பணமதிப்பழிப்பு: முற்றுகையிடும் ஆபத்துகள் – பகுதி 1

public

பேராசிரியர் டி. நரசிம்ம ரெட்டி

(பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட ஓராண்டு நிறைவையொட்டி வெளியாகும் மினி தொடர்)

‘ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தின் கோரப்பிடியிலிருந்து நாடு விடுபடுவதற்காக’ 2016, 8ஆம் தேதி நவம்பர் மாலை தனது அரசு அப்போது புழக்கத்தில் இருந்துவரும் ஐந்நூறு ரூபாய் நோட்டு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பணமதிப்பு நீக்கம் செய்ய முடிவு செய்துவிட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் அறிவித்தார். மேலும் அவர், “தேச விரோத, சமூக விரோதக் கும்பல் பதுக்கி வைத்திருக்கும் ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இனி வெற்றுக் காகிதங்களாகிவிடும்” என்றும் கூறினார்.

பணமதிப்பழிப்பு என்ற நடவடிக்கையை பல நாடுகள் செயல்படுத்தியுள்ளன. உண்மையில், 2015 – 2016ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொருளாதார சர்வேயில் பல்வேறு நாடுகள் பல்வேறு நோக்கங்களுக்காக இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன எனவும் அதற்கான காரணங்களும் கூறப்பட்டுள்ளன. ஆனால், பிரதமர் மோடி இதை அறிவித்த விதம் பரபரப்பூட்டும் விதமாக அமைந்தது.

பணமதிப்பழிப்பு என்பது நிதி அல்லது பணம் தொடர்பான நடவடிக்கை. பொதுவாக, இது மத்திய வங்கி அல்லது நிதி அமைச்சகம் தொடர்பானது. ஆனால், இந்த நடவடிக்கையை மத்திய ரிசர்வ் வங்கி கவர்னரோ அல்லது நிதியமைச்சரோ அறிவிக்கவில்லை என்பதால், இதுகுறித்து முடிவெடுத்தலில் இவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்னும் வலுவான சந்தேகம் எழுகிறது. பிரதமரே இந்த முடிவு குறித்து ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள் இந்தியில் உரையாற்றினார். பின்னர் இன்னொரு நாற்பது நிமிடங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றினார். இவரது உரை, கொள்கை முடிவு மற்றும் மக்களின் ஆதரவைக் கோருவதோடு நின்றுவிடவில்லை. தொடர்ந்து, அரசாங்க அறிவிக்கையின் ஒரு பகுதியாக இடம்பெற வேண்டிய இருபதுக்கும் மேற்பட்ட நடைமுறை விவரங்களைக் குறித்தும் பட்டியலிட்டார். கடந்த கால கேடுகளைத் துடைத்தெறிவதுதான் பிரதமரின் முன்னுரிமை என்பதை மக்களை நம்பவைப்பதற்காக மிகக் கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட ஒரு வியூகத்தின் அடிப்படையில்தான் இப்படி அறிவிக்கும் முறை தெரிவுசெய்யப்பட்டது.

**உளவியல் வியூகம்**

எண்ணிக்கை அல்லது நடைமுறைகளுக்குப் பின்னால் உள்ள உண்மைகளை ஒருவர் எவ்வளவு குறைவாகத் தெரிந்துகொள்கிறாரோ அந்த அளவுக்கு அவருக்கு அதிகமாக பிரமிப்பும் மதிப்பும் உண்டாக்கும் என்பது நடத்தைசார் உளவியலாளர்கள் (Behavioural Psychologist) சொல்வது மற்றும் இது ஓர் அரசியல் உத்தியும் ஆகும். நடத்தைசார் பொருளாதார (Behavioral Economics) நிபுணர்களுக்கு இப்படிப்பட்ட அரசியல் உத்திகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுவது அதிகரித்துவருகிறது தெரியும்.

பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்டபோது, நம் நாட்டில் எந்தவிதமான நிதி அல்லது பொருளாதார நெருக்கடிகளுக்கான அறிகுறியும் காணப்படவில்லை. பிரதமர் தனது உரையை, தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் தடுமாறிக்கொண்டிருந்த இந்தியா, புதிய ஆட்சியில் மிக அதிக உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் எப்படி வலுவடைந்தது என்ற கருத்து நிலவியது என்ற கூற்றுடன் தொடங்கினார். புழக்கத்தில் இருந்த ரூபாய் தாள்களில் 86 சதவிகிதமாக இருந்த நோட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை என்பது மிகப் பெரிய அளவிலானது என்பதால் மக்களை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அதைவிட இவரது உரையின் பெரும் பகுதி, ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிரான மக்களின் கோபத்துக்குத் தூபம் போடுவதாகவும், கறுப்புப் பணம் ஆங்காங்கே ரொக்கமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவை அத்தனையும் துடைத்தெறியப்படும் என்ற மக்களின் கற்பனையைத் தூண்டிவிடும் விதமாகவும் அமைந்திருந்தது. இதன்மூலம் மக்கள் எதிர்கொள்ளக்கூடிய ‘இன்னல்கள்’ மிகக் குறுகிய காலத்துக்கு மட்டுமே நீடிக்கும் என அவர் கூறினார். இதன் பலனாகக் கறுப்புப் பணம் வெளியில் வரும் என்றும், ஊழல் ஒழிக்கப்பட்டுவிடும் என்றும் அவர் கூறினார்.

பணமதிப்பழிப்பு முடிவு இரண்டு வகையான தீவிர எதிர்வினைகளை விளைவித்தது. இதற்கு கார்ப்பரேட் துறை மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் தொடக்கத்தில் ஆதரவு இருந்தது. பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் பல ‘அர்ப்பணிப்புணர்வு கொண்ட’ பொருளாதார நிபுணர்கள் ஆதரவு அளித்தனர். தாராளவாதப் பொருளியல் நிபுணர்களின் அடக்கி வாசிக்கப்பட்ட ஆதரவும் இருந்தது. இதனால், ஆரம்பத்தில் மக்கள் கஷ்டங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் இதன் நன்மைகளை நீண்ட காலத்தில் உணரலாம் என்றார்கள். ஊழல் செய்து பலர் ஏராளமாகப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் இவை அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும் என்றும் மக்கள் நம்பியதில், பொதுமக்களிடையே மகிழ்ச்சிக் கொண்டாட்டமும் நிலவியது.

**திசைதிருப்பும் உத்தி?**

ஆனால், ஆரம்ப அதிர்ச்சியும் தொடர்ச்சியாக நடைபெற்ற விஷயங்களும் இதற்காக வெளிப்பட்ட பாராட்டுகளைவிட மிக விரிவான விமர்சனங்களுக்குள்ளானது. பணமதிப்பழிப்புக்கு எதிரான விமர்சனம் இரண்டு வகையில் எழுந்தது. முதலாவது, இது ஒரு திசை திருப்பல் உத்தியாகப் பார்க்கப்பட்டது. இரண்டாவதாக, ஊழலையும், கறுப்புப் பணத்தையும் கட்டுப்படுத்துவதற்காக என்று கூறப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு கொடுமையான, பொருத்தமற்ற நடவடிக்கை என்றும், இது எதிர்பார்த்த விளைவைக் கொண்டுவருவதற்கு பதில், பொதுமக்களுக்குத் தொந்தரவையும், துன்பத்தையும் அளிக்கும் எனவும் கருதப்பட்டது. மேலும், இது பொருளாதாரத்தை அதுவும் குறிப்பாக, முறைசாராத் துறையினரைப் பாதிக்கும், பொருளாதார வளர்ச்சி வேகத்தைக் குறைக்கும், நீண்டகால அடிப்படையில் நன்கு நிறுவப்பட்ட நிறுவனச் செயல்முறைகளை வலுவிழக்கச் செய்துவிடும் என்றும் கருதப்பட்டது.

பணமதிப்பழிப்பைத் திசைதிருப்பும் உத்தி என்று விமர்சனம் செய்பவர்கள், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட கறுப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டுவருவதில் அரசின் தோல்விகள், விவசாயத்தில் துன்பம், தொழில் துறை தேக்கம், அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம், மாற்றுக் கண்ணோட்டங்ளைச் சகித்துக்கொள்ளாத தன்மை, தலித்துகளுக்கு எதிரான, முஸ்லிம்களுக்கு எதிரான அரசு என்ற மக்களின் அதிகரித்துவரும் எண்ணம் ஆகியவற்றை நோக்கி கவனத்தைத் திருப்புகின்றனர்.

அமெரிக்கா ஃபைன்டெக் நிறுவனங்களின் நலனுக்காக அவர்களோடு கூட்டு வைக்கும் உள்நோக்கம் இந்த நடவடிக்கையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்க ஃபைன்டெக் (அதாவது டிஜிட்டல் பணம்) நிறுவனங்கள் 2011இல் அமெரிக்க காங்கிரஸ் புகுத்திய விதிமுறைகளால் மாபெரும் நஷ்டத்தைச் சந்தித்தன. எனவே, இந்த நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தன. பிரதமர் மோடி இந்தியாவை ‘ரொக்கத்தைவிட சிறந்த கூட்டணி’க்குக் (Better Than Cash Alliance – BTCA) கீழ் கொண்டுவந்தார். செப்டம்பர் 2015 மற்றும் நவம்பர் 2015இல் இந்தியாவில் டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையை விரிவடையச்செய்வது தொடர்பாக இந்திய நிதி அமைச்சகம் மற்றும் யு.எஸ்.ஏ.ஐ.டிக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டது.

விமர்சனத்தில் இரண்டாவதாக, பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் பொருத்தமற்ற தன்மையும் அது மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் ஏற்படுத்தக்கூடிய துன்பங்களும் குறிப்பிடப்படுகின்றன. இது மூன்று கட்டங்களாக நடைபெற்றதைப் பார்க்கலாம்.

முதலாவது, இந்த நடவடிக்கையில் என்ன தவறு என்று சொல்லும் கட்டம். இது நடைமுறைப்படுத்தப்பட்ட முறை மக்கள், சமூகம் மற்றும் பொருளாதாரத்துக்குத் தீங்கிழைப்பதைச் சுட்டிக்காட்டும் கட்டம்.

இரண்டாவது கட்டம், அறிவிப்பு வெளியான அடுத்தடுத்த வாரங்களில் மக்கள் அனுவித்த துயரங்கள் வெளிப்பட்டன.

மூன்றாவது கட்டத்தில் இதன் எதிர்மறைத் தாக்கங்கள், அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்களின் வலுவான சாட்சிகளின் அடிப்படையில் வெளிப்பட்டன.

ரூபாய் நோட்டில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிக்குப் புறம்பாக, அதிகார இறுமாப்புடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட முறை, மக்களின் நம்பிக்கையைச் சுக்குநூறாக்கியது. இதைத் தொடர்ந்து உடனடியாக முதற்கட்ட விமர்சனங்கள் வெளிவந்தன.

“பணப் புழக்கத்தின் அளவுக்கும் ஊழலின் அளவுக்கும் நேரடித் தொடர்புள்ளது” என்று பிரதமர், தனது உரையில் குறிப்பிட்டது உண்மையல்ல என்பது தெரியவந்தது. உதாரணமாக, கரன்சி ஜி.டி.பி. விகிதம், ஜப்பானில் 18%, ஹாங்காங்கில் 15%, ஸ்விட்சர்லாந்தில் 11% என இருந்ததால், அந்த நாடுகள் மிகக் குறைவாக ஊழல் நிலவும் நாடுகளின் பட்டியலில் 11இல் இருந்து 18ஆவது இடத்தைப் பெற்றிருந்தன. மிகக் குறைவாக, 5 முதல் 6 சதவிகிதம் வரையில் கரன்சி – ஜி.டி.பி. விகிதம் இருந்த துருக்கி, மெக்சிகோ ஆகிய நாடுகள், மிக அதிக ஊழல் நிலவரப் பட்டியலில் முறையே 66 மற்றும் 95ஆவது இடத்தைப் பெற்றிருந்தன. இந்த நிலையில் இந்தியாவின் கரன்சி – ஜி.டி.பி. விகிதம் சுமார் 11% என்பது, இதற்கும் ஊழல் நிலவரப் பட்டியலில் 76ஆவது இடத்தைப் பெற்றிருப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

1978இல் மொரார்ஜி தேசாய் ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 ஆகிய நோட்டுகளைச் செல்லாததாக அறிவித்ததை மோடியின் நடவடிக்கையோடு ஒப்பிடக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டது. புழக்கத்தில் இருந்த மொத்த ரூபாய் நோட்டுகளில் மிக மிகக் குறைவாக, (0.6%) மட்டுமே மொரார்ஜி காலத்தில் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. 2016ஆம் ஆண்டிலோ புழக்கத்தில் இருந்த பணத்தில் 86% ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இதனால் ஏற்படும் ரூபாய் நோட்டுகள் பற்றாக்குறையால் மக்களுக்கு ஏற்படும் துயரம் தொடர்கதையாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. (‘பணமதிப்பழிப்பு, ஊழல், கறுப்புப் பணம்: உண்மை கடந்த சகாப்தத்தில் (Era of Post-Truth) சந்தர்ப்பவாத அரசியலில் முற்றுகையிடும் ஆபத்துகள்’ என்னும் தலைப்பில் பேராசிரியர் டி.நரசிம்ம ரெட்டி 22-09-2017 அன்று விஜயவாடா சித்தார்த்தா அகாடமி அரங்கில் வழங்கிய ஆய்வுரையின் முதல் பகுதி இது. நரசிம்ம ரெட்டி, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பொருளாதாரப் பேராசிரியர். இதன் அடுத்த பகுதிகள் வரும் நாள்களில் தொடர்ந்து மின்னம்பலம் காலைப் பதிப்பில் வெளியாகும் – ஆசிரியர்)

தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *