கூட்டணி வேறு, கொள்கை வேறு: விளக்கமளித்த முதல்வர்!

public

அதிமுக-பாமக கூட்டணி குறித்து விளக்கமளித்த முதல்வர், “கூட்டணி வேறு, கொள்கை வேறு” என்று தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் விறுவிறுப்புகள் கூடியுள்ள நிலையில், தமிழகத்தில் பேச்சுவார்த்தைகள் முடிந்து கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டுவருகிறது. அதிமுகவோடு பாமக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதில் பாமகவுக்கு 7+1 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிமுகவை கடுமையாக விமர்சித்த பாமக தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதை எதிர்க்கட்சிகளும், சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.

இந்த நிலையில் சேலத்தில் இன்று (பிப்ரவரி 25) நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “பல கட்சிகளும் மாறிமாறிதான் கூட்டணி அமைத்து வருகின்றன. அதிமுகவோடு மட்டும் பாமக கூட்டணி வைக்கவில்லை. திமுகவை விமர்சித்தபோதும் கூட அவர்களுடனும் கூட்டணி வைத்துள்ளது. கூட்டணி என்பது வேறு, கொள்கைகள் வேறு. தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவும் மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவுமே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “தமிழக அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் காரணத்தால் மக்கள் மத்தியில் அதிமுகவின் செல்வாக்கு கூடியுள்ளது. இதனால் மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் மகத்தான வெற்றிபெறுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்த முதல்வர், தங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று எதிர்பார்ப்பதாகவும், தேமுதிகவுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும், கூட்டணி இறுதி செய்யப்பட்ட பிறகு அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது தெரியவரும் எனவும் தெரிவித்தார்.

தினகரன் குறித்த கேள்விக்கு, “தேர்தலில் தினகரன் 38 இடங்களில் அல்ல 534 தொகுதிகளிலும் போட்டியிட்டாலும் எங்களுக்கு கவலையில்லை. அவரது கட்சி பெரிய கட்சி அல்லவா; இதுவரை அவரது கட்சியைப் பதிவு செய்தாரா இல்லையா என்று கூட தெரியவில்லை” என்று விமர்சித்தார்.

சமூக செயற்பாட்டாளர் முகிலன் குறித்து அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தால் உரிய முறையில் அவரை கண்டுபிடித்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும். தனிப்பட்ட நபருக்காக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டக்கூடாது எனக் கூறிய முதல்வர், குதர்க்கமாகக் கேள்வி கேட்க வேண்டாம் என்றும் தங்களுக்கு சாதகமான கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றும் ஊடகங்களிடம் கேட்டுக்கொண்டார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *