினை எழுத இயலாது.

டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் இருந்துதான் இந்தியா முழுவதும் நாடக இயக்கம் தொடங்குகிறது. ஆனால், கூத்துப்பட்டறை தேசிய நாடகப் பள்ளியின் உந்துதலால் உண்டான ஒன்றில்லை. அது ‘எழுத்து’ காலத்திலிருந்தே தோன்றுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ந.முத்துசாமி எழுதிய முதல் நாடகம் ‘காலம் காலமாக’. நடை என்னும் சிறுபத்திரிக்கையில் 1968இல் வந்தது. அதன் மூலம், அதுவரைக்கும் தமிழ்ச் சூழலில் இருந்து வந்த நாடக மரபில் ஒரு பெரும் திருப்பத்தை நிகழ்த்தினார். “நாடகங்கள் அர்த்தத்தைச் சார்ந்து இருக்கக் கூடாது. அனுபவத்தைச் சார்ந்து இருக்க வேண்டும்” என்று அவர் அடிக்கடி சொல்லுவார்.

“எழுத்துக் கலைஞனுக்கு நாடகம் என்பது சொல்லை நிகழ்த்திக் காட்டுவது. எழுதி என் மனதில் தோன்றுகிறவற்றை அபிநயித்துக் காட்டி வெளிப்படுத்தப் பார்க்கிற சிரமங்களே என் சொற்கள். எழுதப்பட்டு யுகம் யுகமாய்ப் படிக்கப்பட வேண்டும் நாடகம் என்ற அபிப்ராயம் எனக்கில்லை. அது எப்போதும் நிகழ்காலம் சார்ந்ததாக இருக்க வேண்டும். நேரே மேடைக்குப் போய் என் மனநிலையை நடிகரின் உடலில் ஏற்படுத்திக்காட்ட முடிந்தால் நான் சொல்லை அறவே ஒதுக்கிவிடுவேன்” என்பது நாடகம் பற்றிய ந.முத்துசாமியின் முக்கியமான கூற்று.

‘கசடதபற’, ‘நடை’ போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நீர்மை உட்பட 5 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய ‘ந. முத்துசாமி கட்டுரைகள்’ எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள் (இசை, நடனம், ஓவியம், சிற்பம்) என்னும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2012ஆம் ஆண்டில் இவரது கலைச்சேவையை பாராட்டும் வண்ணம் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கிப் பெருமைப் படுத்தியுள்ளது.

அவருடைய பிறந்தநாளை ஒட்டி மின்னம்பலத்தில் சென்ற ஆண்டு வெளியான அவருடைய பேட்டியை இங்கே மீள் பிரசுரம் செய்கிறோம். [பிரபல நடிகர்களை உருவாக்கிய ந.முத்துசாமி :சிறப்புப் பேட்டி](https://minnambalam.com/k/2017/05/25/1495650625)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *