சிறப்புக் கட்டுரை: தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 24

public

சந்தா கோச்சர்

ஒவ்வோர் ஆண்டும் ஃபார்ச்சூன் இதழில் வெளியிடப்படும் சிறந்த சக்திவாய்ந்த நபர்களின் பட்டியல் மிகவும் பிரசித்தம். உலகெங்கிலும் உள்ள திறமையாளர்களின் உயர்வைக் குறிக்கும்விதமாக இருக்கும் அந்தப் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த சந்தா கோச்சர் இந்தாண்டு ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளார். தொழில் மற்றும் கார்ப்பரேட் உலகில் பெண்களால் சாதிக்க முடியும் என்ற செய்தியைக் கச்சிதமாக உரைத்த பெண்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொழில், வணிகம் மற்றும் வங்கி மேலாண்மை போன்ற பன்முக துறைகளில் திறம்பட செயல்பட்டு தனக்கான அடையாளத்தை உருவாக்கியிருக்கும் சந்தா கோச்சரை பற்றி இந்த வார கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.

**மேனேஜ்மென்ட் படிப்பு**

சந்தா கோச்சர் நவம்பர் மாதம் 17ஆம் தேதி, 1961ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் என்ற இடத்தில் பிறந்தார். பின் மும்பை நகரின் ஜெய்ஹிந்த் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை முடித்த சந்தா தொடர்ந்து ICWAI என்ற கல்வி மையத்தில் கணக்கு (Accounts) பிரிவில் தனி வகுப்புகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டார். கணக்கு மற்றும் மேலாண்மை துறையின் மீது இருந்த சிறு ஆர்வத்தினால், ஜம்னாலால் பஜாஜ் மேனேஜ்மென்ட் கல்வி மையத்தில் இணைந்து மேனேஜ்மென்ட்டுக்கான பிரத்யேக (MMS) பட்டப்படிப்பையும் சந்தா முடித்தார். தொடர்ந்து தனது படிப்பறிவை வளர்த்துக்கொண்டது மட்டுமின்றி, தன்னுடைய மேலாண்மை துறையில் இருந்த ஆர்வத்தை படிக்கும் காலத்தில் வளர்த்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவில் தரப்படும் வொக்கார்ட் (Wockhardt) தங்க விருது, மற்றும் JC போஸ் தங்க விருது போன்ற பல கெளரவங்களையும் சந்தா பெற்றுள்ளார். பட்டப்படிப்பை முடித்த சந்தா முதலில் தனது பணியை ஐசிஐசிஐ வங்கியிலேயே தொடர்ந்தார். 1984ஆம் ஆண்டில் கார்ப்பரேட் வங்கியாக மட்டுமே விளங்கிய ஐசிஐசிஐ வங்கியில், மேனேஜ்மென்ட் ட்ரெய்னி (Trainee) என்ற சிறு பதவியில் பணிபுரிந்தார். அப்போது சிமென்ட், ஜவுளி மற்றும் பேப்பர் போன்ற வர்த்தகத்தில் இருந்த ஐசிஐசிஐ வங்கியின் சில கணக்கு மற்றும் பிரிவுகளை மேற்பார்வையிட்டு அவற்றைச் சரியான வகைப்படுத்துதல் பணியையே முதலில் செய்து வந்தார். அந்த ஆரம்ப கால வேலைகளின் மூலம் படிப்படியாக உயர்ந்து பின்னாளில் ஐசிஐசிஐ வங்கியின் பிரதான நபர்களுள் ஒருவராக இடம் பிடித்தார் சந்தா கோச்சர்.

**ஐசிஐசிஐ வங்கியின் வளர்ச்சி**

1990களில் ஐசிஐசிஐ வங்கி கணிசமாக தொழில் துறை மற்றும் பல்வேறு வணிகங்களுள் ஈடுபடுத்திக்கொள்ள தொடங்கியது. இதன்மூலம் சந்தா தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கான முதற் அடியை எடுத்தது வைத்தார். 1994ஆம் ஆண்டில் இணை மேலாளராகப் பொறுப்பேற்ற சந்தா, புது வங்கியை செயல்படுத்த முழு முயற்சியில் ஈடுபட்டார். “அப்போது மற்ற வங்கிகள் செயல்பட்ட விதமே முற்றிலும் வேறுபட்டது. சாதாரண முறையில் செயல்படும் வங்கியைத் தாண்டி, தொழில் மற்றும் வர்த்தகம் அதன் மூலம் மக்கள் நலன் என்ற பெரும் பொறுப்புகள் மற்றும் வளர்ச்சியுடன் இருந்தது ரீடெயில் (Retail) வங்கி முறை. இதை செயல்படுத்த தேவையான முயற்சிகளை நான் அப்போது எடுத்தாலும், எனக்கு அது ஒரு பெரிய சவாலாக இருக்கவே செய்தது” என்று சந்தா சில பேட்டிகளில் பகிர்ந்து கொண்டுள்ளார். சக்தி, இணையதளம், தொழில்நுட்பம் மற்றும் தொலைபேசித் தொடர்பு போன்ற நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் துறைகளுடன் இணைந்து செய்யப்படும் சேவைகளைச் சரியாக செயல்படுத்த திட்டங்களை வகுத்தது மட்டுமின்றி, தொழில் வர்த்தகத்தினருடன் சரியான இணைப்புகளை வைத்துக்கொண்டு ஐசிஐசிஐ வங்கியின் புது திட்டங்களை மேலும் எளிமையாக்கிய கூடுதல் பொறுப்பையும் சந்தா ஏற்று செய்தது இங்கு கூடுதல் தகவல்.

சந்தாவின் சிறந்த ஆளுமை மற்றும் அதன் மேலும் ஏற்பட்ட உடன் வளர்ச்சியினால், கூடுதல் மற்றும் உயர் பதவிகள் அவருக்கு அளிக்கப்பட்டது. வங்கியின் இணைய வர்த்தகம் (E-Commerce) மற்றும் சர்வதேச வர்த்தகப் பணி மேற்பார்வை மற்றும் திட்டமிடுதல் பொறுப்பை ஏற்று ஐசிஐசிஐயின் புகழ் பன்மடங்காக உயர உறுதுணையாக சந்தா இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடங்கப்பட்ட நான்கு ஆண்டுகளிலேயே, ஐசிஐசிஐ வங்கியின் ரீடெயில் துறை அபார வளர்ச்சி அடைய சந்தா கோச்சருக்குத் தொடர்ந்து இணை இயக்குநர், நிர்வாக தலைவர் (CFO) போன்ற பல பதவி உயர்வுகள் அடுத்தடுத்துக் கிடைத்தன.

**சிறந்த வங்கி மற்றும் சிறந்த நபர் போன்ற தொடர் கெளரவங்கள்**

2009ஆம் ஆண்டில் ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓவாக சந்தா கோச்சர் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் செயல்பாடுகள் அனைத்தும் சந்தாவின் நேரடி பார்வைக்குக்கொண்டு வரப்பட்டது. அது மட்டுமின்றி, பல தொழில் துறை நிறுவனங்களின் செயற்குழு நபராகவும் இவர் விளங்கியது குறிப்பிடத்தக்கது. தவிர பல வங்கி மற்றும் வர்த்தக சங்கங்களின் தலைவர் மற்றும் இருக்கை குழுக்களில் பொறுப்பு வகித்து, உலகம் முழுவதும் தன்னுடைய பெயர் மற்றும் ஆளுமை திறன் விசாலமாக தெரியப்பட்டது. உலக வர்த்தக மற்றும் வணிக சங்கங்களில் தலைவராகவும் பொறுப்பேற்று, பல கூட்டங்களை நடத்தி வைத்துள்ளார். அது மட்டுமின்றி, ஐசிஐசிஐ வங்கி இவரின் தலைமையின் கீழ் பல விருதுகளையும் கெளரவங்களையும் குவித்துள்ளது.

2004ஆம் ஆண்டில் சிறந்த ரீடெயில் பங்கர் என்ற விருது சந்தா கோச்சருக்கு அளிக்கப்பட்டது.

புகழ்பெற்ற எகானாமிக் டைம்ஸ் நாளிதழில் சிறந்த தொழிலதிபர் என்ற விருது 2005ஆம் ஆண்டில் இவருக்கு அளிக்கப்பட்டது.

2001, 2003, 2004 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் ஐசிஐசிஐ வங்கிக்குச் சிறந்த ரீடெயில் வங்கி என்ற விருது, தொடர்ந்து ஆசிய பாங்கர் என்ற நிறுவனத்தால் அளிக்கப்பட்டது. சந்தா கோச்சர் இவ்வாண்டுகளில் தலைமைக் குழுவின் அங்கமாக இருந்தது மட்டுமின்றி, பல துறை மற்றும் திட்டங்களுக்குத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2005ஆம் ஆண்டிலிருந்து ஃபார்ச்சூன் இதழின் சிறந்த தொழிலதிபர் என்ற பட்டியலில் தொடர்ந்து சந்தா இடம்பெற்றிருப்பது மட்டுமின்றி, ஃபோர்ப்ஸ், டைம்ஸ் போன்ற பிரபல பட்டியல்களில் தொடர்ந்து இவர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு மேலும் ஒரு ரத்தின கல் போல அமெரிக்காவின் வாஷிங்டன் நகரின் வுட்ரோ வில்சன் விருது இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலக கார்ப்பரேட் துறையில் இவர் செய்துள்ள அசாதாரண செயல்களை பெருமைப்படுத்தும் விதமாக சந்தாவுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட பிரிவில் இவ்விருதை பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் சந்தா சேர்த்து பெற்றுள்ளார்.

உலக வர்த்தகத்தில் பெற்ற நிரந்தர இடம் மற்றும் பல சங்கங்களின் தலைவர் என்ற பெருமையைத் தாண்டி, சந்தா பொது மக்களுக்கேற்ப பல விதிமுறைகளை ஐசிஐசிஐ வங்கியில் மாற்றியமைத்துள்ளார். சந்தாவின் நேரடி பொறுப்பில் ஐசிஐசிஐ கொண்டுவரப்பட்ட பின், நாடெங்கும் 2,000 புது தானியங்கி சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டது. தவிர, மற்ற வங்கிகளைப் போன்று ஐந்து அல்லது ஆறு மணி நேரம் மட்டுமே பணியாற்றாமல், பத்து மணி நேரம் வரை வங்கிகளைச் செயல்படுத்தினார். இதனால் பல பொதுமக்கள் லாபமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பிரதமரின் வர்த்தக மற்றும் பொருளாதார குழுவின் உறுப்பினராக சந்தா 2011ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். அதுமட்டுன்றி, உயரிய விருதான பத்மபூஷண் விருது இவருக்கு 2011ஆம் ஆண்டில் அளித்து கெளரவிக்கப்பட்டுள்ளது.

குடும்பம், குழந்தை என்ற சாதாரண வாழ்க்கை வாழ்ந்தாலும், தன்னுடைய திறன் மற்றும் பொறுப்பில் நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருப்பது சந்தாவின் அணுகுமுறை மூலம் சில இடங்களில் தெரிகிறது. “செய்ய முடியவில்லை என்ற காரணத்தால், எந்தவொரு செயலையும் விட்டுவிடக் கூடாது. கடைசி வரை முயற்சித்து வெற்றி பெற வேண்டும்” என்ற வாக்கியத்தைத் தனது வாழ்க்கையாக மாற்றியது மட்டுமின்றி, பலருக்கு அதைப் பாடமாகக் கற்றுத்தருகிறார் சந்தா.

கட்டுரையாளர்: நித்யா ராமதாஸ்

இவர் குமுதம் சிநேகிதி மாதமிருமுறை இதழில் முழு நேர நிருபராகப் பணியாற்றியவர். புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழில் பயிற்சி நிருபராக இருந்தவர். லைஃப் ஸ்டைல், ஃபேஷன், கலை மற்றும் மியூசிக் சார்ந்த கட்டுரைகளை எழுதிவதில் தேர்ந்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். தற்போது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார்.

படங்கள்: கூகுள் இமேஜ்

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 1](http://minnambalam.com/k/2017/05/23/1495477820)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 2](https://minnambalam.com/k/2017/06/01/1496255433)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 3](https://minnambalam.com/k/2017/06/08/1496860214)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 4](https://minnambalam.com/k/2017/06/15/1497465020)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 5](https://www.minnambalam.com/k/2017/06/22/1498069815)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 6](http://minnambalam.com/k/2017/06/29/1498674620)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 7](http://krypto.in/k/2017/07/13/1499884221)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 8](https://minnambalam.com/k/2017/07/20/1500489026)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 9](http://minnambalam.com/k/2017/07/27/1501093821)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 10](http://www.krypto.in/k/2017/08/03/1501698624)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 11](https://www.minnambalam.com/k/2017/08/10/1502303408)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 12](https://www.minnambalam.com/k/2017/08/17/1502908212)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 13](https://minnambalam.com/k/1503513024)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 14](http://minnambalam.com/k/1504809022)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 15](http://minnambalam.com/k/1505413823)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 16](http://minnambalam.com/k/1506018605)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 18](https://minnambalam.com/k/2017/09/29/1506623428)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 19](https://www.minnambalam.com/k/2017/10/06/1507228221)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 20](https://minnambalam.com/k/1507833018)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 21](http://minnambalam.com/k/1508437815)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *