சிறப்புக் கட்டுரை: டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலை!

public

திஷ் சங்கேரா

சுமார் 80 விழுக்காடு இந்தியர்களிடம் தற்போது வங்கிக் கணக்குகள் உள்ளன. இவர்களின் கையில் மொபைல் போன்களும் உள்ளன. ஆனால், இத்தனை பேருக்கும் நிதிச் சேவைகள் கிடைக்கின்றனவா? நிச்சயமாக இல்லை. சில இடங்களில் ஆப்பிரிக்க நாடுகளை விட நிலைமை மோசமாக உள்ளது.

மொபைல் வங்கிச் சேவைகள் எல்லாம் இருந்தாலும்கூட பல வாடிக்கையாளர்கள் மாற்று வழிகளின் மூலமாகவே நிதிச் சேவைகளைப் பெறுவதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் உலக வங்கி வெளியிட்டுள்ள குளோபல் ஃபிண்டெக்ஸ் சர்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் வங்கிக் கணக்குகள் இல்லாத மக்களைக் குறிவைத்தே பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு இதுபோன்ற திட்டங்களே காரணம் என்று உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குகள் வைத்திருப்பவர்களில் வெறும் ஒரு விழுக்காட்டினர் (31 லட்சம் பேர்) மட்டுமே மிகைப்பற்று போன்ற சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். 17 விழுக்காடு ஜன் தன் வங்கிக் கணக்குகளில் உள்ள குறைந்தபட்ச வைப்புத் தொகையின் மதிப்பு பூஜ்யம் ஆகும். அதாவது அந்த வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்படுவதே இல்லை. பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்குகளின் விகிதம் 2014ஆம் ஆண்டில் 75 விழுக்காட்டிலிருந்து 2016ஆம் ஆண்டில் 25 விழுக்காடாகக் குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண கடன்கள் பெறுவதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்தியாவில் உள்ள வங்கிக் கணக்குகளில் 38 விழுக்காடு செயல்படாமல் உள்ளன. அதாவது இவ்வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்படுவதோ, எடுக்கப்படுவதோ இல்லை. பெரும்பாலான இந்தியர்கள் முறைசார்ந்த வங்கி அமைப்புக்குள் ஒருங்கிணைக்கப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.

நிதிச் சேவைகளைப் பயன்படுத்துவதில் பங்கேற்பதால், மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்க முடியும். கல்வி, சுகாதாரத்தில் முதலீடு செய்து, ரொக்கத்தைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக் கொள்ள முடியும். வங்கிச் சேவைகள், நிதிச் சேவைகளை மொபைல் மூலமாகவும், இணையம் மூலமாகவும் பெறும் மக்கள், மொபைல் வாலெட்டுகளைப் பயன்படுத்தும் மக்களின் விகிதம் மற்ற வளரும் நாடுகளை விட மிகக் குறைவாக உள்ளது.

2017ஆம் ஆண்டில், இந்தியாவில் 5 விழுக்காட்டினர் மட்டுமே நிதி சேவைகளை மொபைல் மூலமாகப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் 2 விழுக்காட்டினர் மட்டுமே மொபைல் நிதிக் கணக்கை வைத்திருந்ததாகவும் உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.

ஆப்பிரிக்காவின் சகாரா நாடுகளில் 2017ஆம் ஆண்டில் 21 விழுக்காட்டினரிடம் மொபைல் நிதிக் கணக்கு இருந்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. கென்யாவில் 18 வயதுக்கு மேலானோரில் 97 விழுக்காட்டினர் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஈடுபடுகின்றனர். தென்னாப்பிரிக்காவில் 60 விழுக்காட்டினர் (18 வயதுக்கு மேலானோர்) டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்தியாவில் 29 விழுக்காட்டினர் (18 வயதுக்கு மேலானோர்) மட்டுமே டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த நாடுகளில் மக்கள் பாரம்பரிய வரம்புகளைக் கடந்து நிதிச் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். மேலும் டிஜிட்டல் நிதிச் சேவைகளில் மூலதனமும் அதிகரிக்கிறது. ஆனால் இது இந்தியாவிலும் நடைபெறுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

துவாரா ஆய்வு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான நிசாந்த் பேசுகையில், “பொதுவாக வங்கிச் சேவைகளைப் பெற மொபைல் போன்களைப் பயன்படுத்த மக்கள் விரும்புவதில்லை. பணப் பரிவர்த்தனை செய்ய மொபைல் போன்களையும், டிஜிட்டல் முறைகளையும் பயன்படுத்த மக்களிடையே நம்பிக்கை இல்லாத நிலை உள்ளது. முக்கியமாக இதுபோன்ற வழிமுறைகளைக் கிராமப்புற மக்கள் நம்புவதில்லை” என்று கூறினார்.

இணையப் பயன்பாடு, தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக 2015ஆம் ஆண்டில் மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மொபைல் சேவைகள், அரசு மானியங்களை நேரடியாக அனுப்புதல், சேவைகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதன் மூலம் மக்கள் பெறும் நிதிச் சேவைகளின் தரம் இத்திட்டத்தின் கீழ் உயரும் என்று நம்பப்படுகிறது. எனினும், மின்சாரம் மற்றும் இணைய இணைப்புகள் பெரியளவில் மக்களைச் சென்றடையாததால் மொபைல் நிதிச் சேவைகள் வளர்ச்சியடைவதற்குத் தடைகள் ஏற்பட்டுள்ளன.

இணைய இணைப்புகளில் கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. 2017 டிசம்பர் மாதத்தில் 65 விழுக்காடு நகர்ப்புற வாசிகளிடமும், 20 விழுக்காடு கிராமப்புற வாசிகளிடமும் இணைய இணைப்பு இருந்துள்ளது என்று இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

மொபைல் போன்களைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் பல கிராமப்புறங்களில் இன்னும் மின்சார வசதிகள் இல்லாததால் மொபைல் சார்ஜ் செய்வதற்குக் கூட வழியில்லாத நிலை உள்ளது. 99.8 விழுக்காடு கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டுவிட்டதாக கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் கூறினாலும், இன்னும் 3.1 கோடி குடும்பங்களுக்கு மின் வசதி இல்லை.

ஆன்லைன் வங்கி இணையதளங்களையும், மொபைல் செயலிகளையும் பயன்படுத்த அதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவும், நம்பிக்கையும் வேண்டும். ஆனால் இவ்விரண்டுமே கிராமப்புற இந்தியாவில் இல்லை. இந்தியாவின் முறைசார்ந்த வங்கிச் சேவைகளில் ஒருங்கிணைக்கப்படாத மக்களுக்கு உதவி செய்ய தொழில்நுட்பம் மட்டும் போதாது என்று நிசாந்த் கருதுகிறார்.

வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 79 விழுக்காடு அதிகரித்துள்ளது. வங்கிக் கணக்குகளை வைத்திருப்போரிடையே உள்ள பாலின இடைவெளி 6 விழுக்காடாகக் குறைந்துள்ளது (மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 20 விழுக்காடாக இருந்தது).

2017ஆம் ஆண்டில் வங்கிக் கணக்குகள் வைத்திருக்கும் பெண்களில் வெறும் 22 விழுக்காட்டினரிடம் மட்டுமே டெபிட் கார்டுகள் இருந்துள்ளன. ஆனால், 43 விழுக்காடு ஆண்களிடம் டெபிட் கார்டுகள் இருந்துள்ளன.

நான்காவது தேசியக் குடும்ப சுகாதார சர்வேயின் தகவலின்படி, 2015-16ஆம் ஆண்டில் 52 விழுக்காடு பெண்கள் மட்டுமே தங்களின் சொந்தப் பெயரில் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி வருகின்றனர். கிராமப்புறங்களின் பெண்களை வங்கி ஏஜெண்டுகளாக நியமிப்பதன் மூலம் நிதிச் சேவைகளில் பெண்களின் பங்கு மேம்படும் என்று நிசாந்த் கருதுகிறார்.

பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் முன்னேற்றம் இல்லை என்பதைச் சில குறியீடுகள் காட்டுகின்றன. வெறும் 53.5 விழுக்காடு பெண்கள் மட்டுமே நவீன கருத்தடை முறைகளைப் பயன்படுத்துவதாக 2015-16ஆம் ஆண்டின் தேசிய குடும்ப சுகாதார சர்வேயின் தகவல்கள் கூறுகின்றன. 2005-06ஆம் ஆண்டில் நவீன கருத்தடை முறைகளைப் பயன்படுத்திய பெண்களின் விகிதம் 56.3 விழுக்காடாக இருந்துள்ளது. ஆக, பத்து ஆண்டுகளில் 2.8 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது. 2015-16ஆம் ஆண்டில், திருமணமான பிறகு தன் துணையிடம் இருந்து வன்முறையைச் சந்திக்கும் பெண்களின் விகிதம் 28 விழுக்காடாக இருந்துள்ளது. கிராமப்புறங்களிலோ இந்த விகிதம் 31.1 விழுக்காடாக இருந்துள்ளது.

நன்றி: [இந்தியா ஸ்பெண்ட்](http://www.indiaspend.com/cover-story/record-number-of-indians-with-bank-accounts-so-why-is-financial-inclusion-low-13223)

**தமிழில்:** அ.விக்னேஷ்

**நேற்றைய கட்டுரை:** [சிறு தொழில்களைப் பாதிக்கும் வங்கி மோசடிகள்!](http://www.minnambalam.com/k/2018/06/06/11)

**மின்னஞ்சல் முகவரி**: [feedback@minnambalam.com](mailto:feedback@minnambalam.com)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *