சிறப்புக் கட்டுரை: முருகன் எம்.ஜி.ஆரும் திருப்பதி கணேசனும்!

public

திமுக – எம்.ஜி.ஆர் – சிவாஜி: விசித்திரமான சமன்பாடு!

சுரேஷ்குமார இந்திரஜித்

1946ஆம் ஆண்டு, ஏழாவது சுயமரியாதை மாநாடு நடக்கும்போது ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ என்ற நாடகத்தை நடத்துவதாக ஏற்பாடாகியிருந்தது. அண்ணா எழுதியது. ஆரம்பத்தில் சிவாஜி வேடத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்து, அவருக்காக உடையெல்லாம் தைக்கப்பட்ட பிறகு என்ன காரணத்தினாலோ எம்.ஜி.ஆர் நடிக்க முடியாது என்று சொல்லிவிடுகிறார். நாடகமும் நடக்க ஒரு வாரம்தான் இருக்கிறது. அண்ணா, “கணேசா நீ சிவாஜியாக நடிக்கிறாயா?” என்று கேட்கிறார். அவர் நடிக்கிறேன் என்கிறார். கணேசன் அதன் பிறகு சிவாஜி கணேசனாகிவிடுகிறார். சிவாஜியின் முதல் திரைப்படமான பராசக்தி 1952ஆம் ஆண்டு வெளிவருகிறது. அந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் நிலைபெற்ற கதாநாயகனாகிவிடுகிறார்.

1936ஆம் ஆண்டு, முதல் படமான சதி லீலாவதியில் நடிக்கத் தொடங்கிய எம்.ஜி.ஆர் 1953ஆம் ஆண்டு திமுகவில் சேருகிறார். அதற்கு முன்பே சிவாஜி திமுகவில்தான் இருக்கிறார். இக்காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் திமுகவில் இருக்கிறார்கள். 1956ஆம் ஆண்டு புயல் வந்து மக்கள் வாழ்க்கை பாதிப்படைகிறது. அண்ணா, பணம் வசூல் செய்து தருமாறு கோரிக்கை விடுக்கிறார். வசூல் செய்த பணத்தை சிவாஜி கட்சிக்குக் கொடுத்துவிட்டு ஷூட்டிங்கிற்காக சேலத்திற்குச் சென்றுவிடுகிறார்.

அதிகமாகப் புயல் நிவாரண நிதி வசூலித்தவர்களுக்கு அண்ணா பாராட்டு விழா நடத்துகிறார். விழா நடக்கும் நாளில் இருக்க வேண்டும் என்பதற்காக சிவாஜி சேலத்திலிருந்து புறப்பட்டு சென்னை வந்து காத்திருக்கிறார். அவரை யாரும் கூப்பிடவில்லை. ஆறு மணியளவில் கூட்டம் நடக்கிறது. எம்.ஜி.ஆரைக் கூட்டிச் சென்று அந்த விழாவில் முதன்முதலில் கௌரவிக்கிறார்கள். அதிகமாக நிதி வசூலித்த சிவாஜி அதிர்ச்சியடைகிறார். பல நாட்கள் வருத்தத்தில் இருக்கிறார் (‘எனது சுயசரிதை’ புத்தகத்தில் சிவாஜி இச்சம்பவத்தைக் கூறுகிறார்).

ஒருநாள் இயக்குநர் பீம்சிங் வருகிறார். திருப்பதிக்குப் போய் வரலாம் என்கிறார். மனச்சோர்வில் இருந்த சிவாஜி உடன் செல்கிறார். அதிகாலை 4 மணிக்கு திருப்பதியில் தரிசனம் செய்கிறார். ‘தினத்தந்தி’யில் ரிப்போர்ட்டராக இருந்த அய்யங்கார் என்பவர், “நாத்திக கணேசன் ஆத்திகனாக மாறினார்” என்று தலைப்புச் செய்தி எழுதுகிறார்.

சிவாஜி சென்னை வருகிறார். ரோடு முழுவதும் “திருப்பதி கணேசா கோவிந்தா” என்று எழுதப்பட்டிருக்கிறது. சிவாஜியின் போஸ்டரில் சாணி அடிப்பது, காரைக் கல்லால் அடிப்பது என்று சம்பவங்கள் தொடர்கின்றன. அதன்பின் பிரச்சினைக்குப் புகலிடமாக காங்கிரஸில் சேருகிறார். ‘எனது சுயசரிதை’ என்ற புத்தகத்தில் அவர் கூறியிருந்த வாக்கியம் இது:

“என்னை திமுகக்காரர்கள் தூக்கிக்கொண்டுபோய் காங்கிரஸில் போட்டார்கள்.”

இது நடந்தது 1956ஆம் ஆண்டு.

**எம்.ஜி.ஆரின் ஆத்திகம்**

1953ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்த எம்.ஜி.ஆருக்கு வழி திறந்துவிடப்பட்டது. எம்.ஜி.ஆர் தனிப்பட்ட முறையில் ஜோதிடம், நல்ல நேரம், சமயம் ஆகியவற்றில் நம்பிக்கை உள்ளவராக இருந்தார். எம்.ஜி.ஆரின் நல்லவன் வாழ்வான் படத்துக்குக் கதை அண்ணா. அந்தப் படத்தில் “ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான். அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்” என்ற பாட்டை எம்.ஜி.ஆர் பாடுவதாக உள்ளது. படம் வெளிவந்த ஆண்டு 1961.

இதே ஆண்டில் வெளிவந்த பாசம் படத்தில் “காற்றில் மிதக்கும் ஒலிகளிலே.. கடலில் தவழும் அலைகளிலே.. இறைவன் இருப்பதை நானறிவேன்..” என்கிற வரிகள் “உலகம் பிறந்தது எனக்காக..” என்ற பாடலில் வருகின்றன.

தனிப்பிறவி என்ற படம் 1966ஆம் ஆண்டில் தேவர் பிலிம்ஸ் வெளியீடாக வந்தது. இதில் “எதிர்பாராமல் நடந்ததடி..” என்ற பாடலில் முருகன் வேடத்தில் எம்.ஜி.ஆர் தோன்றுவார். 1967ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமர்கிறது.

1968ஆம் ஆண்டு ஒளிவிளக்கு படம் வெளிவருகிறது. இப்படம் ‘பூல் அவுர் பத்தர்’ என்ற இந்தித் திரைப்படத்தின் ரீமேக். இந்திப் படத்தின் இறுதிக் காட்சியில் விதவைப் பெண்ணான மீனா குமாரியும் கதாநாயகன் தர்மேந்திராவும் இணைந்து கைகோத்துச் செல்வார்கள். தமிழ் ரீமேக்கில் திமுக எம்.எல்.ஏ.வான எம்.ஜி.ஆர், விதவைப் பெண்ணான சௌகார் ஜானகியுடன் சேர மாட்டார். வில்லனால் கத்தியால் குத்தப்பட்டு சௌகார் ஜானகி இறந்துவிடுகிறார். எம்.ஜி.ஆர்., கதாநாயகி ஜெயலலிதாவுடன் இணைவதாகப் படம் முடியும். இது எம்.ஜி.ஆரின் மனநிலையையும், அவரது ரசிகர்களின் மனநிலையையும் காட்டுகிறது. எம்.ஜி.ஆர், விதவைப் பெண்ணுடன் சேர்ந்து செல்வதை அவருடைய ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுதான் எம்.ஜி.ஆர்.

படத்தில் எம்.ஜி.ஆர். உடல் நலமில்லாமல் இருக்கும்போது சௌகார் ஜானகி முருகன் சிலை முன் பாடும் “ஆண்டவனே உன் பாதங்களை என் கண்ணீரில் நீராட்டினேன்.. இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன்..” என்ற வரிகள் இடம் பெற்றிருக்கும். படம் வெளிவந்த ஆண்டு 1968. திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டு வெளிவந்த படம் இது. அண்ணா 1969ஆம் ஆண்டு காலமாகிறார். எம்.ஜி.ஆர். கை ஓங்குகிறது.

1956ஆம் ஆண்டு திருப்பதி சென்றதற்காக அவதூறு செய்யப்பட்ட சிவாஜி கணேசன், இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருந்திருக்க வேண்டும்.

(கட்டுரையாளர் **சுரேஷ்குமார இந்திரஜித்** தமிழின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர். இவரைத் தொடர்புகொள்ள: sureshkumaraindrajith@gmail.com)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *