~அனுமதியின்றி பள்ளிகள்: உயர் நீதிமன்றம் கேள்வி!

public

‘அனுமதியின்றி பள்ளிகள் நடத்துபவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ எனத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அனுமதியின்றி நடத்தப்படும் பள்ளிகள் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டுவரும் வித்யா மந்தீர் என்னும் தனியார் பள்ளியின் தகுதி சான்றிதழ் 2009ஆம் ஆண்டுடன் முடிவு பெற்றுள்ளது. சான்றிதழைப் புதுப்பிக்க 2011ஆம் ஆண்டு தமிழக அரசிடம் பள்ளி சார்பில் முறையிடப்பட்டது. ஆனால், தற்போது வரை சான்றிதழ் புதுப்பிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்தப் பள்ளியின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘எங்கள் பள்ளியை மூட வேண்டும் என்பதற்காகச் சான்றிதழ் வழங்காமல் அரசு காலம் தாழ்த்துகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்பு நேற்று (ஆகஸ்ட் 22) வந்தது. அப்போது, பள்ளிக்குச் சான்றிதழ் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘தொடர்ந்து 9 ஆண்டுகளாகச் சான்றிதழ் இல்லாமல் பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது?’ எனக் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் ஒரு பள்ளியை மட்டும் வைத்து தீர்ப்பு கூற முடியாது எனத் தமிழக அரசுக்கு 13 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

* அங்கீகாரம் இல்லாமல் தமிழகத்தில் எத்தனைப் பள்ளிகள் செயல்படுகின்றன?

* அங்கீகாரம் பெற்ற பிறகுதான் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா?

* பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்கின்றனரா?

* அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

* அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள்மீது அபராதம் விதிக்கப்படுகிறதா? சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?

* அனுமதியின்றி பள்ளிகள் நடத்துபவர்களை ஏன் கைது செய்யக் கூடாது?

* மாவட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகள் கல்வி ஆண்டின் தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ ஆய்வு நடத்துகிறார்களா? ஆய்வு நடத்தியிருந்தால் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை முறை ஆய்வு நடத்தப்பட்டுள்ளது?

உள்ளிட்ட 13 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் வரும் 30ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியாவில் இயங்கும் அனைத்துத் தனியார் பள்ளிகளும், அந்தந்த மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றே இயக்கப்பட வேண்டும். மாநில அரசு நிர்ணயிக்கும், விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் இருந்தால் மட்டுமே அந்த அங்கீகாரம் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *