சிறப்புக் கட்டுரை: நீரின்றி அமையாது வேளாண்மை! – எம்.ராகுல்

public

ஆந்திரப்பிரதேச மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தின் நாகரூர் கிராமம் பத்து ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் நிலத்தடி நீர்வளம் மிகுதியாக இருந்து கிராமமே செழிப்பாக இருந்துள்ளது. அந்த நாள்கள் திரும்பி வந்துவிடாதா என்று இக்கிராம மக்கள் ஏக்கத்துடன் இருக்கின்றனர்.

2007ஆம் ஆண்டைச் சுற்றிய காலத்தில், மழை கடுமையாகக் குறைந்துவிட்டது. எனினும் நாகரூரைச் சுற்றியுள்ள ஏரிகளில் நீர் நிரம்பி வழிந்தன. அந்த ஏரிகளில் நீர் நிரம்பி வழிந்தது அதுவே கடைசி முறையாகும். இக்கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ண நாயுடு என்னும் 42 வயதுடைய விவசாயி பேசுகையில், “என்.டி.ராமராவ் முதலமைச்சராக இருந்தபோது மழை சரிவர பெய்து வந்தது. ராஜசேகர ரெட்டி முதலமைச்சராக இருந்தபோது ஏரிகளில் நீர் நிரம்பி வழிந்தது. அதுவே இறுதியாக இருந்தது” என்று தெரிவித்தார்.

பொதுவாக ஓர் ஆண்டுக்கான கனமழை பெய்த பிறகே குறைந்த அளவிலான மழை பொழியும். இதனால் கிணறுகள் மற்றும் நிலத்தடி நீர் நிரப்பப்படும். 2011ஆம் ஆண்டுக்கு முன்பு சில வருடங்களில் வருடாந்தர மழைப்பொழிவு 700 முதல் 800 மி.மீ. வரை இருந்தது. ஆனால், 2011ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு இக்கிராமத்தில் பெய்த அதிகளவிலான மழைப்பொழிவு (ஜூன் 2015-மே 2016) 607 மி.மீ. மட்டுமே ஆகும். மற்ற வருடங்களில் இன்னும் குறைந்து 400 – 530 மி.மீ. வரை மழை பொழிந்துள்ளது.

மழை பொழிந்ததாலும், நீர் அதிகமாக உறிஞ்சும் பயிர்களை சாகுபடி செய்ததாலும் ஆழ்துளைக் கிணறுகள் ஏற்படுத்தப்பட்டு நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டது. சீனிவாசுலு என்னும் 70 வயதான விவசாயி பேசுகையில், “40 வருடங்களுக்கு முன்பு இங்கு போர்வெல்களே இல்லை. 10 அடியில் கிணறுகள் தோண்டினால் எங்களுக்குத் தண்ணீர் கிடைக்கும்” என்று தன் கடந்த காலத்தை நினைவுகூர்கிறார்.

ஒவ்வோர் ஆண்டும் நிலத்தடி நீர் குறைவாக நிரப்பப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் 600 முதல் 700 அடி வரை சென்றுவிட்டது. இக்கிராமத்தில் 1000 அடிக்கு போர்வெல்கள் தோண்டியும்கூட தண்ணீர் கிடைக்கவில்லை என்று சில விவசாயிகள் கூறுகின்றனர்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ரிசர்ச் ஃபவுண்டேஷன் 2009ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வில், அனந்தபூர் மாவட்டத்தில் போர்வெல்களால் நிலத்தடி நீர் வெறுமையாகியுள்ளது தெரியவந்துள்ளது. அனந்தபூரின் 63 மண்டலங்களில் 12 மண்டலங்கள் மட்டுமே நிலத்தடி நீர் பயன்பாட்டில் பாதுகாப்பாக உள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

சீனிவாசுலு தன் ஒன்பது ஏக்கர் நிலத்தில் எட்டு போர்வெல்களை அமைத்துள்ளார். ஒவ்வோர் ஆழ்துளைக் கிணற்றுக்கும் ஒரு லட்சம் ரூபாய் செலவழித்துள்ளார். இவரும் இவரின் மூன்று மகன்களும் தனியார் நிதி வழங்குவோரிடமிருந்து சுமார் ஐந்து லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளனர். இவரின் எட்டு போர்வெல்களில் ஒரே ஒரு போர்வெல் மட்டுமே தற்போது இயங்கிக்கொண்டிருக்கிறது. மேலும், நீர் போக்குவரத்துக்காகக் குழாய்கள் அமைக்கக் கூடுதலாக இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர்.

இப்படி அனைவரும் தண்ணீருக்காக போர்வெல்கள் அமைத்ததால், 2013ஆம் ஆண்டில் அனந்தபூர் மாவட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் போர்வெல்கள் இருந்தன. 2017ஆம் ஆண்டில் சுமார் 2.5 லட்சம் போர்வெல்கள் இருந்துள்ளன. இதில் 80 சதவிகிதம் செயல்படாதவையாகவும், 20 சதவிகித போர்வெல்கள் இயங்குபவையாகவும் இருக்கின்றன.

இந்த 80 சதவிகிதம் போர்வெல்களில் ராமகிருஷ்ண நாயுடுவின் இரண்டு போர்வெல்களும் அடங்கும். தனது 5.5 ஏக்கர் நிலத்தில் இருக்கும் இரண்டு போர்வெல்களில் ஒன்றை ராமகிருஷ்ண நாயுடு மூழ்கடித்து விட்டார். இதுகுறித்து ராமகிருஷ்ண நாயுடு பேசுகையில், “2010ஆம் ஆண்டு முதல் நான் கடன்பெறத் துவங்கினேன். அதற்கு முன்பு நீர்வளமும் மரங்களும் இருந்தன. கடன்களும் இல்லாமல் இருந்தது. தற்போது என்னால் இரவில் தூங்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்களை நினைத்துக்கொண்டே என் இரவுகள் கழிந்து விடுகின்றன. நாளைக்கு யார் பணம் கேட்க வருவார்கள், யார் என்னைக் அவமானப்படுத்த வருவார்கள் என்று எண்ணியே என் தூக்கம் கெட்டுவிடுகிறது” என்கிறார். இவருக்கு சுமார் 2.70 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. வேளாண்மையில் இவருக்குக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மாதத்துக்கு 2 சதவிகித வட்டி மட்டுமே செலுத்த முடிகிறது.

கடன்கள், போர்வெல்கள், நீர் போன்ற பிரச்னைகளையும் கடந்த அனந்தபூரில் பயிர் உற்பத்தி நன்றாக இருந்தால், அதை உற்பத்தி செய்த விவசாயிக்கு லாபம் கிடைப்பதில்லை. நாயுடு தன் போர்வெல்லில் இருந்து கிடைக்கும் நீரைப் பயன்படுத்தி, நடப்பு ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சிறப்பாக வெள்ளரி உற்பத்தி செய்திருந்தார். இதனால் நல்ல லாபம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், கிலோ 15 ரூபாய்க்கு விற்பனையாகிய வெள்ளரிக்காய் கிலோ 1 ரூபாயாக விலை சரிந்துவிட்டது. இதனால், வெள்ளரி விதைகள் வாங்கச் செலவிட்ட பணம் கூட தனக்குக் கிடைக்கவில்லை என்று ராமகிருஷ்ண நாயுடு வேதனையுடன் கூறுகிறார். மேலும், தன் பயிர்களை ஆடுகளுக்கு உணவாகக் கொடுத்துவிட்டதாகவும் நாயுடு கூறுகிறார்.

தேசிய அரசியல் முதல் உள்ளூர் கடன் பிரச்னைகள் குறித்து அனைத்து விவகாரங்களையும் விவசாயிகள் விவாதிக்கின்றனர். முன்பெல்லாம் கிராம மக்களுக்குள் சண்டை ஏற்படும்போது, காவல்துறை கைது செய்வதைத் தடுக்க பணம் செலவிடப்படும் என்றும், தற்போது தண்ணீருக்காக மட்டுமே பணம் செலவிடப்படுவதாகவும் இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகின்றனர்.

நாளுக்கு நாள் நீர் இருப்பு குறைந்து வருவதால், நாகரூரில் யாருமே விவசாயத் தொழில் செய்ய விரும்புவதில்லை. விவசாயிகள் தங்களின் மகள்களை வேறு ஒரு விவசாயக் குடும்பத்துக்கு திருமணம் செய்து அனுப்ப விரும்புவதில்லை.

நன்றி: [ரூரல் இந்தியா ஆன்லைன்](https://ruralindiaonline.org/articles/memories-of-water/)

தமிழில்: அ.விக்னேஷ்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *