சிறப்புக் கட்டுரை: ஊடகங்களின் நம்பகத்தன்மையை மீட்பது எப்படி?

public

தீபான்ஷு மோகன்

கோப்ராபோஸ்ட்டின் ஸ்டிங் ஆபரேஷனுக்குப் பிறகு வெளியான அறிக்கைகள் எதிர் அறிக்கைகள் ஆகியவற்றின் தற்போதைய [தொடர்வரிசை](https://thewire.in/tag/cobrapost-expose-coverage) நமது ஜனநாயகத்தின் நான்காவது தூணான மைய நீரோட்ட ஊடகத் துறை, செய்தி வெளியிடும் நிறுவனங்கள் ஆகியவற்றின் நம்பகத்தன்மை மங்கிவருவதன் சமீபத்திய வெளிப்பாடாகும். மைய நீரோட்ட பத்திரிகைத் துறை ஜனநாயக விழுமியங்களின் முன்னணிப் படையாக இருந்த நிலை மாறிவிட்டது. அது ஆழ்ந்த கவலை தரும் மாற்றத்திற்கு உள்ளாகிவருகிறது. ஒரு சில அச்சமற்ற பத்திரிகையாளர்கள், ஆங்கில மற்றும் உள்ளூர் மொழிச் செய்தி அமைப்புகள் நீங்கலாக, ஊடகங்களின் பொதுவான நிலைமை இதுதான்.

கவலையளிக்கும் இந்த மாற்றத்தைப் பற்றிய பார்வையைப் பெற, உலகளாவிய நிகழ்வுப் போக்கின் ஒரு பகுதியாக இந்திய செய்தித் தொழிலின் மாறிவரும் இயங்குநிலையை ஆராய்வது மிகவும் அவசியமாகும். பத்திரிகைத் தொழில் நடைமுறைகளிலும் அதன் நெறிகளிலும் தொழில்முறை மனோபாவங்கள் விரைவில் மறைந்துவருவதற்கு பல மாறிவரும் காரணிகள் காரணமாக உள்ளன (https://reutersinstitute.politics.ox.ac.uk/sites/default/files/2017-11/The%20Changing%20Business%20of%20Journalism%20and%20its%20Implications%20for%20Democracy.pdf). ரேட்டிங்கிற்கு (TRPக்கு) இசைவான தொலைக்காட்சி செய்தி, பத்திரிகைகளுக்கிடையே விற்பனைப் போர்கள், டிஜிட்டல் சக்தியில் இயங்கும் ஊடக வெளிக்கேற்பத் தங்களை மாற்றிக்கொள்வதற்கான துணைநிலை நடைமுறைச் செலவினங்கள் மற்றும் தகவல் தெரிவிப்பதற்கான செலவினங்கள் அதிகமாக இருப்பது ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்க சில காரணிகள்.

இந்தக் காரணிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து ‘தகவல்சார் பொழுதுபோக்கு’ அடிப்படையிலான செய்தி வெளியீட்டுக்கான வாய்ப்புகளை நோக்கி ஊடக நிர்வாகிகளும் பத்திரிகையாளர்களும் செல்வதை அதிகரிக்கும் வகையில் நிர்பந்திக்கின்றன. அதிகார மையங்கள் மற்றும் சொந்த நலன்கள் அடிப்படையில் இயங்கும் குழுக்கள் முன்பு எந்த நிபந்தனையுமின்றி அடிபணிந்துபோகும்படி அவர்களை நிர்பந்திக்கிறது. இத்தகைய சக்திகளின் நலன்களும் தங்களுடைய சொந்த பிசினஸ் நலன்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவையாக இருப்பதாக அவர்கள் பார்க்கின்றனர்.

இந்த விஷயத்தின் மையக்கருவாக இருக்கும் பிரச்சினை தவறாக வடிவமைக்கப்பட்டுள்ள வருவாய் கட்டமைப்போடு நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சம் விளம்பரங்கள் மூலமாகவும் விற்பனை வாயிலாகக் கிடைக்கும் வருவாய் மூலமாகவும் செய்தியை வணிகரீதியானதாக ஆக்குவதற்கான தனியார் துறை ஊடகச் சந்தையின் நோக்கம் பத்திரிகைகள் செய்தி தொகுத்தளிக்கும் முறை எனும் தொழில் மற்றும் அதன் நோக்கம் ஆகியவற்றையே மறுவரையறை செய்கிறது. அது மட்டுமல்ல, ஜனநாயகத்தோடு அதற்கு இருக்கும் உறவையே அது ஆபத்துக்குள்ளாக்குகிறது. .

**டிஜிட்டலால் வந்த பாதிப்பு**

கடந்த பத்தாண்டுகளில் இணையதளத்தில் பயன்பாட்டாளர்களோடு பரஸ்பர தொடர்புடன் உள்ள டிஜிட்டல் பொருளாதாரம் உதயமானது. உலகெங்கிலும் தனியார் துறை நடத்தும் செய்தி வெளியீட்டு பிசினஸ்களில் பெரும்பாலானவற்றில் இருந்த வருவாய் – ஊக்கத்தொகை மாதிரிகளை இது சீர்குலைத்தது. உலகில் மிக அதிக இணையப் பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடுகளாக இந்தியாவும் சீனாவும் மாறியுள்ளன. இருப்பினும், மக்கள்தொகையில் இணையத்தைப் (செய்திக்கான ஒரு தோற்றுவாயாக) பயன்படுத்துபவர்களின் சதவிகிதம் பின்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் மிகவும் அதிகமாக உள்ளது. இந்தியா, சீனம், பிரேசில் போன்ற நாடுகள் (அவற்றின் பயன்பாட்டாளர் எண்ணிக்கையைக் கணக்கிலெடுத்துப் பார்க்கும்போது) டிஜிட்டல் ஊடகச் சந்தை வெளியில் வளர்ந்துவரும் சக்திகளாக உள்ளன. நாடுகளைக் கடந்த ஊடகப் பெருங்கூட்டமைப்புகள் செய்தி வெளியிடும் பிசினஸின் எதிர்காலம் வளர்ந்துவரும் இந்த நாடுகளில்தான் அடங்கியுள்ளதாகப் பார்க்கின்றன.

**இணையதளத்தைப் பயன்படுத்திடும் தனிநபர்கள் (மக்கள்தொகையில் சதவிகிதம்)**

*அட்டவணை: தி வயர்*

*ஆதாரம்: உலக வங்கி புள்ளிவிவர அடிப்படையில் கட்டுரை ஆசிரியர் கணக்கிட்டது.*

உலகெங்கிலும் செய்திப் பத்திரிகைகள் மற்றும் பருவ இதழ்கள் ஆகியவை மீது உலக அளவிலான டிஜிட்டல் ஊடகங்களின் தாக்கம் எப்படி இருந்தது என்பதைப் பற்றி ப்ரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் (PWC) சமீபத்தில் விரிவான [ஆய்வு]( https://www.pwc.com/gx/en/entertainment-media/pdf/newspapers-and-magazines-outlook-article.pdf) ஒன்றை நடத்தியது. டிஜிட்டல் வெளியை வணிகமயமாக்குவதையே அதிகம் சார்ந்திருந்ததானது பெரும்பாலான செய்தி நிறுவனங்களை தங்கள் பழைய வருவாய் மாடல்களுக்குப் பதிலாக விளம்பரம் மற்றும் செய்தி உருவாக்கப்படும் விதத்திலும் அதைப் பல்வேறு ஊடகங்களுக்கு விநியோகிப்பதிலும் கவனம் செலுத்தின. தரம் சார்ந்த நிர்பந்தங்கள் இதில் அதிகம் ஏற்பட்டன.

தொழில்நுட்பத்தின் காரணமாகச் செய்தி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கதே. ஏனெனில் அது செய்தியை அளிப்பவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதற்கான நிதிச் செலவு எங்கனம் ஈடுகட்டப்படுகிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம். ஏனெனில் பெரும்பாலான தனியார் செய்தி நிறுவனங்கள் பெரும்பாலும் விளம்பரங்களையே நம்பியிருக்கின்றன.

டிஜிட்டல் மற்றும் பிரின்ட் செய்தி அமைப்புகளின் வருடாந்தர வளர்ச்சி விகிதத்தோடு டிஜிட்டல் ஊடகத்தின் மொத்த விளம்பர மற்றும் நுகர்வோரிடமிருந்து வரும் வருவாயோடு ஒப்பிடும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் செய்தித்தாள் தொழில் எந்த அளவுக்கு டிஜிட்டல் மயமாகியுள்ளதோ, அந்த அளவுக்கு அதன் ஒட்டுமொத்த வருவாய் குறையக்கூடும் என இது காட்டுகிறது. விளம்பர அடிப்படையில் பகிர்ந்துகொண்டு வழங்கப்படும் சேவைகள், செய்தி அமைப்புகளை வெளியாருக்குக் கொடுத்து கூகுள், ஃபேஸ்புக் ஆகியவற்றை பிசினஸ் வரம்புக்குள் நுழைய அனுமதிப்பது போன்றவை இதற்குக் காரணமான இதர போக்குகள்.

இந்த நிகழ்வுப் போக்கின் விதிவிலக்குகள் ஜெர்மனி, பின்லாந்து போன்ற நாடுகள். இந்நாடுகளில் மற்ற நாடுகளோடு ஒப்பிடத்தக்க அளவுக்கு இணையதளப் பயன்பாடு பரவியுள்ளது. ஆனால் இந்நாடுகள் வலுவான அரசு ஆதரவைப் பெறும் பொதுத் துறை சேவை ஊடக நிறுவனங்களைக் (பல்வேறு ரக ஊடக தளங்களினூடாகச் செயல்படுபவை) கொண்டிருக்கின்றன. அவை (இணைய) விளம்பரத்தைத் தனது வருவாய்க்கான பிரதான ஆதாரமாகக் குறைந்த அளவே சார்ந்திருக்கின்றன; அதிக அளவிலான பொதுத் துறை முதலீட்டால் இவை பலன் பெறுகின்றன.

*டிஜிட்டல்மயமாதலின் அளவும் செய்தித்தாள்களின் வருவாய் அதிகரிப்பு மதிப்பீடும், நாடு வாரியாக, 2015–2020.*

*ஆதாரம்: உலகப் பொழுதுபோக்கு மற்றும் ஊடகக் கண்ணோட்டம், 2016–2020, PwC.*

வேகமாக டிஜிட்டல் மயமாகிவரும் செய்தி வெளியில் பல்வகைப்படுத்தப்பட்ட வருவாய் – ஊக்கத்தொகை தொகுப்பு இல்லாதிருப்பது வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் ஆகிய இரண்டிலுமே ஊடகச் சந்தைகளில் பரந்த வேறுபாடுகளை உருவாக்குகின்றன. இந்த வேறுபாடுகள் 2007–08 உலக நிதி நெருக்கடி ஆண்டுகளில் தீவிரமடைந்தன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கை 2007–08 நெருக்கடிக்குப் பிந்தைய சூழலில் செய்தித்தாள் வெளியிடும் பிசினஸையும் மொத்த விளம்பரச் செலவுகளுக்கும் அதற்கும் இருந்த உறவையும் பற்றிய அதிக துல்லியமான சித்திரத்தை நமக்கு அளிக்கின்றன. OECD மதிப்பீடுகளின்படி, ஊடகக் சந்தையில் தனியார் முதலீட்டின் அடிப்படையிலான ஊடகங்களின் பங்கு அதிகமாக உள்ள நாடுகளில் வருவாயில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கான எண்ணிக்கைகள் வியக்கவைக்குமளவுக்கு உள்ளன. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் அது –20% ஆகவும் இங்கிலாந்தில் –21% ஆகவும் இருந்தது. ஆனால், (அதிகப் பொதுத் துறை முதலீடு ஊடகச் சந்தைக்கு உதவிய) இதர பல வளர்ச்சியடைந்த நாடுகளில் இது அந்த அளவுக்கு இல்லை (ஜெர்மனியில் –10%, பின்லாந்தில் –7%, மிகவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பிரான்சில் –4%).

*மொத்த செய்தித்தாள் வெளியீட்டு வருவாயில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த மதிப்பீடுகள்.*

*ஆதாரம்: OECD புள்ளிவிவரங்கள் மற்றும் PWC அறிக்கையிலிருந்து (2010) எடுக்கப்பட்ட கூடுதல் விவரங்கள்.*

இந்தியாவில் செய்தித்தாள் வெளியிடுதலின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வந்தபடியால் (9%) இந்தியா விதிவிலக்காக இருந்தது. இந்தியாவைத் தவிர பல நாடுகளில் நிதி நெருக்கடி – சில நாடுகள் விஷயங்களில் உள்நாட்டுப் பொருளாதாரத் தேக்க நிலை, வீடுகட்டுதலில் வீழ்ச்சி, இதர சம்பந்தப்பட்ட இறங்குமுக வீழ்ச்சிகளால் இது மேலும் தீவிரப்படுத்தப்பட்டது – மொத்த விளம்பரச் செலவுகளில் தேக்கத்திற்கும் சிலநாடுகள் விஷயங்களில் உண்மையில் வீழ்ச்சிக்கும் இட்டுச்சென்றது.

2008–09க்குப் பிந்தைய காலகட்டத்தில் விளம்பரச் செலவுகளைச் செய்யும் முக்கிய நாடுகள் அனைத்திலும் விளம்பரச் செலவினங்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்பட்டது. இந்தியாவின் விளம்பரச் செலவு ஆண்டுக்கு ஆண்டு என்ற கணக்கில் 16–18% க்கும் அதிகமான சராசரி அதிகரிப்பைக் கண்டது. இது செய்தி அமைப்புகள் தங்களது வருவாய் ஆதாரமாக விளம்பரங்களையே சார்ந்திருந்தமையைப் பிரதிபலித்தது. இந்தியாவின் இதர தனியார் செய்தி மேடைகளைப் பொறுத்தவரையிலும்கூட (இதர தனியார் டெலி-செய்தி மற்றும் டிஜிட்டல் செய்தி வெளிகள் உள்பட) நிலவரம் இப்படியே இருந்தது.

*ஆதாரம்: WARC லிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் (2009)*

**‘பணத்துக்காகப் போடப்படும் செய்தி’யைச் சார்ந்திருப்பது**

விளம்பரம் சார்ந்த தனியார் ஊடகச் சந்தையில் வருவாய் வளர்ச்சி நிலையற்று இருக்கையில் பிரதான நீரோட்ட செய்தி நிறுவனங்கள் ‘பணம் கொடுத்துப் போடச் சொன்ன செய்தியைப்’ போடத் தலைபட்டனர். இதற்கான எடுத்துக்காட்டுகள் அக்டோபர் 2009 மகாராஷ்டிரா மாநில தேர்தல்களின் போது பி.சாய்நாத் இது குறித்துப் [பதிவுசெய்திருக்கிறார்](www.thehindu.com/opinion/columns/sainath/Mass-media-masses-of-money/article13666074.ece). அப்போது முதல்வராக இருந்த அசோக்ராவ் சவான் தனது தேர்தல் வாய்ப்புகளை அதிகரிக்க மூன்று முன்னணி மராத்தி பத்திரிகைகளில் ‘செய்தி’ வெளியிடுவதற்கான இடத்தை வாங்கினார்.

அந்நேரத்தில் இந்திய பிரஸ் கவுன்சில் இவ்வாறு கூறியது: ‘பணம் பெற்று செய்தி போடுவது’ என்ற போக்கு தனிநபர் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் ஆகியோரின் ஊழலோடு நிற்பதில்லை. அது எங்கும் நிறைந்ததாகவும், நன்கு கட்டமைக்கப்பட்டதாகவும் உயர்ந்த அளவில் அமைப்பாக்கப்பட்ட ரீதியானதாகவும் உள்ளது. இது இந்திய ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்துகிறது. பொழுதுபோக்குத் துறைகளிலும் பிரபலங்களை மையமாகக் கொண்டு போடப்படும் செய்தி கலாச்சாரம் அதிக கிளிக்குகளையும் வாசக ஆர்வத்தையும் தூண்டி இதர செய்தி – நிகழ்வுகளைப் பின்னுக்கு தள்ளுகிறது. விளையாட்டுத் துறையிலும் இத்தகைய எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

**வருவாய் ஆதாரங்களைப் பல்வகைப்பட்டதாக்குவது**

பன்முகப்பட்ட ஊடக ரகங்கள் இன்னும் பரந்த அளவிலான தகவலையும் செய்தி பகுப்பாய்வையும் பெற மக்களுக்கு உதவுகிறது என்பதை அங்கீகரிக்கவேண்டிய அவசியம் உள்ளது. பல ரக செய்தி தளங்களில் பலப்பல செய்தி நிறுவனங்கள் இருப்பது நேரடியாகவும் மையப்படுத்தப்பட்ட முறையிலும் தகவலைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அதிகாரத்தைக் குறைக்கிறது.

NDTV 24X7 போன்ற ஊடக நெட்வொர்க்குகளும் தி வயர், தி குயின்ட, ஆல்ட் நியூஸ் போன்ற டிஜிட்டல் தளங்களும் தகவல் சுதந்திரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாலின சமத்துவமின்மை போன்ற பொதுநல லட்சியங்களுக்காக உணர்வு செறிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொள்கைகளைத் திருத்தும்படியும் கொள்கைகள் பற்றிய உரையாடல்களை துவக்கும்படியும் அரசாங்கத்தை நிர்பந்தித்துள்ளன.

சொந்த முதலீட்டில் சொந்தமாக நடத்தப்படும் செய்தி நிறுவனங்கள் விளம்பரங்களைச் சார்ந்தோ அல்லது கார்ப்பரேட் சேனல்களைச் சார்ந்தோ இருப்பதற்குப் பதிலாக, போட்டியிடத்தக்க சந்தைக் கட்டமைப்புக்குள் பன்முகப்படுத்தப்பட்ட வருவாய் மாடலின் கீழ் இயங்குவதன் மூலம் மட்டுமே இயங்க முடியும்.

செய்தி நிறுவனங்களுக்கான வருவாய் – ஊக்கத்தொகை கட்டமைப்புகளை பன்முகப்படுத்துவதற்கு செய்தி நிறுவனங்களுக்கு நீண்டகால மூலதனத்தை வழங்கக்கூடிய ஸ்டார்ட்அப்புகள் உள்பட ஆக்கபூர்வமான நிதி நிறுவனங்களையும் சேனல்களையும் வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது. இ-வணிகம், உயிரியல் தொழில்நுட்பம் (பயோடெக்), மருந்து தயாரித்தல் போன்ற இதர பிசினஸ் துறைகளில் செழித்திருக்கின்ற வெஞ்ச்சர் மூலதன (VC) முதலீட்டு முறைகளை முன்னெடுக்கலாம்.

வெஞ்ச்சர் மூலதன முதலாளியின் பாத்திரம் முதலீட்டு நிதியை அளிப்பது மட்டுமல்ல. செய்தி பிசினஸில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எங்கு தங்கள் பணத்தைப் போடுவது என்று தெரியாத முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பாதகமான தேர்வு என்ற ஆபத்துகளிலிருந்து வெஞ்ச்சர் மூலதன முதலாளி தப்பித்துக்கொள்ளலாம். அதைவிட முக்கியமாக, செய்தி நிறுவனங்களுக்கு நீண்டகால அடிப்படையில் நம்பகமான நிதியாதாரத்தை அளிக்கலாம். வேறு எந்த ஸ்டார்ட்அப்புகளையும் போல செய்தி ஸ்டார்ட்அப்புகளும் வருடக்கணக்கில் லாபமீட்டாமல் இருக்கக்கூடும். எனவே அவை கடன் வாங்காமலிருப்பது நல்லது.

வருவாய்க்கான சரியான கட்டமைப்பு இல்லாமல், ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு மிகவும் இன்றியமையாத் தேவையான பத்திரிகைத் தொழிலின் நேர்மையில் வைக்கப்பட்டுள்ள சமூக நம்பிக்கை திரும்பப்பெற முடியாததாக ஆகிவிடலாம்.

*கட்டுரையாளர் தீபான்ஷு மோகன் O. P. ஜிண்டால் அகிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜிண்டால் சர்வதேச விவகாரக் கல்லூரியில் துணைநிலை பேராசிரியராக இருக்கிறார்.*

**நன்றி: [தி வயர்](https://thewire.in/media/for-the-media-to-regain-credibility-the-business-of-news-needs-to-change)**

**தமிழில்: பா.சிவராமன்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *