அத்திவரதர் தரிசனம் நீட்டிப்பு: நீதிமன்றம் மறுப்பு!

public

அத்திவரதர் தரிசன காலத்தை நீடிப்பது குறித்து அரசும் அறநிலையத் துறையும்தான் முடிவு செய்ய முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய அத்திவரதர் வைபவம் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் பக்தர்களின் கூட்டம் அத்திவரதரைக் காண அலைமோதுகிறது. கடந்த 44 நாள்களில் 90 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அத்திவரதர் தரிசன காலத்தை நீட்டிப்பு செய்ய தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கோரிக்கைகளை ஏற்க கோவில் நிர்வாகமும் அரசும் மறுத்துவிட்டன. நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளும் முடித்துவைக்கப்பட்டன.

இந்த நிலையில் அத்திவரதர் வைக்கப்படும் அனந்தசரஸ் குளம் எப்படி சுத்தப்படுத்தப்படுகிறது என்பது குறித்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பாக நேற்று (ஆகஸ்ட் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்க்கக் கோரி சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். ஆனால், குளத்தைச் சுத்தப்படுத்த கோரிய வழக்கில், தரிசனத்தை நீட்டிக்க கோரும் மனுவை ஏற்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். மேலும், அத்திவரதர் தரிசனத்தை நீட்டிப்பது என்பது அரசின் முடிவுக்கு உட்பட்டது எனவும் கூறினார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏராளமான மக்கள் தரிசனம் செய்யாததால் பொது நலனைக் கருதி தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரினார். ஆனால், தரிசனம் நீட்டிக்கப்பட மாட்டாது என அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியிருப்பது குறித்து அரசுத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த விவகாரத்தைப் பொதுநல மனுவாகத் தாக்கல் செய்ய விரும்பினால் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு அதைத் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தன் முன்பாக தொடர்ந்து வாதாடினால் மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் போவதாகவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இதை அடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

நேற்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா, அத்திவரதர் தரிசன காலம் நீட்டிக்கப்பட மாட்டாது என உறுதிசெய்தார்.

இன்று (ஆகஸ்ட் 15) ஆடி கருட சேவை இருப்பதால் கிழக்குக் கோபுர வாசல் நண்பகல் 12 மணிக்கு மூடப்படும் என்றும் 12 மணிக்குள் கோயிலுக்கு உள்ளே வந்தவர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 4 மணிக்குத் தொடங்கும் ஆடி கருட சேவை இரவு 8 மணிக்கு முடிவடையும். இரவு 8 மணிக்குப் பிறகு பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள். நள்ளிரவு 12 மணிக்குக் கோயில் மூடப்படும்வரை பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

நாளை மறுதினம் (ஆகஸ்ட் 17) அத்திவரதர் அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுவார் என்பதால் விஐபி தரிசனம் நாளை கிடையாது. நாளை (ஆகஸ்ட் 16) இரவோடு பொது தரிசனமும் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் (ஆகஸ்ட் 17) அத்திவரதரை அனந்தசரஸ் குளத்துக்குள் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறவுள்ளன.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்திடம் மன்னிப்பு கேட்ட எடப்பாடி- கோபப்பட்ட பன்னீர்!](https://minnambalam.com/k/2019/08/14/75)**

**[நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!](https://minnambalam.com/k/2019/08/14/18)**

**[வேலூர் ரிசல்ட்: அதிமுக – பாஜக மோதல்!](https://minnambalam.com/k/2019/08/14/21)**

**[எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!](https://minnambalam.com/k/2019/08/14/5)**

**[அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!](https://minnambalam.com/k/2019/08/14/16)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *