கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க பரிசீலனை : உச்ச நீதிமன்றம்!

Published On:

| By Kavi

மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் அவர், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு ஏப்ரல் 30ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? என்று அமலாக்கத் துறையிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த மனு இன்று (மே 3) நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “மார்ச் 16 சம்மன்படி கெஜ்ரிவால் மார்ச் 25ஆம் தேதி அமலாக்கத் துறை முன் ஆஜராக வேண்டும்.

மார்ச் 16ஆம் தேதி வரை கெஜ்ரிவால் குற்றம்சாட்டப்பட்டவராக இருக்கவில்லை. அதன்பிறகு மார்ச் 21ஆம் தேதி கைது செய்வதற்கு என்ன தேவை ஏற்பட்டது.

அரசியல் கட்சியை (ஆம் ஆத்மி) சிக்கவைக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 70 -ஐ (நிறுவனங்களின் குற்றங்கள்) பயன்படுத்த அமலாக்கத் துறை நினைக்கிறது.

ஆனால், அரசியல் கட்சிகளுக்கு சட்டப்பிரிவு 70 பொருந்தாது. அதாவது, பிரிவு 70 கார்ப்பரேட் நிறுவனங்களை கையாள்வதற்காகவே உள்ளது. ஒரு அரசியல் கட்சியை “தனிநபர்களின் கூட்டமைப்பாக” கருத முடியாது” என்றும் அவர் வாதிட்டார்.

அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராகி, கெஜ்ரிவாலுக்கு வழங்கப்படும் எந்தவொரு இடைக்கால ஜாமீனையும் எதிர்ப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கு விசாரணைக்கு காலமெடுக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் இடைக்கால ஜாமீன் தொடர்பாக ஏன் பரிசீலிக்கக் கூடாது. ஆனால், இதில் இரு தரப்பும் மிக தெளிவாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.

ஜாமீன் வழங்கப்படுமா இல்லையா என்பது குறித்து நாங்கள் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை. தேர்தல் காரணமாக இடைக்கால ஜாமீன் வழங்க நாங்கள் பரிசீலிக்க விரும்புகிறோம்.

நாங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கலாம்… அல்லது வழங்காமல் கூட இருக்கலாம் … எதையும் நீங்களாகவே ஊகித்துகொள்ள வேண்டாம்.

சிறையில் இருந்தபடியே கோப்புகளில் கையொப்பம் இடுவது தொடர்பாகவும் பரிசீலிக்கப்படும்” என்று கூறி வழக்கை மே 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

முதுபெரும் பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

தோனி கொடுத்த கிஃப்ட்: முஸ்தபிசுர் ரஹ்மான் சொன்ன அந்த விஷயம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel