யாராலும் அதிமுகவை அசைக்க முடியாது: ஈபிஎஸ்

politics

அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பாஜக இரட்டை வேடம் போடுகிறது, மறைமுகமாக அதிமுகவை பின்னுக்குத் தள்ளுகிறது, இதைத் தோழமைக் கட்சி முறையில் நாம் சொல்ல வேண்டாம். ஆனால் சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, “கூட்டணிக் கட்சி என்று கூட பார்க்காமல் முன்னாள் அமைச்சர் பொன்னையன் குற்றம் சுமத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. 65 எம்.எல்.ஏ.க்களை கொண்ட அதிமுகவைக் காட்டிலும், 4 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பாஜக மிக சிறப்பாக செயல்படுகிறது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்” என்று கூறினார்.

இந்நிலையில் இன்று (ஜூன் 3) அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது வி.பி.துரைசாமியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக எவ்வாறு சட்டமன்றத்தில் செயல்படுகிறது என நாட்டு மக்களுக்குத் தெரியும். துரைசாமி அதிமுகவுக்கு சான்றளிக்கத் தேவையில்லை. அதிமுக உறுப்பினர்கள் புள்ளி விவரத்தோடு சட்டமன்றத்தில் பேசி வருகிறோம். பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் எப்படி பேசுகிறார் என்றும் நாட்டு மக்களுக்குத் தெரியும் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகத் திருச்சியில் முதல்வர் சொன்ன அன்றைய தினமே சென்னையில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகமாக இருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்தது. உயர் நீதிமன்ற மதுரை கிளை போலீசாரின் ஒத்துழைப்புடன் தான் குற்றவாளிகள் தலைமறைவாகிறார்கள் என்ற கருத்தையும் சொல்லியிருக்கிறது. அந்த அளவுக்குத் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருந்து கொண்டிருக்கிறது. திமுகவின் இந்த ஓராண்டுக் காலத்தில், கொலை, திருட்டு, செயின் பறிப்பு ஆகியவை அதிகளவு நடந்துள்ளது. குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பாலியல் தொல்லைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. காவல்துறையை வைத்திருக்கக் கூடிய முதல்வர் இந்த துறையை ஒழுங்காகக் கவனிக்காத காரணத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்தவர்கள் காவல்நிலையத்தில் தலையிட்டு குற்றவாளிகளைக் காப்பாற்றுகின்றனர். காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன” என்றார்.

ரெய்டு பயத்தால் தான் அதிமுக செயல்படத் தயங்குகிறது என்று வி.பி.துரைசாமி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “எந்த கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது. வி.பி.துரைசாமி எந்த கட்சியிலிருந்து எந்த கட்சிக்குத் தாவினார் என்று அனைவருக்கும் தெரியும். நான் 1974ல் அதிமுகவில் சேர்ந்தேன். 48 ஆண்டுக்காலம் ஒரே கழகத்தில் இருக்கிறேன். கழக உறுப்பினர்களும் அப்படிதான் இருக்கிறார்கள். இவர்களைப் போலக் கட்சித் தாவவில்லை” எனக் கூறினார்.

மேலும் அவர், ஸ்டாலின் நேரடியாக தன்னுடைய மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் விமர்சனம் வந்துவிடும் என்பதால், கொல்லைப்புறம் வழியாக அமைச்சராக்கப் பார்க்கிறார். அதனால் தான் பல மாவட்டங்களில் தீர்மானம் போடுகிறார்கள். தீர்மானத்துக்கு அவசியமே இல்லை. ஸ்டாலின் நினைத்தால் பதவியைக் கொடுத்துவிட்டுப் போகலாம். இப்படியெல்லாம் தீர்மானம் போடுவதன் மூலம் தவிர்க்க முடியாத காரணத்தினால் அமைச்சர் பதவியைக் கொடுத்தோம் என்று சொல்லப் போகிறார்கள்” எனக் குறிப்பிட்டார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *