சிறப்புக் கட்டுரை: முடிவுக்கு வருகிறதா சீனாவின் ஆதிக்கம்?

public

பிரம்மா சேல்லனே

மலேசிய பிரதமரான மகதிர் முகமது அண்மையில் சீனாவுக்கு அரசுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களையும், திருப்பிச் செலுத்துவதற்கு கடினமான கடன்களையும் பயன்படுத்தி சிறிய நாடுகள் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்த சீனா முயல்வதாக மகதிர் முகமது விமர்சித்தார். காலனியத்தைப் புதிய விதமாக முன்னெடுத்து வரும் சீன அரசுக்கு எதிரான மகதிரின் எச்சரிக்கைகள் அவரது தைரியத்தைக் காட்டினாலும், சீனாவின் வர்த்தகவாதம், முதலீடு, கடன் வழங்கும் முறை போன்றவற்றை எதிர்க்க வேண்டும் என்பதையே அவை உணர்த்துகின்றன.

2013ஆம் ஆண்டு முதல் சீனா தனது முத்துமாலைத் திட்டத்தின் கீழ் உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களை அமல்படுத்துவதற்காக நிதியுதவி வழங்கி வருகிறது. சீனா தனது விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளவும், முக்கிய இடங்களில் தனது அரசியல் கால்தடத்தைப் பதிக்கவும், உபரியாகும் தொழிற்துறை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்காகவுமே இந்த உதவிகளைச் செய்து வருகிறது. முத்துமாலைத் திட்டத்திற்காக நிதியுதவிகளை வழங்க வழங்க, அவற்றின் மதிப்பை சீனா பெருமளவில் உயர்த்துகிறது. இதனால் அந்நாடுகளால் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமல் போகிறது.

**சீனாவின் கடன் கண்ணிகள்**

சீனாவின் கடன் கண்ணிகளில் அந்நாடுகள் சிக்கியபிறகு, கடனைத் திருப்பச் செலுத்த முடியாத காரணத்தால் அதை ஈடுகட்டுவதற்கு மிகவும் மோசமான ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்கு அந்நாடுகளை சீனா கட்டாயப்படுத்தக்கூடும். கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவிடம் இலங்கை சிக்கிய சூழ்நிலையைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இலங்கையின் அம்பாந்தோட்டையில் சீனா கட்டமைத்த மிக முக்கியமான துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்குக் காலனிய முறையில் சீனாவிடம் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும்படி இலங்கை வற்புறுத்தப்பட்டது. ஏனெனில், சீனா ஏற்படுத்திய கடன் சுமையை இலங்கையால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சீனாவின் போக்கைக் கணிக்க வேண்டுமென்றால் இந்தச் சம்பவத்தை கணக்கில் கொள்ள வேண்டும்.

சீனாவிடம் பெருமளவில் கடன் பெற்றுள்ள இதர நாடுகளும் இலங்கையின் நிலையைக் கவனத்தில்கொண்டு விழித்துக்கொள்ள வேண்டும். இதர நாடுகளும் தங்களது முக்கிய சொத்துகளை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் சில திட்டங்களை ரத்து செய்யவும், ஒப்பந்தங்கள் குறித்து மறு பேச்சுவார்த்தை நடத்தவும் முயற்சி செய்து வருகின்றன. முன்பு சீனாவின் முதலீட்டை மலேசியாவில் அனுமதித்த மகதிர், சீனப் பயணத்துக்குப் பிறகு 23 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன திட்டங்களை ரத்து செய்துவிட்டு மலேசியா திரும்பினார்.

வங்கதேசம், ஹங்கேரி, தன்சானியா ஆகிய நாடுகளும் முத்துமாலைத் திட்டங்களை ரத்து செய்தும், அளவைக் குறைத்தும் உள்ளன. சீனாவின் கடன் கண்ணிகளில் சிக்கிக்கொள்ள விரும்பாத மியான்மர் தனக்குத் தேவையான உள்கட்டமைப்பை அமைத்துக்கொள்ளவும் விரும்புகிறது. அதனால், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட கியாக்பியூ துறைமுகத்தின் மதிப்பை 7.3 பில்லியன் டாலரிலிருந்து 1.3 பில்லியன் டாலராகக் குறைப்பதற்குப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு வராவிடில் அத்திட்டத்தை ரத்து செய்யப்போவதாகவும் மியான்மர் எச்சரித்துள்ளது.

**சீனாவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்**

சீனாவின் நெருங்கிய நட்பு நாடுகளும்கூட முத்துமாலைத் திட்டம் குறித்து விழித்துக்கொண்டுள்ளன. நீண்ட காலமாக சீனாவுடன் இணைந்து செயல்பட்டுவரும் பாகிஸ்தான், முத்துமாலைத் திட்டத்திற்காக மற்ற எல்லா நாடுகளை விடவும் ஏராளமான நிதியுதவிகளை சீனாவிடமிருந்து பெற்றுள்ளது. பாகிஸ்தானின் கடன் நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், புதிதாகப் பதவியேற்றுள்ள இம்ரான் கான் அரசு சீனாவின் திட்டங்களை மறு ஆய்வு செய்யவும், மீண்டும் ஆலோசனை நடத்தவும் முடிவெடுத்துள்ளது. கம்போடியா நாட்டிலோ சீனாவின் காலனியாகிவிடுமோ என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.

மற்ற பகுதிகளிலும் கூட சீனாவுக்கு எதிரான போக்கைக் காணலாம். அண்மையில் நடைபெற்ற பசிபிக் தீவுகள் மன்றத்தின் ஆண்டுக்கூட்டம் அதன் வரலாற்றிலேயே மிகவும் சர்ச்சைக்குரியதாக முடிந்தது. பசிபிக் மண்டலத்தில் சீனாவின் கொள்கைகளும், கூட்டத்தில் சீன பிரதிநிதியின் நடத்தை போன்றவற்றால் நவ்ரூ நாட்டின் அதிபர் கோபமடைந்தார். உலகின் மிகச்சிறிய குடியரசான நவ்ரூவில் வெறும் 11,000 மக்களே உள்ளனர். ஆனால் அத்தகைய சிறிய நாடு கூட தெற்கு பசிபிக்கில் சீனாவின் திமிர்பிடித்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. “நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை சீனா ஆணையிட முடியாது” என்று நவ்ரூவின் அதிபர் அக்கூட்டத்தில் கூறினார்.

வர்த்தகத்தைப் பொறுத்தவரையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தகப் போர் குறித்த தகவல்களைத் தலைப்புச் செய்திகளாகப் பார்த்து வருகிறோம். ஆனால், டொனால்டு ட்ரம்ப் மட்டுமே சீனாவை விமர்சிப்பதில்லை. ஏற்றுமதி மானியங்கள், கட்டணங்களே இல்லாமல் அறிவுசார் சொத்துரிமைத் திருட்டுக்கு வழிவகை செய்வது, சீன நிறுவனங்களுக்கு ஏற்றவாறு உள்நாட்டுச் சந்தையை மாற்றுவது எனப் பல்வேறு கொள்கைகளுடன் சீனா செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் பிரபல அரசியல் அறிவியலாளரான கிரகாம் ஆலிசன் சீனா குறித்துக் குறிப்பிடுகையில், “உலகிலேயே மிகவும் பாதுகாப்புவாத, வர்த்தகவாத, கொள்ளைக்கார முக்கியப் பொருளாதாரம்” என்று கூறினார். அவரது வார்த்தைகள் உண்மை என்பதுபோலத்தான் தோன்றுகிறது.

**மற்ற நாடுகளை ஒடுக்கும் சீனா**

உலகிலேயே அதிகளவிலான சரக்குகளை ஏற்றுமதி செய்யும் நாடாக இருப்பதால், பல நாடுகளின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும் சீனா உள்ளது. தனது சொல்லுக்கு அடங்காத நாடுகளை வர்த்தக வாயிலாகத் தண்டிக்கும் போக்கையும் சீனா கொண்டுள்ளது. குறிப்பிட்ட சில பொருட்களுக்கு இறக்குமதித் தடை விதிப்பது, அரிய கனிம வளங்கள் போன்ற மூலோபாயப் பொருட்களின் இறக்குமதியை நிறுத்தி வைப்பது, சீனாவிலிருந்து அந்நாடுகளுக்குச் சுற்றுலா செல்லத் தடை விதிப்பது, உள்நாட்டு நுகர்வோரை அந்நாடுகளின் பொருட்களைப் புறக்கணிக்க வைப்பது, வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு எதிராகப் போராட்டங்களைக் கிளப்புவது போன்ற செயல்பாடுகளை வைத்துத் தனது சொல்லுக்கடங்கா நாடுகளை சீனா தண்டித்து வருகிறது.

