2ஜி அப்பீல்: விசாரணையை விரைந்து முடிக்கக் கோரிக்கை!

politics

2ஜி வழக்கில் தாங்கள் கொடுத்துள்ள மேல்முறையீட்டு மனுக்களை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மனுவை நேற்று (ஆகஸ்ட் 13) தாக்கல் செய்துள்ளன.

2ஜி வழக்கில் 2017 டிசம்பர் 21ஆம் தேதி, டெல்லியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோரை விடுதலை செய்தது. குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது என்று அந்தத் தீர்ப்பில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி சைனி குறிப்பிட்டிருந்தார். மறைந்த திமுக தலைவரான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அமிர்தம், கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் ஷரத்குமார், வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, திரைப்பட தயாரிப்பாளர் கரீம் ராணி உள்ளிட்டோரையும் சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த விடுதலையை எதிர்த்து 2018 மார்ச் 19ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதற்கு அடுத்த நாளே சிபிஐயும் மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்தப் பின்னணியில்தான் நேற்று (ஆகஸ்ட் 13) அமலாக்கத் துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் நீதிபதி ஜெயராம் பம்பானி முன்னிலையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

ஆரம்பத்தில் இருந்தே இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி சேத்தி, இந்தாண்டு நவம்பர் 30ஆம் தேதி ஓய்வு பெறுவதாகவும் அதனால் இவ்வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும். இல்லையேல் நீதிமன்றத்தின் நேரம் வீணானதாகக் கருதப்படும் என்று அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ ஏற்கனவே தனது வாதங்களை நீதிபதி சேத்தி முன்னிலையில் முடித்து விட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக இடையில் இவ்வழக்கில் தொடர் விசாரணைகள் நடைபெறவில்லை. இந்த நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரின் வாதங்களையும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வலியுறுத்தியுள்ளார். எதிர் மனுதாரர்களிடமிருந்து முழுமையான பதில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தனது கூடுதல் வாதங்களை முன் வைப்பதாகவும் ஜெயின் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எதிர் மனுதாரர்கள் சிலரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வால் பதிலளித்தார்.

ஏற்கனவே மேல்முறையீட்டு மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்த ராஜா, இவ்வழக்கில் சிபிஐ மேல்முறையீடு தேவையற்றது என்று தெரிவித்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு வரும் 17ஆம் தேதி நீதிபதி சேத்தி முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *