பாலியல் புகாரில் சிக்கி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு ஜெர்மனி செல்லவுள்ளதாக இன்று (மே 3) தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி சமூக வலைதளங்களில் பரவியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிப்பதற்காக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றது கண்டறியப்பட்டது.
பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினரால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
பல பெண்களை சீரழித்த பிரஜ்வல் மீண்டும் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறார். அவரைப் பற்றி எல்லாம் தெரிந்தும் பிரதமர் மோடி அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தது எப்படி? இப்போது பிரஜ்வல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றது எப்படி என ராகுல் காந்தி சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் வெளிநாடு செல்ல வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் உரிய அனுமதி பெறவில்லை. அவர் ராஜாங்க பாஸ்போர்ட்டின் மூலம் பயணம் செய்கிறார். பிரஜ்வல் பாஸ்போர்ட்டை முடக்க இதுவரை எந்த நீதிமன்றமும் வெளியுறவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு ஜெர்மனி செல்லவுள்ளதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஜாமினில் வெளியே வரமுடியாத பிரிவின் கீழ் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ப்ரிஜ் பூஷன் மகனுக்கு சீட் கொடுத்த பாஜக : சாக்ஷி மாலிக் கண்டனம்!
Gold Rate: கொஞ்ச்..சம் குறைந்த தங்கம் விலை: எவ்வளவுனு தெரிஞ்சுக்கங்க!