சண்டே சக்சஸ் ஸ்டோரி: இந்திரா நூயி – சென்னை முதல் அமெரிக்கா வரை!

public

இன்றைய சக்சஸ் ஸ்டோரியில், தமிழகத்தில் பிறந்து, அமெரிக்காவின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமான பெக்சிகோவின் தலைவராகப் பதவி வகிக்கும், சிறந்த பெண் தொழில்முனைவோருக்கு உதாரணமாகத் திகழ்ந்துவரும் இந்திரா நூயியின் வெற்றிக்கதை குறித்துப் பார்க்கலாம்.

சென்னையைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் கடந்த 1955ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி இந்திரா நூயி பிறந்தார். அக்காலகட்டத்தில் பெண்கள் வீட்டோடுதான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு எதிராக, தான் ஏதேனும் மிகப்பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற இலக்கோடு தனது குழந்தைப்பருவம் முதலே இந்திரா நூயி மன உறுதியுடன் இருந்தார். பல்வேறு திறமைகளைத் தன்னடக்கிய அவர், கல்லூரிப் பருவத்தில் பெண்களுக்கான கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடியதோடு, முழுக்க பெண்களை மட்டுமே கொண்ட பேண்ட் இசைக்குழுவில் நூயி சிறந்து விளங்கினார். பல்வேறு திறமைகளைக் கொண்டிருந்த நூயி, சென்னையிலேயே இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய பிரிவுகளில் இளங்கலைப் பட்டங்களைப் பெற்று கொல்கத்தா தொழில்நுட்பக் கல்லூரியில் ஃபைனான்ஸ் மார்கெட்டிங் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பின்னர் எம்.பி.ஏ. படிப்பை முடித்த இந்திரா நூயி, ஏ.பி.பி. நிறுவனத்திலும் அதைத் தொடர்ந்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திலும் இணைந்து தயாரிப்பு மேலாளராகச் சிறிது காலம் பணியாற்றினார். இவரது பணிக்காலத்தில்தான் ’ஸ்டேஃபிரீ’ சானிடரி நாப்கின்கள் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இப்பணிகள் தனது பயணத்தை நிறைவு செய்யாது என்பதை உணர்ந்த இந்திரா நூயி, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பொது மற்றும் தனியார் மேலாண்மை பிரிவில் பட்டம் பெற்றார்.

இவர் யேல் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, வரவேற்பாளர் பணிக்கான ஒரு நேர்காணலுக்கு மேற்கத்திய ஆடையில் சென்றார். அப்போது அந்த உடையானது அவருக்குப் பொருத்தமாக இல்லை என்பதைக் காரணம்காட்டி அவரை நிராகரித்துவிட்டனர். ”உனக்குப் பொருத்தமான மற்றும் பிடித்தமான ஆடையை அணிந்து செல்வதே உகந்தது” என்று அவரது பேராசிரியர் வழங்கிய ஆலோசனையின்படி, அதற்கடுத்த நேர்காணலில் சேலை அணிந்து சென்றவர், அதன் பின்னர் சேலை அணிந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனமான பெக்சிகோவில் 1994இல் இணைவதற்கு முன்பாக இந்திரா நூயி போஸ்டன் கன்சல்டிங் குழுமம் மற்றும் மோட்டோரோலா நிறுவனங்களில் பணியாற்றினார். பின்னர் பெப்சி நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக இருந்த ரோஜர் என்ரிகோ பதவிக்காலம் முடிந்த பின்னர் அவரது இடத்தை நூயி நிரப்பினார். இந்நிறுவனத்தின் கே.எஃப்.சி., பிட்சா ஹட், டாகோ பெல் போன்ற கிளைகளின் தலைமை மூலோபய அதிகாரியாகப் பணியாற்றினார். இயக்குநர் குழு, தலைவர், தலைமை நிதியதிகாரி என்று நூயியைத் தேடி பதவிகள் வந்தன.

2006ஆம் ஆண்டில் எவரும் எதிர்பார்த்திராத வகையில் பெக்சிகோ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக இந்திரா நூயி அறிவிக்கப்பட்டார். இவரது செயல்பாட்டின் கீழ் பெப்சிகோ நிறுவனத்தின் வருவாய் இரட்டிப்பு வளர்ச்சி பெற்று 5.6 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. ட்ரோபிகானா, குவாக்கர் போன்ற ஜூஸ் பிராண்டுகளை பெக்சிகோ நிறுவனம் கைப்பற்றியதில் இந்திரா நூயியின் பங்கு இன்றியமையாதது. பெக்சிகோவின் தலைமைச் செயலதிகாரியாக உள்ள இந்திரா நூயி, ஒரு பெண் சர்வதேச அளவில் மிகப்பெரிய பொறுப்புகளை எளிதாகக் கையாள முடியும் என்பதற்கு ஒரு சிறந்த முன் உதாரணமாகத் திகழ்ந்து வருகிறார். வளர்ந்துவரும் இளம் பெண் தொழில்முனைவோருக்கு இவரது வாழ்க்கை மற்றும் தொழில்துறை பயணம் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.

பல்வேறு விருதுகள் பெற்றுள்ள இந்திரா நூயியிக்கு, 2009இல் உலகின் சிறந்த தலைமைச் செயலதிகாரி, 200ஈல் தொழிற்துறையில் அமெரிக்காவின் சிறந்த தலைவர் போன்ற விருதுகள் குறிப்பிடத்தகுந்தவை. 2006 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் இவரை உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்மணியாக ஃபார்சூன் பத்திரிகை அறிவித்தது. அதேபோல, ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் உலகின் தலைசிறந்த 100 சக்திவாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் மூன்றாம் இடத்தைத் தனதாக்கினார்.

இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, படித்து, தனது அறிவாலும், உழைப்பாலும், சீரிய நடவடிக்கைகளாலும் சர்வதேச அளவில் முத்திரை பதித்த இந்திரா நூயியால் இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழகத்துக்கும் பெருமை என்பதில் ஐயமில்லை.

”தலைமைப் பண்பு என்பது விவரிக்க இயலாதது; சிறந்த தலைமைப் பண்பு என்பது அதைவிடக் கடினமானது. ஆனால், கடினமான சூழலிலும் உங்களைப் பின்தொடரும் மக்களை உங்களால் பெறமுடியுமானால் நீங்களே மிகச்சிறந்த தலைவர் ஆவீர்” – இந்திரா நூயி.

தொகுப்பு: [நா.செந்தில் குமார்](https://www.facebook.com/Senthilhardy)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *