கஞ்சா விற்பனை : ஆளும்கட்சி மீது ஈபிஎஸ் குற்றசாட்டு!

politics

தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் ராமநாதபுரம் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாமக, பாஜக கட்சிகள் ஆதரவு தந்துள்ளன. இந்த இரு கட்சிகளுக்கும் அதிமுக தலைமை சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. ஆனால் இந்த காலகட்டத்தில் திமுக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தற்போதைய முதல்வர் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு தற்போது அடிக்கல் நாட்டிகொண்டிருக்கிறார். இதுதான் இந்த ஓராண்டுக் காலத்தில் இவர்கள் செய்த சாதனை.

இந்தியாவிலேயே முதன்மை முதல்வர் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் எதிலே முதன்மை… ஊழல் செய்வதில் தான் முதன்மை. அதுபோன்று லஞ்சம் லாவண்யம் பெறுவதில் ஆளும் கட்சியான திமுக முதன்மையாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை சர்வ சாதாரணமாகக் கஞ்சா விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்காக ஆபரேஷன் 2.0 என்ற அறிவிப்பை டிஜிபி வெளியிட்டு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில் கடந்த ஓராண்டில் ஒரு லட்சத்து 2 ஆயிரம் கிலோ கஞ்சா பிடிபட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வளவு கஞ்சாவை இன்றைக்குத் தமிழகத்தில் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு தமிழகத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதால் மாணவர்கள், இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது சுமார் 2,200 வழக்குகள் கஞ்சா விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் 148 பேரைக் கைது செய்திருப்பதாகவும் முதலமைச்சர் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

2200 வழக்குகள் பதிவு செய்திருந்தால் அனைவரையும் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அனைவரையும் கைது செய்யாததற்கு என்ன காரணம். ஆளுங்கட்சியினர் தலையீட்டுடன் கஞ்சா விற்பனை நடைபெறுவதால் தான் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.

மேலும் ஆன்லைன் ரம்மி தொடர்பாகப் பேசிய அவர், இந்த சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதோடு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுடன் கூட்டு வைத்து அரசாங்கம் செயல்படுகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் கூறினார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.