சர்வதேச வர்த்தக விதிமுறைகளை மீறி வர்த்தகம் செய்ததாலேயே சீனா ஒரு மிகப்பெரும் வலிமையான செல்வச் செழிப்பான நாடாக உருவெடுத்துள்ளது. ஆனால், நிலைமை மீண்டும் பின்னோக்கிச் செல்கிறது. பல வளரும் நாடுகளும் சீனாவின் பொருட்களுக்கு இறக்குமதிக் குவிப்பு வரிகளையும், தண்டனை வரிகளையும் விதித்து வருகின்றன. சீனா தனது கடன் கண்ணிகளுக்குள் பல நாடுகளைச் சிக்கவைத்து அதன் சொல்லுக்கு அடங்கவைக்க முயற்சி செய்வதால் அந்நாடுகள் விழித்துக்கொண்டுள்ளன. ஆகையால் முத்துமாலைத் திட்டத்தைச் சுமுகமாக நிறைவேற்றுவது அவ்வளவு எளிதல்ல.

சீனா மீதான ட்ரம்பின் வரி விதிப்புகள் ஒருபுறமிருக்க, சந்தையை அணுகுவதற்குத் தொழில்நுட்பத்தைப் பரிமாற்றிக்கொள்ள வேண்டுமென்று மற்ற நாடுகளைச் சீனா வற்புறுத்தி வருவதாக உலக வர்த்தக அமைப்பில் ஐரோப்பிய ஒன்றியம் புகாரளித்துள்ளது. சீனாவின் ஏற்றுமதி மானியங்கள் மற்றும் வர்த்தகத்தைச் சீர்குலைக்கும் இதர நடவடிக்கைகளுக்குச் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளின் கீழ், உள்நாட்டுத் தொழிலைப் பாதிக்கும் மற்ற நாடுகளின் சரக்குகள் (மானியத்துடன்) மீது வரி விதித்துக்கொள்ளலாம்.

தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் முத்துமாலைத் திட்டத்துக்கும், அவரது வெளியுறவுக் கொள்கைத் திட்டங்களுக்கும் முட்டுக்கொடுப்பது மட்டுமல்லாமல், உள்நாட்டிலிருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இதுகுறித்து தொடர்ந்து மவுனம் காத்து வரும் சீன அதிபர், சீனாவின் உலகளாவிய திட்டங்கள் குறித்துப் பெருமை பேசி வருகிறார். இதனால் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச எதிர்ப்பை சீனா சம்பாதித்துள்ளது.

**சீனாவுக்கு லாபமா, இழப்பா?**

சர்வதேச வர்த்தகத்தால் பெருமளவில் பயனடைந்த சீனா, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. மேலும், கோடிக்கணக்கான சீன மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். சீனாவின் தவறான வர்த்தக மற்றும் முதலீட்டு நடைமுறைக்குச் சர்வதேச அளவில் எழுந்துள்ள எதிர்ப்புகளால் சீனா தனக்குக் கிடைக்கும் பலன்களை இழக்க விரும்பாது.

உபரி தொழிற்துறை உற்பத்திகளைப் பெருமளவில் ஏற்றுமதி செய்வதாலும், தனது கால் தடத்தை உலகளவில் பதிப்பதற்கு அந்நியச் செலாவணி கையிருப்புகளைக் கொண்டு சீனா வழங்கும் நிதியுதவிகளாலும் தற்போது எழுந்துள்ள எதிர்ப்புகளை சீனா சம்பாதித்துள்ளது. சீனா தனது வர்த்தக யுக்தியை மாற்றிக்கொண்டு, சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப வர்த்தகம் செய்தாலும், சீனாவின் உபரி உற்பத்திகளும், அந்நியச் செலாவணி கையிருப்புகளும் பாதிக்கப்படும். சுருக்கமாகச் சொன்னால், எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும், சீனாவின் சுதந்திரப் பயணம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

**நன்றி:** [லைவ் மின்ட்](https://www.livemint.com/Opinion/40xqVo2XkINve2R25ghFHI/Opinion–The-backlash-against-China-is-growing.html)

**தமிழில்: அ.விக்னேஷ்**

**மின்னஞ்சல் முகவரி**: [feedback@minnambalam.com](mailto:feedback@minnambalam.com)

**முந்தைய கட்டுரை:** [இலவச சிலிண்டர் என்னும் சுமை!](http://www.minnambalam.com/k/2018/10/18/4)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *