டிஜிட்டல் திண்ணை: தேர்தல் நிதி- ஏற்க மறுத்த அமித்ஷா

politics

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.
“தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு விஷயங்கள் பிரச்சாரத்தில் பேசப்பட்டு வருகின்றன. தேசிய அளவிலான விஷயங்களும் மாநில அளவிலான விஷயங்களும் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் விவாதிக்கப்படுவது இப்போது அதிகமாகியிருக்கிறது. அந்த வகையில் உத்திரபிரதேசத்தில் நடக்கும் சட்டமன்றத் தேர்தல் கூட தமிழக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் விவாதப் பொருளாகி இருக்கிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, ‘உத்திரபிரதேசத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரிய வெற்றியைப் பெறும். அதன் பிறகு திமுக டெல்லியில் சரணடையும்’ என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
இன்னொரு பக்கம் திமுக தலைவர் ஸ்டாலின் பாஜக அரசை கடுமையாகச் சாடி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரங்களில் பேசிக்கொண்டிருக்கிறார். நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரும் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபொழுது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி பாஜக தலைவர்கள் ஆகியோரிடம் மிகவும் நெருக்கம் காட்டினார்.
எடப்பாடி முதல்வராக இருந்தபோது கர்நாடகா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்தது. அப்போது எடப்பாடி தன் சார்பாக பாஜக டெல்லி தலைவர்களிடம் பெரும் தொகையை தேர்தல் நிதியாக கொடுத்தார். பாஜகவுக்கு இப்படி பிற கட்சியிலிருந்து தேர்தல் நிதி பெற வேண்டிய அவசியமில்லை என்றாலும்… அவர்களும் அதை பெற்றுக் கொண்டனர். அரசியல் கூட்டணி என்பதை எல்லாம் தாண்டி இந்த பொருளாதார உதவி எடப்பாடிக்கு டெல்லியில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
இப்போது உத்தர பிரதேசம், உத்ரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.
எடப்பாடி பார்முலாவை பின்பற்றி தற்பொழுது டெல்லியில் ஒரு முக்கிய பிரமுகர் முகாமிட்டு உத்தரப்பிரதேச தேர்தலுக்காக சில நூறு கோடி ரூபாய்களை பாஜகவின் தேர்தல் செலவுக்காக கொடுக்க முயன்றிருக்கிறார்.

இந்த தகவல் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வேண்டப்பட்டவர்கள் மூலமாக அவரிடம் தெரியப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த தேர்தல் நிதியை பெற மறுத்துவிட்டார் அமித்ஷா. அவருக்கு நெருக்கமானவர்களை வைத்து மீண்டும் வலியுறுத்திப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், ‘நண்பர்கள் என்றால் நண்பர்கள்தான். எதிரிகள் என்றால் எதிரிகள் தான். இந்த நிதி வேண்டாம்’ என்று அதற்கு காரணமும் சொல்லியிருக்கிறார்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து விட்டு ஆஃப் லைன் சென்றது வாட்ஸ்அப்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *