எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் 2021-22ஆம் ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பம் கடந்த டிசம்பா் 19ஆம் தேதி தொடங்கி ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற்றது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேரும் என மொத்தம் 40,288 பேரும் விண்ணப்பித்தனர். இதை தொடர்ந்து விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்றது.
இந்தப் பணிகள் முடிவடைந்ததையடுத்து,நேற்று (ஜனவரி 24) மாலை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரக அலுவலகத்தில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு பிரிவில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் பெயர் பட்டியலையும், முதல் 10 இடங்களை பிடித்த அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் பெயர்களையும் வெளியிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 2021-22ஆம் ஆண்டு மருத்துவ இளநிலை பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான மொத்த இடங்கள் 7,825. அதில் மாநில அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான ஒதுக்கீடு 6,999. அரசு பல் மருத்துவம் மற்றும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்கள் 1,960. இதில் மாநில அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளுக்கான ஒதுக்கீடு 1,930 ஆகும்.
மாணவர்களிடம் இருந்து இதுவரை மொத்தமாக 25,593 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், 24,949 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 16,029 பேர் மாநில பாடத்திலும், 8,453 பேர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலும், 299 பேர் ஐசிஎஸ்இ பாடத்திட்டத்திலும் படித்தவர்கள்.
மருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வருகிற 27ஆம் தேதியும், 28, 29ஆம் தேதிகளில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நேரடியாக கலந்தாய்வு நடைபெறும். பொதுப்பிரிவினருக்கு வருகிற 30ஆம் தேதி முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்பதால், மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் வீடியோ ஒன்று வெளியிடப்படும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் படித்து மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் இந்த கலந்தாய்வு நடைபெறும்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சி கலந்தாய்வுக்குப் பின்னர் தொடங்கப்படும். அதேசமயம், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். இந்தாண்டு சுயநிதி கல்லூரிகளில் மருத்துவப் படிப்பிற்கான கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது” என்று தெரிவித்தார்.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,”