தமிழ்நாட்டில் செவ்வாய்கிழமை முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து இன்று (ஏப்ரல் 18) மதியம் பசுமைவழிசாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், புதிய கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், “நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
இரவு நேர ஊரடங்கின்போது அவசர மருத்துவ தேவை தவிர மற்ற ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி இல்லை. வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள் பொது போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது.
ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் மற்றும் பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இரவுகளில் செயல்பட அனுமதி.
தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேரங்களில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவலர்கள் நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்குசென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அந்தந்த நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும்.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அத்தியாவசிய தேவைகள் தவிர மற்றவைகளுக்கு அனுமதி கிடையாது.
தமிழகத்தில் அனைத்து வகையான சுற்றுலா தலங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. தமிழகத்திலுள்ள கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை.
பிளஸ் 2 தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. ஆனால், செய்முறைத் தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும். அரசு மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் இணையவழியில் மட்டுமே நடத்த வேண்டும்.
கோடைக்கால முகாம்கள் நடத்த தடை.
முழு ஊரடங்கின்போது திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகள் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் நடைபெறலாம்.
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகிற 20ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
�,