]காவிரி: மோடிக்கு கிரண் பேடி கடிதம்!

public

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமெனக் கோரி, இன்று (ஏப்ரல் 2) பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி. மத்திய அரசை எதிர்த்துப் புதுச்சேரி மாநில அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரத் துணைநிலை ஆளுநர் அனுமதியளிக்கவில்லை என்று, கவர்னர் மாளிகை எதிரே அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்திய நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 16ஆம் தேதியன்று காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கில், புதுச்சேரி மாநிலத்துக்கு 7 டிஎம்சி நீர் வழங்கப்படும் என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் விதித்த உத்தரவிலும் இதே அளவு குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இம்முடிவைச் செயல்படுத்தும் வகையில் காவிரி விவகாரத்தில் புதிய திட்டத்தை உருவாக்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தது. நடுவர் மன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டபடி, செயல்திட்டம் என்பது காவிரி மேலாண்மை வாரியத்தையே குறிக்கும் என்று தமிழக அரசின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதே நிலைப்பாட்டில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டுமெனக் கோரியது புதுச்சேரி மாநில அரசு.

மார்ச் 29ஆம் தேதியன்று குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்தது புதுச்சேரி மாநில அரசு. இதற்கு, அம்மாநிலத் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அனுமதி மறுத்ததாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி, மணிகண்டன் ஆகியோர், இன்று அங்குள்ள கவர்னர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.

இந்த நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார் கிரண்பேடி. அதில், புதுச்சேரி மாநில மக்களின் நலன் கருதி, கால தாமதமின்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.

”புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள காரைக்கால் பகுதி, காவிரி நீர் பாயும் கடைப்பகுதியாகும். இங்கு நடைபெறும் விவசாயப் பணிகள் காவிரி நீரை நம்பியே உள்ளன. காவிரியிலிருந்து குறைந்த அளவு நீரே திறந்துவிடப்படுவதால், இங்கு நீர் வருவதில்லை. பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 7 டிஎம்சி நீர் புதுச்சேரிக்கு வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பின்படி, இதனைக் கண்காணிக்கக் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க வேண்டியது முக்கியம்.

தற்போது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு, மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மூன்று மாத கால அவகாசம் கேட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று காரைக்கால் விவசாயிகள் நீண்டகாலமாகக் காத்திருக்கின்றனர். இந்தக் கால தாமதமானது, விவசாய சமூகத்தினர் மத்தியில் பதற்றத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.

புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக, இந்த அமைப்புகளை நிறுவுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு இடைக்கால மனு அளிக்க அனுமதித்துள்ளதாகவும் கூறியுள்ளார். “இந்த விவகாரத்தில், எந்தத் தாமதமும் இல்லாமல் உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் நீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைக்கவும் சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *