மணிப்பூர் மாநிலம் ஒரு வருடத்திற்கும் மேலாக வன்முறையால் பற்றி எரிகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமுதாய மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவது பற்றி அம்மாநில நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதனை கண்டித்து அங்குள்ள குக்கி பழங்குடியின மக்கள் கடந்த ஆண்டு மே மாதம் 3-ஆம் தேதி மாநிலம் முழுவதும் பேரணி நடத்தினர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் வெடித்தது.
ஓராண்டாக மணிப்பூரில் நடந்து வரும் கலவரம் தீர்ந்தபாடில்லை. தொடர்ந்து அங்கு தினமும் வன்முறை நடைபெற்று வருகிறது.
குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணமாக மெய்தி சமூக ஆண்கள் அழைத்துச் சென்ற வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது.
கடந்த ஓர் ஆண்டில் நடைபெற்ற வன்முறையில் மட்டும் 221 பேர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “மணிப்பூர் மாநிலம் ஒரு வருடத்திற்கு முன்பாக எரியத் தொடங்கியது. அங்கு மனிதநேயம் அழிந்துவிட்டது.
மத்தியில் ஆளும் அக்கறையற்ற மோடி அரசும், திறமையற்ற மாநில பாஜக அரசும் இணைந்து மாநிலத்தை இரண்டாக பிரித்துள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் பிரதமர் மோடி இதுவரை தனது காலடியை எடுத்து வைக்கவில்லை. இது அவரது தகுதியின்மையையும் அலட்சியத்தையும் அம்பலப்படுத்துகிறது. அவரது ஈகோ ஒரு அழகான மாநிலத்தின் சமூக கட்டமைப்பை சேதப்படுத்தியுள்ளது.
தங்களது வாழ்க்கையை பாஜக அரசு இப்படி பரிதாபகரமாக மாற்றியது பற்றி அங்குள்ள மக்கள் அனைவரும் உணர்வார்கள்.
மணிப்பூரில் தாங்கள் அழித்த எண்ணற்ற உயிர்கள் பற்றி மோடிக்கும் அவரது அரசுக்கும் கொஞ்சம் கூட அனுதாபம் இல்லை என்பதை இந்திய மக்கள் இப்போது உணர்வார்கள்.
இதுவரை 220-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் இன்னும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டனர். ஆனால், பிரதமர் மோடி இதுபற்றி பேசாமல் மெளனம் காத்தார்.
நமது பாதுகாப்பு வீரர்கள் மணிப்பூரில் மரணம் அடைந்துள்ளனர். இரு சமூகத்தை சேர்ந்த போலீஸ் வீரர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். ஆயுதங்களும் வெடி பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன.
கடந்த ஜனவரி மாதம் மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கொடூரமாக அடித்து சித்தரவதை செய்யப்பட்டார். மணிப்பூரில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
வன்முறையால் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பாஜக அரசால் மணிப்பூரில் இயல்பு நிலையும் சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது – எதற்கு தெரியுமா?
முதுபெரும் பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் மறைவு: தலைவர்கள் இரங்கல்!