விழுப்புரம் தொகுதி ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் இன்று (மே 3) காலை 30 நிமிடங்கள் வேலை செய்யாததால் பரபரப்பு ஏற்பட்டது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் (தனி) தொகுதியில் திமுக கூட்டணி உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிக்குமார் போட்டியிட்டார். அதிமுக சார்பில் பாக்யராஜ், பாஜக கூட்டணியில் பாமக சார்பாக முரளிசங்கர் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் ஆகியோர் போட்டியிட்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் உள்ள மின்னணு வாக்குப்பதிவு பெட்டியை அந்தந்த தொகுதியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைத்து அதற்கு உரிய பாதுகாப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, நீலகிரி தொகுதியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி சிசிடிவி கேமராக்களில் ஏற்பட்ட பழுதின் காரணமாக 26 நிமிட ஃபுட்டேஜ் பதிவாகவில்லை. அதிக வெப்பம் காரணமாக சிசிடிவி இணைப்பு துண்டிக்கப்பட்டதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
மேலும், ஈரோடு, தென்காசி தொகுதிகளிலும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் சிறிது நேரம் செயல்படாமல் இருந்து பின்னர் சரி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் தொகுதியில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3 அடுக்கு காவல் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த மையத்தில் சிசிடிவி கேமராக்கள் சுமார் 30 நிமிடங்கள் வேலை செய்யாமல் போனதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை 9.28 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமிற்கான சிசிடிவி கேமராக்கள் திடீரென வேலை செய்யாமல் இருந்துள்ளது.
இதனையடுத்து, வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மீண்டும் 9.56 மணிக்கு சிசிடிவி கேமராக்கள் செயல்பட தொடங்கியுள்ளது.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பழனி விளக்கம் அளித்துள்ளார். அதில், “யுபிஎஸ்-ல் மின்தடை ஏற்பட்டு, பின்னர் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் அது சரி செய்யப்பட்ட பிறகு சிசிடிவி கேமராக்கள் செயல்பட தொடங்கியது”எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி