தேர்தல் களம்: சத்தீஸ்கரில் நான்காவது முறை களத்தை வெல்லுமா பாஜக?

public

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மாநிலங்களுடன் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலம். 90 சட்டசபை இடங்களைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவின் ராமன்சிங் மூன்று முறை முதல்வராக இருந்து வருகிறார். தற்போது நான்காவது முறையாக முதல்வர் பதவியைக் கைப்பற்ற வியூகம் வகுத்து பக்ச்சாரத்தில் குதித்திருக்கிறார் ராமன்சிங்.

2000ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அஜித் ஜோகி முதல்வரானார். ஆனால், அவரது ஆட்சி மூன்று ஆண்டுக்காலம் மட்டுமே நீடித்தது.

இதையடுத்து 2003ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாஜக வென்றது. அத்தேர்தலில் பாஜக 50 இடங்களையும் காங்கிரஸ் 37 இடங்களையும் கைப்பற்றியது. இதேபோல் 2008, 2013 சட்டசபைத் தேர்தல்களிலும் பாஜக வென்று மூன்று முறை ஹாட்ரிக் முதல்வராக இருந்து வருகிறார் ராமன்சிங்.

சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினராக வாழும் மாநிலம். வறுமை இங்கே கோரத்தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. வறுமைதான் இந்த மாநிலத்தின் பிரதான பிரச்சினை.

இதையடுத்து மாவோயிஸ்டுகள் பிரச்சினை. சத்தீஸ்கர், ஒடிஷா மற்றும் ஆந்திராவுடன் இணைந்த தண்டகாருண்ய, தண்டேவடா வனப்பகுதிகள்தான் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருந்து வருகிறது. மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்கு முகம் கொடுத்து வருகிற அரசாக இருக்கிறது பாஜக அரசு.

இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் அப்பால் சத்தீஸ்கர் பாஜகவைப் படுகுழிக்குள் தள்ளிக் கொண்டிருப்பது ஊழல் விவகாரம்தான். ஹெலிகாப்டர்கள் கொள்முதல் விவகாரத்தில் முதல்வர் ராமன்சிங் மகன் ஆதாயம் அடைந்தார் என்கிற ஊழல் அம்மாநிலத்தை அசைத்துப் பார்த்தது. அதேபோல் பொது விநியோகத் திட்டத்தில் நடைபெற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலும் பாஜகவுக்குப் பாடை கட்டி வைத்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அதேநேரத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் காங்கிரஸின் முகமாக இருந்த முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி, தனிக்கட்சி தொடங்கியிருப்பது இம்மாநிலத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக அவர் இருப்பார் என்பதையே வெளிப்படுத்தியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களிடையே கணிசமான செல்வாக்கு பெற்ற அஜித் ஜோகியால் காங்கிரஸ் மற்றும் பாஜக இரு கட்சிகளின் வாக்குகளையும் சிதறடிக்க முடியும் என்பதுதான் கள நிலவரம்.

தற்போது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் அஜித் ஜோகி கைகோத்திருக்கிறார். தம்மை உதாசீனப்படுத்திய காங்கிரஸ் கட்சிக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அஜித் ஜோகி. அத்துடன் சத்தீஸ்கர் மாநிலத்தின் கிங் மேக்கராக திகழ வேண்டும் என்பதும் அஜித் ஜோகியின் வியூகம்.

இவை பாஜகவுக்கு உள்ளூர மகிழ்வை ஏற்படுத்தினாலும் கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்குப் பெரும் பீதியைத்தான் தந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் ஏபிபி நியூஸ்-சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 33 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது அக்கருத்துக்கணிப்பு. என்னதான் அஜித் ஜோகி தனித்தே நின்றாலும் வாக்குகளைத்தான் அவரால் பிரிக்க முடியுமே தவிர, அதிக இடங்களை அவரால் கைப்பற்ற முடியாது என்பது இக்கருத்துக்கணிப்பின் முடிவு.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானைப் போல சத்தீஸ்கரிலும் பாஜக ஆட்சியைப் பறிகொடுக்கும் வாய்ப்புகளே அதிகம் என்பதையே இத்தகைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

**- மா.ச.மதிவாணன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *