சிறப்புக் கட்டுரை: கல்வி மரத்தின் மரணக் கனிகள்!

public

பாரிவேள்

இது தமிழ்நாட்டுக்கு மூன்றாவது மரணம். ஊடகங்களுக்கு இது மர்ம மரணம். காவல் துறையினரைப் பொறுத்தவரை இவை தற்கொலைகள். பெற்றோர்களைப் பொறுத்தவரை கொலைகள்.

2016ஆம் ஆண்டு சரவணன். 2017ஆம் ஆண்டு முத்துகிருஷ்ணன். 2018ஆம் ஆண்டு சரத்பிரபு. இதில் சரவணன் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பவர். சரத்பிரபுவும் மருத்துவ அறிவியல் கல்லூரி மாணவர்தான். இருவரும் திருப்பூரைச் சேர்ந்த்தவர்கள். சரவணனை விஷ ஊசி போட்டுக் கொன்றதாக அவர் தந்தை குற்றம் சாட்டுகிறார். சரத்பிரபு இறந்து கிடந்த அறையில் மருந்து பாட்டில்களும் ஒரு ஊசியும் கிடந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். முத்துகிருஷ்ணன் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாறு படிக்கும் மாணவர்.

இதில் முத்துகிருஷ்ணனின் மரணம் மிகப் பெரிய அரசியல் ஆக்கப்பட்டது. அதற்குக் காரணம், அவர் ஒரு தலித் மாணவர் என்பது. தமிழ்நாட்டில் முத்துகிருஷ்ணனுக்கு நடந்ததுபோலவேதான் ரோகித் வெமுலாவுக்கும் நடந்தது. இருவரும் தலித் மாணவர்கள். இருவரும் தங்கள் வேதனைகளை எழுத்தின் மூலம் வெளிப்படுத்திவிட்டு உயிர் பிரிந்தவர்கள். இருவரின் மரணமும் பல்கலைக்கழகத்தின் மீது மிகப் பெரிய கேள்விகளை எழுப்பியது. இருவரின் மரணமும் அரசியலாக்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் ஊடக வெளிச்சத்துக்கு வந்தவர்கள். தெரிவிக்கப்படாமல் ஆவணங்களில் இறந்து கிடக்கும் இளைஞர்கள் எத்தனை பேர் என்பதும் ‘மர்மம்’தான். இவர்களின் மரணங்களைத் தொடர்ந்து அத்தனை விவாதங்கள். அத்தனை கண்டனங்கள். அத்தனை அரசியல்.

இவ்வளவு பேச்சுகளுக்குப் பிறகும் மரணங்கள் தொடர்கின்றன என்றால், பிரச்னையின் ஆழமும் தீவிரமும் எவ்வளவு அதிகம் என்று அஞ்சத் தோன்றுகிறது. தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களில் அனுபவிக்கும் பிரச்னைகள் ஏராளம். மொழிப் பிரச்னை அதில் முதன்மையானது. அங்கிருந்து ஆரம்பிக்கிறது பிரிவினை. அவற்றைத் தொடர்கின்றன ஏற்றத்தாழ்வுகளும், உளவியல் பிரச்னைகளும்.

தீர்வை நோக்கிய பயணம் என்பது உளவியல் ரீதியானது. இவை தற்கொலைகள் ஆனாலும் சரி, கொலைகள் ஆனாலும் சரி. அவற்றுக்கான காரணம், கொலை செய்தவரின் அல்லது தற்கொலைக்குத் தூண்டியவரின் உளவியல். தற்கொலை செய்தவரின் மனநிலை.

இவற்றையும் தாண்டிய பிரச்னை, இவ்வளவு அழுத்தங்களைக் கொடுக்கும் கல்வி முறை. அந்தக் கல்வி முறையைக் கடைப்பிடிக்கும் அல்லது செயல்படுத்தும் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட கல்வியாளர்கள், ஆசிரியர்கள். சமமான வாய்ப்புகள் மறுக்கப்படுவதும், சமூகத்தின் அழுத்தமும்தான் இந்த மரணங்களுக்குக் காரணம்.

அவற்றைப் பற்றிப் பேசாமல், எல்லாவற்றையும் அரசியலாக்குவது எந்த மரணத்துக்கும் நியாயம் சேர்க்காது. பிரச்னையின் வேரைப் பிடுங்காத வரை, மரணக் கனிகள் விழுந்துக்கொண்டேதான் இருக்கும்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *