தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளதாக இன்று (மே 3) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.
இந்த பொதுத்தேர்வில் 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், 8 ஆயிரத்து 190 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினர். தொடர்ந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், திட்டமிட்டப்படி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியிடுவதற்கு அரசு தேர்வுத்துறை தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்தான் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.
ஆனால், இந்த வருடம் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தாலும் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டி உள்ளது.
எனவே, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுவது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்வு முடிவுகளை அமைச்சர் வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தால் அன்பில் மகேஷ் மே 6ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவார். தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தால், அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய ஜெர்மனி செல்லும் எஸ்.ஐ.டி!
ப்ரிஜ் பூஷன் மகனுக்கு சீட் கொடுத்த பாஜக : சாக்ஷி மாலிக் கண்டனம்!