Zஅரசுக்குப் பெரும்பான்மை இல்லையா?

Published On:

| By Balaji

உரிமை மீறல் வழக்கு தொடர்பான விசாரணை இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டவிரோதமாக குட்கா, பான் மசாலா விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏ.க்கள் 2017 ஜூன் மாதம் சட்டமன்றத்துக்கு குட்காவைக் கொண்டு சென்றனர். இதுகுறித்து பேச அனுமதி மறுத்த சபாநாயகர் தனபால், ஸ்டாலின் குட்கா எடுத்து வந்த விவகாரத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்தார். இதுபற்றி விளக்கம் கோரி 21 பேருக்கும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

உரிமை மீறல் குழுவின் நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017 செப்டம்பர் மாதம் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை 21 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது திமுக தரப்பில், “உரிமை மீறல் பிரச்சனையில், சட்டமன்ற விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. பாரபட்சமான முறையில் முன்கூட்டியே தீர்மானித்து உரிமை மீறல் பிரச்சனை எழுப்பி உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைத்துவிட்டார்” என்று சபாநாயகர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியதால், உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்த திமுக வழக்கறிஞர்கள், “குட்கா எளிதாகக் கிடைப்பதை அரசின் கவனத்துக்குக் கொண்டுவரவே சட்டமன்றத்துக்குள் அவற்றை எடுத்துச் சென்றோம். சபாநாயகருக்கு எந்த அவமதிப்பும் செய்யவில்லை, உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை” என்று வாதிட்டனர்.

இந்த நிலையில் இவ்வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வில் நேற்று (ஆகஸ்ட் 13) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “பெரும்பான்மை குறைவாக இருந்ததால் 21 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறுவது தவறானது. தொடக்கம் முதல் தற்போது வரை அதிமுக அரசு எந்த நிலையிலும் பெரும்பான்மை இழக்கவில்லை. தற்போது அரசுக்கு 124 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், அவையின் மாண்பை அவமதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட குட்காவை சட்டமன்றத்திற்குள் கொண்டு வந்ததற்குத்தான் 21 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உரிமை மீறல் குழுவின் விசாரணைக்குப் பரிந்துரைத்தார் என்றும் வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சோமையாஜி, “குட்காவைக் கொண்டுவந்தது அவை உரிமை மீறலா, இல்லையா என்பதை ஆய்வு செய்யவே இந்த விசாரணைக்கு சபாநாயகர் அனுப்பிவைத்தார். ஆனால், எந்த உத்தரவும் பிறப்பிக்கும் முன்னரே நீதிமன்றத்துக்கு வந்துவிட்டனர் என்று குறிப்பிட்டார்.

வாதங்கள் முடிவடையாத நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

**எழில்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share