சுதீஷ்-பிரபாகரன் உரசல்: தேமுதிகவின் பலத்தை எடைபோட்ட அதிமுக

Published On:

| By Balaji

அதிமுக-தேமுதிக கூட்டணி இன்றைய நிலவரம்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர், தற்போது தெரிவித்து வரும் கருத்துக்கள் அதிமுக கூட்டணிக்குள் குழப்பத்தையும் சலசலப்பையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன.

ஓரிரு நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் கட்சி நிகழ்ச்சிக்காக சென்ற தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கிடையாது என்பது எல்லாருக்கும் தெரியும். ஒரு பெண்ணாக சசிகலா அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்” என்றெல்லாம் பேட்டி கொடுத்தார் இது அதிமுக வட்டாரத்தை சூடாக்கிய நிலையில் நேற்று (ஜனவரி 28) விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தன் பங்குக்கு கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தினார். திருவள்ளூர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர், “ தமிழகத்தில் திமுக அதிமுகவுக்கு மாற்று தேமுதிகதான். தான் ஊழலை ஒழிப்பேன் என்று கேப்டனை தவிர வேறு யாராலும் உறுதியாக சொல்ல முடியாது. தனித்து நிற்கவும் நாங்கள் தயங்க மாட்டோம்” என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

இதற்கு அதிமுக ரியாக்‌ஷன் என்ன என்று விசாரித்தபோது, “சமீபத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தமிழக முதல்வரை சந்தித்து பேசினார். அப்போது வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு கௌரவமான இடங்கள் வேண்டும் என்று கேட்டதோடு தனது சகோதரர் தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீஷுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வேண்டுமென்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். சரி பார்த்துக்கலாம் என்று முதல்வரும் அவரிடம் அனுசரனையாக பேசி அனுப்பி வைத்திருக்கிறார்.

பிறகு தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிக்கொண்டிருந்த தமிழக முதல்வர் இவங்க கட்சிக்கு 2% தான் வாக்கு வங்கி இருக்கிறதா எனக்கு வர்ற தகவல்கள் சொல்லுது. ஆனா இவங்க ரொம்ப அதிகமா கேக்குறாங்க’ என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் சுதீஷுக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்ற பிரேமலதாவின் கோரிக்கையில் விஜய. பிரபாகரனுக்கு விருப்பம் இல்லையாம். தனது மாமா சுதீஷ் மீதே சில புகார்களை பிரேமலதாவிடம் சொல்லி, அவருக்கு ராஜ்யசபா வேண்டாம் என்று விஜய பிரபாகரன் கூறி வருகிறாராம்.

இதுமட்டுமல்ல… தேமுதிகவில் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் தற்போது மிகவும் நொந்துபோன நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் கட்சிக்காக நிறைய செலவு செய்து விட்டார்கள். இந்த நிலையில் கூட்டணி பற்றி உருப்படியான ஒரு முடிவு எடுத்தால் தான் பல மாவட்ட செயலாளர்கள் கட்சியில் நீடிப்பார்கள். இப்படி ஆளாளுக்குத் தனியாக நிற்போம் நாங்கள் தான் மாற்று என்று வீரவசனம் பேசி கொண்டிருந்தால் மாவட்ட செயலாளர்களும் முக்கிய நிர்வாகிகளும் இதை ரசிக்காமல் வேறு கட்சிகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இப்படி கட்சிக்குள்ளும், குடும்பத்துக்குள்ளும் என தேமுதிகவில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்களுக்கு விஜயகாந்த் ஆக்டிவ் ஆக இருந்தபோது கிடைத்த ஆதரவும் இப்போது இல்லை.எனவே தேமுதிக நாம் கொடுக்கும் தொகுதிகளை ஏற்றால் வைத்துக் கொள்வோம். இல்லையென்றால் அவர்கள் போகட்டும், கவலையில்லை என்று சொல்லிவிட்டார் முதல்வர்.

இதுதான் தேமுதிக-அதிமுகவின் இன்றைய கூட்டணி நிலவரம்” என்கிறார்கள் விரிவாக.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share