டீன் ரத்தினவேல் மீண்டும் பணியமர்த்தப்படுவாரா?

politics

சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட அனைத்து கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்லூரி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வைட் கோட் செரிமணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் வழக்கமாக மருத்துவ மாணவர்கள் ஏற்கும் உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
“நாங்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை, ஆங்கிலத்தில்தான் எடுத்தோம். அதுவும் கடைசி நேரத்தில் தவறுதலாக எடுத்துவிட்டோம்” என்று மாணவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது தொடர்பாக, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு தலைமையில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன் மற்றும் இரண்டு அதிகாரிகள் என நான்கு பேர் கொண்ட குழுவினர் நேற்று மதுரை மருத்துவக் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட டீன் ரத்தினவேல், மருத்துவக் கல்லூரி துணைத் தலைவர் தனலட்சுமி, மாணவர் அமைப்புத் தலைவர் ஜோதிஸ் குமாரவேல் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணை தொடர்பாக மருத்துவக் கல்லூரி இயக்குநர் நாராயண பாபு கூறுகையில், இன்று (நேற்று) நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
தவறுதலாக சமஸ்கிருத உறுதிமொழியான மகரிஷி சரக்கா சப்தம் உறுதிமொழியை ஏற்றுள்ளனர். தேசிய மருத்துவக் கழகம் அனுப்பியது சுற்றறிக்கை தான். அது உத்தரவு அல்ல.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் அனைத்து மருத்துவக் கல்லூரி டீன்களுக்கும் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தெளிவாக ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருந்தார்.
தேசிய மருத்துவ ஆணைய நடவடிக்கைகளை அப்படியே பின்பற்ற வேண்டாம், சுகாதாரத் துறையிடம் கேட்டு அறிவுரையைப் பெற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த சுற்றறிக்கையை டீன் ரத்தினவேலுவும் பார்த்து பதிலளித்துள்ளார்.
அதுபோன்று கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி, நானும் ஒரு அறிவுறுத்தலை வழங்கி இருந்தேன். அதில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் காலம் காலமாக என்ன செய்து வந்தோமோ, அதையே பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தேன். கொரோனா பரவல் காரணமாக நிகழ்ச்சிகளை எல்லாம் பெரிய அளவில் நடத்த கூடாது. மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை சுகாதாரத் துறை அல்லது மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் அனுமதி பெற்று நடத்துங்கள் என்றும் கூறியிருந்தேன். எனவே இவற்றையெல்லாம் தெளிவுபடுத்திக் கொண்டு நிகழ்ச்சியை நடத்தி இருக்க வேண்டும்.
இது குறித்தும் இந்த விசாரணையில் கேள்வி எழுப்பினோம். தவறுதலாக உறுதிமொழி எடுத்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மருத்துவக் கல்லூரியில் உறுதிமொழி ஒத்திகை எடுக்கப்பட்டபோது பொறுப்பு முதல்வர் அங்கு இல்லை என விசாரணையில் கூறியுள்ளார். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் டீனை மீண்டும் நியமிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

**- பிரியா **

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *