�அனிதாவுக்கு எதிராக சசிகலா புஷ்பா: அண்ணாச்சியின் அதிரடி திட்டம் பலிக்குமா?

politics

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில்… எந்த தொகுதியில் யாரை நிறுத்துவது என்று கட்சித் தலைமைகள் முடிவெடுக்கும் முன்பே, சில செல்வாக்குமிக்க தொழிலதிபர்கள் தங்களுக்கு சாதகமான நபர்களை குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்தி ஜெயிக்க வைக்க களம் இறங்கிவிட்டார்கள்.

அந்த வகையில் தென் மாவட்டத்தில் பிரபலமான தொழிலதிபரான அண்ணாச்சி என்று அழைக்கப்படும் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் தனது அரசியல் விளையாட்டை ஆரம்பித்து விட்டார் என்ற தகவல்கள் திருச்செந்தூரில் அலையடிக்க ஆரம்பித்துவிட்டன.

இதுகுறித்து தென் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் விசாரணை செய்தோம்.

“அண்ணாச்சிக்கு இப்போது அதிமுக தலைமை நெருக்கமாக இல்லை. ஆர்.கே.நகரில் தினகரனை ஜெயிக்க வைக்க செலவு செய்தவர் அவர்தான் என்பதால் எடப்பாடி, அண்ணாச்சி மீது கோபமாகத்தான் இருக்கிறார். இந்த நிலையில், திருச்செந்தூர் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வைத்து, அதில் தனது நம்பிக்கைக்குரிய முன்னாள் மேயரும் முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பாவை நிறுத்துவதற்கு அண்ணாச்சி ஆயத்தம் ஆகிறார்.

திருச்செந்தூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணன் ஆரம்ப காலத்திலிருந்தே அண்ணாச்சி வளையத்துக்குள் வராதவர். பொது இடங்களில் சந்தித்துக் கொள்ளும்போது நலம் விசாரித்துக் கொள்வதோடு சரி. மற்றபடி அண்ணாச்சிக்கும் அனிதாவுக்கும் இடையே பெரிய நெருக்கம் இல்லை. அனிதா பத்திரிக்கை அதிபருடன் நெருக்கமானவர் என்று கருதினார் அண்ணாச்சி. அதனால், இவ்விருவருக்கும் இடையே உறவு சரியாக இருந்ததில்லை.

அனிதா ராதாகிருஷ்ணனை அதிமுகவில் இருந்து வெளியேற்றியதில் அண்ணாச்சிக்கு பெரும் பங்குண்டு. இந்நிலையில் திருச்செந்தூரில் திமுக சார்பில் மீண்டும் அனிதா ஜெயித்துவிடாமல், அவரது லோக்கல் செல்வாக்கை இந்தத் தேர்தலில் முடிவுக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார் அண்ணாச்சி. இந்த வகையில் தனது நம்பிக்கைக்குரிய சசிகலா புஷ்பாவை வரும் தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் நிறுத்தி ஜெயிக்க வைத்து விடுவது என்ற திட்டத்தில் இருக்கிறார் அண்ணாச்சி. இதன் மூலம் அனிதாவையும் வீழ்த்தலாம், பாஜகவோடும் ராசியாகலாம் என்று இரட்டைக் கணக்கு போடுகிறார் அண்ணாச்சி.

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. சமத்துவ மக்கள் கட்சிக்கு தான் சீட் கொடுத்தார்கள். அந்த வகையில் இப்போது அந்தத் தொகுதியை பாஜகவுக்கு வாங்கி அதில் தனது ஆதரவாளரான சசிகலா புஷ்பாவை நிறுத்த வேண்டும் என்பதுதான் அண்ணாச்சியின் திட்டம். மேலும், பாஜக திருத்தணியில் தொடங்கிய தனது வேல் யாத்திரையை திருச்செந்தூரில் தான் நிறைவு செய்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் தொகுதியை அதிமுகவிடம் கேட்டுப் பெறுவது என்ற முடிவிலும் பாஜக உறுதியாக இருக்கிறது. இது அண்ணாச்சியின் முயற்சியை மேலும் எளிதாக்கியிருக்கிறது.

இதற்கிடையே… வருகிற சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக சார்பில் சுபாஷ் பண்ணையாரின் நெருங்கிய உறவினரான ஆறுமுகநேரி ராதாகிருஷ்ணன் என்பவர் சீட்டு வாங்கி விட கடுமையாக முயற்சித்து வந்தார். இதற்காகவே அவர் திருச்செந்தூர் தொகுதியில் கடந்த தீபாவளியை ஒட்டி அனைவருக்கும் குக்கர் பரிசாக வழங்குவது என்ற திட்டத்தை தொடங்கினார். திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சில பகுதிகளுக்கு குக்கர் வழங்கப்பட்டு விட்ட நிலையில் வி.வி.அண்ணாச்சியின் காய் நகர்த்தல்கள் அறிந்து குக்கர் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறார் ஆறுமுகநேரி ராதாகிருஷ்ணன். திருச்செந்தூர் பாஜகவுக்கு ஒதுக்கப்படுவது என்பது உறுதியாகிவிட்ட நிலையில் சசிகலா புஷ்பாவை பாஜக வேட்பாளராக நிறுத்தி அனிதாவை தோற்கடிப்பது என்ற அண்ணாச்சியின் திட்டத்துக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சரான எஸ்.பி. சண்முகநாதனும் ஆதரவளிக்கிறார். இதனால் இந்த கேம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது”என்று முடித்தார்கள்.

இதுகுறித்து திருச்செந்தூர் திமுகவினர் சிலரிடம் பேசியபோது..”தூத்துக்குடி

தெற்கு மாவட்ட பொறுப்பாளரான அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் திமுக நிர்வாகிகள் பலருக்கும் இடையே கசப்பு இருக்கிறது. அதுபற்றி முதன்மைச் செயலாளர் நேருவே நேரில் வந்து விசாரணை நடத்தினார். அதன்பின் மாவட்டப் பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் நியமித்த ஒன்றிய செயலாளர்களை ரத்து செய்து அறிவிப்பும் முரசொலியில் வந்தது. இந்த விவகாரத்தில் கனிமொழியோடும் அனிதாவுக்கு இணக்கம் இல்லை.

இதையெல்லாம் தாண்டி வேறு ரூட் போட்டு தலைமையிடம் செல்வாக்கு பெற்று மீண்டும் சீட் வாங்கி அமைச்சராவதுதான் அனிதாவின் இலக்கு. சசிகலா புஷ்பா நிறுத்தப்பட்டால் திமுகவின் ஒரு பகுதியினரே அனிதாவுக்கு எதிராக வேலை பார்க்கும் சூழல் உருவாகலாம். போட்டி மிகக் கடுமையாக இருக்கும்” என்றும் கூறுகிறார்கள்.

அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்களோ, “விவி மினரல்ஸ் அண்ணாச்சி இப்போது பழைய செல்வாக்கோடு இல்லை. ஒருவேளை அவர் சொல்லி சசிகலா புஷ்பாவே நின்றாலும் அனிதா அண்ணாச்சிக்கு வெற்றி மிக எளிதாகிவிடும். அதிமுகவிலும் நின்று ஜெயித்திருக்கிறார், திமுகவிலும் நின்று ஜெயித்திருக்கிறார் என்றால் தனிப்பட்ட செல்வாக்கு இல்லாமலா முடியும்?” என்று கேட்கிறார்கள்.

திருச்செந்தூரின் கடலோரத்தில் எதிர்பார்ப்பு அலைகள் வீச ஆரம்பித்துவிட்டன.

**-வேந்தன்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *