தமிழகத்தில் இனி கர்ப்பத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்!

public

தமிழகத்தில் இனி கர்ப்பமான பெண்கள் தங்களது கர்ப்பத்தைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகச் சுகாதார அமைப்பின் கருத்துப்படி, ஒவ்வொரு நாளும் 830 பெண்கள் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான காரணங்களால் உயிரிழக்கின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் 3,03,000 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மகப்பேற்றின் போது 1000 பெண்களில் 97 பெண்கள் உயிரிழக்கின்றனர். எனவே, கர்ப்பிணிப் பெண்களை பாதுகாக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

எனவே, கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பம் மற்றும் பாதுகாப்பான மகப்பேற்றை உறுதிப்படுத்தும் வகையில் சுகாதாரத் துறையில் தங்களது கர்ப்பத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். 102 சேவை எண் மூலமாக அல்லது தனியார் மருத்துவமனை மூலமாகப் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்யாவிட்டால் குழந்தை பிறக்கும்போது குழந்தைக்குப் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படாது. இந்தத் திட்டம் வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது.

மகப்பேற்றின்போது பெண்கள் மற்றும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் முயற்சியாக, இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை கண்காணிக்கவும், மருத்துவ அறிக்கையை தெரிந்துகொள்ளவும், மருத்துவ பரிசோதனையை நினைவுப்படுத்தவும் முடியும்.

தமிழகத்தில் சுமார் 60% பெண்கள் அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சை பெறுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சை பெறும் பெண்களின் தகவல்கள் அரசு பதிவேட்டில் இடம்பெறுவதில்லை.

முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் ஏழைக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூபாய் 6 ஆயிரத்திலிருந்து , ரூபாய் 12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையில், ரூ.4000 முதல் தவணையாக கருவுற்ற ஏழாவது மாதத்திலும், ரூ. 3000 இரண்டாவது தவணையாக குழந்தை பிறந்த பின்பும் , ரூ. 4000 மூன்றாவது தவணையாக பிரசவத்துக்குப் பின்னர் மூன்று தடுப்பு ஊசி செலுத்தியவுடன் வழங்கப்படுகிறது.

ஆனால், கிராமப்புறத்தில் உள்ள பெண்களுக்கு முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் சென்றடைவதில்லை. மேலும், இவர்கள் மகப்பேற்றிற்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் சென்று மகப்பேறு சிகிச்சை பெறுவதால் அவர்களின் விவரங்களை சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனையில் நடக்கும் மகப்பேறு அறுவை சிகிச்சைகள், கருத்தடைகள் குறித்த தகவலும் எளிதாக அரசு பதிவேட்டில் சேகரிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *