}கனிமொழியை வெளியேற்றவே ராஜினாமா சதி: தம்பிதுரை

public

நாடாளுமன்றத்தில் இருந்து கனிமொழியை வெளியேற்றவே எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்துவதாக குறிப்பிட்ட தம்பிதுரை, “காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவோம்” என்றும் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். எனினும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை டெல்லியில் இன்று (மார்ச் 23) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காலையில் நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பாக தர்ணா போராட்டத்தை நடத்தினோம். பின்னர் அவை கூடியதும் அங்கும் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை எடுத்துக்கூறியுள்ளோம். இன்றும் அவை முடக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை என்பதுதான் உண்மை. எனினும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்தார்.

மேலும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக கொண்டுவரவேண்டும் என்று ஸ்டாலின் கூறுகிறார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர 54 எம்பிக்கள் தேவை. அதிமுக சார்பில் 37 எம்பிக்கள்தான் உள்ளோம். நாங்கள் எப்படி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியும்? மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மற்ற கட்சிகளின் ஆதரவு கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் காங்கிரஸ் ஆதரிக்குமா என்று ஸ்டாலின்தான் கூற வேண்டும். அவர்தான் கூட்டணியில் உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அதிமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் நாங்கள் ஆதரிப்போம் என சோனியாகாந்தி, ராகுல்காந்தி சொல்லட்டும், நாங்கள் கொண்டுவருகிறோம்.

இரண்டாவதாக, தெலுங்கு தேசம் கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கக் கூடாதா என்ற கேள்வி எங்கள் முன் வைக்கப்படுகிறது. நமக்கு என்று ஒரு கொள்கை இருக்கிறது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆந்திர அரசு தமிழகத்தை எப்படி வஞ்சிக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். காவிரி நீரைப் பெறுவதற்கு எப்படி அவதிப்படுகிறோமோ அதேபோல் பாலாற்று நீரைப் பெறமுடியாமலும் அவதிப்படுகிறோம். ஆங்காங்கே தடுப்பணை கட்டி ஆந்திர அரசு தமிழகத்தை வஞ்சித்துவருகிறது. ஆந்திராவுக்குக் கூலி வேலைக்குச் செல்லும் விவசாயிகள், செம்மரம் வெட்டியதாகக் கைது செய்யப்படுகின்றனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்படி தமிழகத்தை வஞ்சிக்கும் ஆந்திராவுக்குத் துணைபோக வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறாரா?

எங்களை ராஜினாமாசெய்ய வேண்டும் என்று ஸ்டாலின் சொல்லுகிறார். ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தேவையில்லாதது. இலங்கைத் தமிழர் பிரச்சினையின்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளிவருவோம் என்று திமுக அறிவித்தது. மு.க. அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரின் பதவியை காலி செய்வதற்காகவே ஸ்டாலின் அப்படிச் செய்தார். தற்போது, நாடாளுமன்றத்திலிருந்து கனிமொழியை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவும், அரசியல் சித்து விளையாட்டுக்காகவும் எம்பிக்கள் ராஜினாமா குறித்து ஸ்டாலின் பேசுகிறார். இதில் அதிமுக சிக்கிக்கொள்ளாது.

பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழகத்தை எப்படிக் காப்பது என்பது எங்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்தார்.

“காவிரி விவகாரத்தில் தெளிவான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அரசியலுக்காகக் கர்நாடக அரசு இதனை எதிர்க்கிறது. 29ஆம் தேதி வரை காத்திருப்போம். அதன் பிறகு என்ன போராட்டம் மேற்கொள்வது என்பதை அறிவிப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *