சிறைக்குப் பயந்து என்.பி.ஆரை ஆதரிக்கிறார்கள்: திமுக வெளிநடப்பு!

Published On:

| By Balaji

என்.பி.ஆர் விவகாரம் தொடர்பான அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்திலிருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 20) கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுந்து, “என்.பி.ஆரின் புதிய படிவத்தில் பெற்றோர் ஊர், பிறந்த தேதி, சான்றிதழ் தர வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் கொண்டாடும் பண்டிகை குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பண்டிகைகளில் இஸ்லாமியர்களின் பண்டிகையை குறிப்பிடவில்லை. இதிலேயே மதத்தை பிரிவினை செய்யும் போக்கு இருக்கிறது.

இந்த தகவல்களைத் தரவில்லை என்றால் அவர்கள் சந்தேகத்திற்குரியவர்களாக அறிவிக்கப்படுவார்கள். என்பிஆர் மூலம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படப்போகிறது. என்.பி.ஆர் கணக்கெடுப்பை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் அறிவிப்பாரா” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து சிறுபான்மையினர் அச்சப்பட தேவையில்லை. மதம் குறித்து தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் கேட்கப்படுவது இல்லை. மதம் குறித்து கேட்டாலும் வாய்மொழியாக தகவல் சொன்னால் போதும், ஆவணங்கள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று பதிலளித்தார்.

ஆனால் அமைச்சரின் பதிலில் திருப்தியில்லை என்று தெரிவித்த ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “என்.பி.ஆரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதற்கு முதல்வர் சொல்ல வேண்டிய பதிலை வருவாய்த் துறை அமைச்சர் ஏதோ பொதுக் கூட்டத்தில் பேசுவது போல வீராவேசமாக பேசினார். நாங்கள் வாக்கு வங்கிக்காக அலைந்துகொண்டிருப்பது போலத்தான் இருந்தது அவருடைய பதில். நாங்கள் வாக்கு வங்கிக்காக பேசுகிறோம் என்றால், என்.பி.ஆரை அதிமுக ஆதரித்துப் பேச வேண்டிய அவசியம் என்ன?. ஆட்சி போய்விடும், சிறைக்குப் போக வேண்டி வரும் என்பதால் ஏற்றுக்கொள்கிறார்கள். மக்களைப் பற்றி அவர்கள் சிந்திக்கவே இல்லை” என்று தெரிவித்தார்.

**த.எழிலரசன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share