~14 பொருட்கள் விநியோகம்: முதல்வர் திடீர் உத்தரவு!

politics

தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலம் 14 மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இத்திட்டம் முதல்வரால் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டாலும், ஜூன் 15 முதலே ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் ஆங்காங்கே மக்களுக்கு சில பொருட்கள் விடுபட்டுவிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பேரூராட்சியில் வார்டு 1, 2, 3 ஆகியவற்றுக்கான ரேஷன் கடையில் 14 பொருட்கள் வழங்கப்பட்டபோது அவற்றில் உளுத்தம்பருப்பு இல்லை என்று மக்கள் புகார் கூறினார்கள். இதுகுறித்து நாம் ஜூன் 15 ஆம் தேதி மின்னம்பலத்தில், [14 மளிகைப் பொருள் தொகுப்பு: உளுத்தம்பருப்பைக் காணோம்]( https://www.minnambalam.com/politics/2021/06/15/38/corona-relief-free-groceries-one-item-missing-people-complaint) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த செய்தியை அடுத்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம், உளுந்தூர் பேட்டை திமுக எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் ஆகியோருக்கு விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து மறுநாள் 16ஆம் தேதி எம்.எல்.ஏ.மணிக்கண்ணன் அந்த ரேஷன் கடைக்கு விசிட் அடித்து ஆய்வு மேற்கொண்டார். உடனடியாக விடுபட்டவர்களுக்கு உளுத்தம்பருப்பு வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார.

இந்நிலையில் நேற்று (ஜூன் 17) மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் மனோன்மணி பிற்பகல் 3 மணிக்கு மேல் உளுந்தூர் பேட்டை ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த ரேஷன் கடையின் வாடிக்கையாளர்களை அழைத்து உளுந்து பெற்றுக் கொண்டோம் என்று கையெழுத்து பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்திலும் இதேபோல மளிகைப் பொருட்கள் தொகுப்பில் பொருட்கள் விடுபட்டதாகத் தெரியவந்துள்ளது. திருச்சி தெப்பக்குளம் சிந்தாமணி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் 14 பொருட்கள் கொடுக்கப்பட்டபோது கோதுமை மாவு, மைதா மாவு மிஸ் ஆகியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியரிடம் கேட்க, ‘இது ரெண்டும் எங்களுக்கு வரலை. வந்தாதான் தருவோம்’ என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் சிலருக்கு மட்டும் இரு பொருட்களையும் சேர்த்து 14 பொருட்களையும் கொடுத்திருக்கிறார்கள். இந்த கொரோனா சீசனில் மீண்டும் மீண்டும் அலைய வேண்டாமென்று பலர் கொடுத்ததை வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள்.

இவ்வாறு தமிழகத்தில் ஆங்காங்கே ரேஷன் கடைகளில் இந்த 14 பொருட்கள் விநியோகத்தில் குழப்பங்களும், முறைகேடுகளும் நடந்து வருகின்றன. இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் சென்ற நிலையில் ஏற்கனவே ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்திய முதல்வர் ஸ்டாலின் இன்று அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

“ஒவ்வொரு மாதமும் 10 ஆம்தேதிக்குள் மாவட்ட கலெக்டர்கள் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின்.

அரசு என்னதான் நல்ல திட்டங்களை கொண்டுவந்தாலும் அதை செயல்படுத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *