சிறுகதையாக, நாவலாக, கட்டுரையாக, சுயசரிதையாக வாசிக்கும்போது எழுத்தில் கிடைக்கும் மன எழுச்சி, அவை காட்சிரீதியிலான படைப்பாக மாற்றப்படும்போது கிடைக்காது. காரணம், எழுத்து அதனை வாசிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உலகத்தை உருவாக்கும். அது மிகப்பிரமாண்டமானதாக இருக்கும்.
அதேநேரத்தில், எழுத்து உருவாக்கும் உலகில் இருந்து விலகி வேறொன்றைக் காண்பிக்கும் திரைப் படைப்புகள் எப்போதுமே ரசிகர்களால் கொண்டாடப்படும். அப்படிக் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு படைப்பாக விளங்குகிறது ஞான.ராஜசேகரன் இயக்கிய ‘மோகமுள்’.
தி.ஜானகிராமன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் இது. பெருந்திணை எனப்படும் பொருந்தாக் காமத்தை முன்னிலைப்படுத்துகிற கதையைக் கொண்டது. அதனாலேயே சிலரால் இப்படம் கவனிக்கப்பட்டது; பெரும்பான்மையான ரசிகர்களின் கவனத்திற்கு உட்படாமலும் போனது.
முள்ளாய் குத்தும் மோகம்!
கும்பகோணத்தில் வாழ்ந்துவரும் பாபு (அபிஷேக்) கர்நாடக இசையை உயிராக நேசிக்கிறார். ரங்கண்ணா (நெடுமுடி வேணு) எனும் வித்வானிடம் சீடராகச் சேர்கிறார்.
தினசரி வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் இசைநயத்தைக் காண முயலும் ரங்கண்ணா, தன்னிடம் உள்ள இசை ஞானத்தை பாபுவுக்கு மெல்ல ஊட்டுகிறார்.
என்னதான் முழுமையாக இசையில் மனம் லயித்தாலும், பாபுவுக்குள் இளமைத் துடிப்பின் குறுகுறுப்பு கூடிக்கொண்டே வருகிறது.
பாபு வசிக்கும் வீட்டின் அருகே ஒரு வயதான போஸ்ட்மாஸ்டர் வாழ்கிறார். அவர் இரண்டாம் தாரமாக தங்கம்மா எனும் இளம்பெண்ணை மணந்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு பாபு மீது மோகம் பிறக்கிறது.
ஒருநாள் ஏணியில் ஏறி பாபுவின் அறைக்குள் நுழைகிறார் தங்கம்மா. அவரைக் காதலிப்பதாகக் கூறுகிறார். அங்கிருந்து அகல மறுக்கிறார்.
அன்றிரவு தான் யாரைக் காதலிக்கிறோம் என்பதைத் தங்கம்மாவின் வழியே உணர்கிறார் பாபு. அந்தப் பெண்ணின் பெயர் யமுனா (அர்ச்சனா ஜோக்லேக்கர்).
சிறு வயது முதலே பாபுவுக்கு அறிமுகமானவர் யமுனா. அவரை விடப் பத்து வயது மூத்தவர். அவரது பெற்றோர் கலப்புத் திருமணம் செய்தவர்கள் என்பதால், பெண் பார்க்க வரும் ஆண்கள் எவரும் அவரைத் திருமணம் செய்யத் தயாராக இல்லை.
அந்த நிகழ்வுகளைக் கண்ணால் கண்டபோது பிறக்காத காதல், திடீரென்று யமுனா மீது உருவாகிறது. தங்கம்மாவைக் குத்திய மோகமுள், மெல்லப் பாபுவின் மனதில் ஊடுருவி நஞ்சாகப் பரவுகிறது. அவரது இசை வேட்கையை சிதைக்கிறது. கூடவே, தங்கம்மாவின் உயிரையும் பறிக்கிறது.
அதன்பிறகும் கூட, பாபுவால் யமுனாவை மறக்க முடிவதில்லை. அந்தக் காதலையும் மறைக்க முடிவதில்லை. அதனை யமுனாவிடம் அவர் வெளிப்படுத்துகிறார்.
அதனைக் கேட்டு அதிரும் யமுனா, பாபுவை விட்டு விலகிச் செல்ல முடிவெடுக்கிறார். அவரது அருகாமையில் இருக்க வேண்டாம் என்று தனது தாயுடன் வெளியூர் செல்கிறார்.
அன்று முதல் பித்துப் பிடித்தவர் போலாகி விடுகிறார் பாபு. மரணப்படுக்கையில் இருக்கும் ரங்கண்ணாவால் கூட அவர் மனதை மாற்ற முடிவதில்லை.
ஒருநாள் கும்பகோணத்தை விட்டு சென்னைக்கு இடம்பெயர்கிறார் பாபு. எந்நேரமும் யமுனாவின் நினைவிலேயே உழல்கிறார்.
சில ஆண்டுகள் கழித்து, பாபுவின் நிலை அறிந்து அவரைத் தேடி வருகிறார் யமுனா. ‘உன் இசை ஞானத்தைச் சிதைக்கும் அளவுக்கா இந்த காதலுக்கு ஆற்றல் இருக்கிறது’ என்று கேட்கிறார். பாபுவின் மனம் முழுவதும் இசையில் லயிக்குமாறு அவரது வாழ்வை யமுனா தடம் புரட்டுவதோடு படம் முடிவடைகிறது.
மேலோட்டமாகப் பார்த்தால், வயதில் குறைந்த ஆணுக்குத் தன்னை விட மூத்த பெண் மீது உருவாகும் காதலாக மட்டுமே இக்கதை தெரியும். ஆனால், பாலினக் கவர்ச்சியைத் தாண்டி, ஒரு மனிதன் தனது உண்மையான காதலை உணரும் இடமே இதனை வழக்கத்திற்கு அப்பாற்பட்டதாக மாற்றுகிறது.
வேறொரு உணர்வு!
தி.ஜானகிராமன் எழுதிய ‘மோகமுள்’ படித்தவர்களுக்கு, இப்படம் வேறொன்றாகத் தெரியலாம். அதுவே இயல்பு. அதேநேரத்தில், ஒரு திரைப்படமாக நோக்கினால் இப்படம் எந்தக் குறையும் வைக்காது என்பதே நிதர்சனம். காரணம், இதில் தென்படும் ஒரு வாழ்க்கை.
ஐம்பதுகளில் கும்பகோணத்தில் இருந்த சில மனிதர்களின் வாழ்வனுபவங்களைக் காட்டுகிறது இத்திரைப்படம். பி.கிருஷ்ணமூர்த்தியின் கலை மற்றும் ஆடை வடிவமைப்பு, அக்காலகட்டத்தைச் சேர்ந்தவர்களாக நடிப்புக் கலைஞர்களையும் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இடத்தையும் உணர வைக்கிறது.
சன்னி ஜோசப், தங்கர் பச்சான் என்று இரு ஒளிப்பதிவாளர்கள் இப்படத்தின் ஒளிப்பதிவைக் கையாண்டிருந்தனர். ‘கமலம் பாதக் கமலம்’ என்ற பாடல் தொடங்குமிடமே, இப்படத்தின் திரைக்கதை ட்ரீட்மெண்டையும் பேசுபொருளையும் நமக்கு சூசகமாக உணர்த்திவிடும். பொன்னிறத்தில் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் காவிரி ஆற்றின் பின்னணியில் நாயகனைக் காண்பித்து, அதனை நிகழ்த்திக் காட்டியிருக்கும் படத்தின் ஒளிப்பதிவு.
‘சொல்லாயோ வாய் திறந்து’, ‘நெஞ்சே குருநாதரின்’, ‘சங்கீத ஞானமு’ பாடல்களை இப்படத்தில் தந்திருந்தார் இளையராஜா. ஒரு திரைப்படத்தின் ஆன்மாவை மிகச்சரியாக உணர்ந்து இசைக்கோர்வை அமைப்பவர் என்ற சிறப்பை இதிலும் வெளிக்காட்டியிருந்தார்.
நாவலைப் படமாக்கினாலும், திரைப்படத்திற்கு ஏற்ற வகையில் பாத்திரங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் சுருக்கியிருந்தார் ஞான.ராஜசேகரன். படம் பார்த்தவர்கள் வேறொரு உணர்வைப் பெற வழி வகை செய்திருந்தார்.
யமுனா, தங்கம்மா என்ற இரு பெண்களையும் அவரவர் நியாயங்களோடு திரையில் வார்த்திருந்தார். திரைக்கதையாக்கத்தில் ராஜசேகரன் மனைவி சகுந்தலா தந்த பங்களிப்பும் கூட அதற்கொரு காரணமாக இருந்திருக்கலாம்.
கலைப்படங்களுக்கே உரிய திரை மொழியோடு ‘மோகமுள்’ திரைக்கதை ட்ரீட்மெண்டை கையாண்டிருந்தார் ஞான.ராஜசேகரன். இன்று அப்படத்தை நாம் நினைவில் வைக்க அது காரணமாக இருந்தாலும், படம் வெளியான காலகட்டத்தில் அதுவே ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவிடாமல் தடுத்தது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
வெண்ணிற ஆடை மூர்த்தி, நாயர் ராமன், நெடுமுடி வேணு, விவேக், சண்முக சுந்தரம், கிருஷ்ணன் குட்டி, ’ஆறு முதல் அறுபது வரை’ சங்கீதா என்று பலர் இதில் நடித்திருந்தனர்.
நாயகனாக நடித்த அபிஷேக், இன்று சீரியல் நடிகராகவும் திரைப்பட இயக்குனராகவும் அறியப்படுபவர். தங்கம்மாவாக நடித்த வாணி, ‘புதுப்புது அர்த்தங்கள்’ உட்படச் சில படங்களில் தலைகாட்டியவர். அதன்பிறகு என்னவானார் என்று தெரியவில்லை.
’மோகமுள்’ படத்தின் பெரிய ப்ளஸ், நாயகியாக நடித்த அர்ச்சனா ஜோக்லேக்கரின் தோற்றம். திரைக்கதையில் வரும் யமுனாவுக்குப் பொருத்தமானவராக அவர் தெரிந்தார். நாயகனை விட வயது அதிகம் என்பதை ஒப்புக்கொள்ள வைத்தது அவருக்கான ‘ஸ்டைலிங்’.
‘டப்பிங்’ தந்தவரின் குரல் இனிமையானதாக இருந்தாலும், அர்ச்சனாவின் உருவத்தோடு அது பொருந்தும் வகையில் இல்லை என்பது மைனஸான விஷயம்.
பொருந்தாக் காமம்!
தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்வதென்பது இன்றும் கூட வினோதமாகவே நோக்கப்படுகிறது. ஒரு ஆண் தன்னை விட வயதில் குறைந்த பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற சமூக நடைமுறை அதற்குக் காரணமாக இருக்கலாம்.
அது போன்ற வழக்கங்கள் மீறப்படும்போது, அந்த சம்பவங்கள் செய்திகளாகின்றன. அவற்றுக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன.
அந்தப் பார்வையில் இருந்து விலகி, அவ்வாறு பொருந்தாக் காமத்தில் உழன்று கிடக்கும் ஒரு இசைக்கலைஞனின் வாழ்வைக் காட்டுகிறது ‘மோகமுள்’. அவனிடத்தில் இசையின் புதிய கீற்று தென்படாதா என்று ஏங்க வைக்கிறது.
இளையராஜாவின் இசை உட்பட அனைத்து தொழில்நுட்பப் பணிகளையும் சரியான வகையில் ஒருங்கிணைத்து, அதற்கு வழி வகுத்திருக்கிறார் ஞான.ராஜசேகரன். அவர் இயக்கிய படங்களில் மிகச்சிறந்த ஒன்றாக அடையாளம் காணப்படுகிறது ‘மோகமுள்’.
இது தந்த அடையாளமே, பின்னாட்களில் ‘பாரதி’, ‘பெரியார்’, ‘ராமானுஜன்’ என்று சாதனை மனிதர்களின் வாழ்வனுபவங்களை திரைப்படங்களாக ஆக்கும் வாய்ப்பினை அவருக்குப் பெற்றுத் தந்தது. இன்றோடு இப்படம் வெளியாகி 29 ஆண்டுகள் ஆகின்றன.
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கங்கையில் வழிபட்டு வேட்புமனு தாக்கல் செய்த மோடி : கலந்துகொண்ட அன்புமணி, ஜி.கே.வாசன்
“லியோ”வை மிஞ்சிய கமலின் “தக் லைஃப்”… இவ்ளோ கோடி பிசினஸா..?
தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு : நீதிமன்றத்தில் எடப்பாடி ஆஜர்!
யார் அடுத்த பிரதமர் என்பதை ஜெகன்மோகன் ரெட்டியும், நவீன் பட்நாயக்கும் தீர்மானிக்கப் போகிறார்களா?
Comments are closed.