ராமதாஸ்-விஜயகாந்த்: விருத்தாசலத்தில் தொடங்கிய யுத்தம் தொடர்கிறதா?

politics

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களையும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேர்தல் பொறுப்பாளர்களையும் நியமித்தது. இவர்களை உள்ளடக்கிய ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 30-ஆம் தேதி தேமுதிக தலைமை கழகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பல்வேறு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர்கள் அனைவருமே குறிப்பிட்ட ஒரு கருத்தில் உறுதியாக இருந்துள்ளனர். அதுதான் பாமக எதிர்ப்பு.

‘2014, 2019 நாடாளூமன்றத் தேர்தலில் பாமக இடம்பெற்ற அணியில் நாமும் இடம்பெற்றோம். தமிழகம் முழுக்க வாக்குவங்கி வைத்திருக்கும் நம்மை வட மாவட்டத்தில் மட்டுமே வாக்கு வங்கி வைத்திருக்கும் பாமக தனக்குப் போட்டியாக கருதி நமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தது. பாமகவின் அழுத்தத்தால்தான் 2019 இல் நமக்கு குறைவான தொகுதிகள் கிடைத்தன. தேமுதிக தொண்டர்கள் கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு உழைக்கிறார்கள். ஆனால் பாமக தொண்டர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. அவர்கள் தேமுதிக வளர்ந்துவிடக் கூடாது என்று திட்டத்தோடு நம்மை ஒதுக்குகிறார்கள்”என்று பல பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர்.

பாமகவுக்கும், தேமுதிகவுக்கும் அப்படியென்ன பிரச்சினை? சில சீனியர் தேமுதிக நிர்வாகிகளிடம் பேசினோம்.

“விஜயகாந்த் அரசியலுக்கு அடியெடுத்து வைத்ததில் இருந்து ராமதாஸின் வடமாவட்ட செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்தது. கேப்டன் முதன்முதலில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருத்தாசலத்தை தேர்ந்தெடுத்த போது தனது ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி விஜயகாந்தை தோற்கடிக்க நினைத்தார் ராமதாஸ்.

இப்போது தனிக்கட்சி கண்டு அரசியல் செய்து வரும் சீமான் உட்பட அப்போதைய திரைப்பிரபலங்கள் பலரையும் லட்சங்களை கொட்டி அழைத்து வந்து விஜயகாந்த்துக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வைத்தார். சின்னகவுண்டர் படத்தில் சுகன்யா தொப்புளில் விஜயகாந்த் பம்பரம் விட்ட ஸ்டில்லை பல மடங்கு விலைகொடுத்து வாங்கி அதை தொகுதியெங்கும் ஒட்டி விஜயகாந்த்துக்கு வாக்குகள் கிடைக்காமல் தடுக்கலாம் என்று நினைத்து செயல்பட்டார்.

விஜயகாந்த் ஜெயித்துவிட்டால் வடமாவட்டங்களில் தனது செல்வாக்கு இருக்காது என்பதை உணர்ந்துதான் ராமதாஸ் ஆரம்பத்திலிருந்தே தேமுதிகவை கிள்ளி எறிய முயற்சித்தார். ஆனால் விஜயகாந்தோ தனது சொந்த ஊரான மதுரையில் போட்டியிடாமல் வடமாட்டத்தைத் தேர்ந்தெடுத்து அரசியல் செய்து பாமகவின் செல்வாக்கை குறைத்தார். இன்றளவும் தேமுதிக மீது பாமக கடும் கோபம் கொண்டு இருப்பதற்கு காரணம் இதுதான்.

2014ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவும் பாமகவும் இடம் பெற்றிருந்த போது இந்த உரசல்கள் வெடித்தன. ஆனால் கூட்டணி தர்மத்துக்கு கட்டுப்பட்டு 2014 ஆம் ஆண்டு தர்மபுரியில் போட்டியிட்ட அன்புமணிக்கு தேமுதிகவினர் கடுமையாக வேலை செய்தோம், வாக்களித்தோம். அவரை வெற்றிபெறச் செய்தோம்.

ஆனால் சேலத்தில் போட்டியிட்ட எங்கள் இளைஞரணி செயலாளர் எல்கே சுதீஷுக்கு சேலம் தொகுதியில் வலிமையாக இருந்தும் பாமக முழுமையாக களப்பணியாற்ற வில்லை. எனவே பாமக தொண்டர்களும் தேமுதிக தொண்டர்களும் ஒன்று சேர்ந்து வேலை பார்ப்பது கடினமானது. எனவே பாமக இல்லாத ஒரு கூட்டணியில் இடம்பெற முயற்சிக்கலாம் என்று பல நிர்வாகிகள் கருதினார்கள். அதிமுகவும் நமக்கு உரிய மரியாதையை அளிக்கவில்லை. எனவே நாம் நம் வலிமையைக் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்”என்கிறார்கள்.

இதுபற்றி அதிமுக தரப்பில் கேட்டால், “தேமுதிக தலைமையே கேட்டுக்கொண்டதன் பேரில்தான் நிர்வாகிகள் கூட்டத்தில் இப்படி பேசுகிறார்கள். பாமக எப்படி இட ஒதுக்கீடு என்ற துருப்புச் சீட்டை வைத்து கொண்டு நெருக்கடி தருகிறார்களோ, அதேபோல இவர்கள் பாமக என்ற துருப்புச் சீட்டை கையிலெடுத்துப் பார்க்கிறார்கள். அதெல்லாம் சரியாயிடும். தேமுதிகவை விட அதிக சீட்டுகள் என்று பாமகவும், பாமகவை விட அதிக சீட்டுகள் என்று தேமுதிகவும் தொடர்ந்து கூட்டணிக்குள்ளேயே ஒரு போட்டியை உண்டாக்கி வருகிறார்கள். மதுரையில் நட்டாவே அதிமுகவுடன் கூட்டணி என்று சொல்லிவிட்ட பிறகு மற்ற கட்சிகள் எல்லாம் பெரிய அளவு பிரச்சினை செய்யாது பொறுத்திருந்து பாருங்கள்?” என்று கூறுகிறார்கள்.

இதற்கிடையில் திமுக தரப்புடன் தேமுதிக தொடர்பு ஏற்படுத்த முயற்சித்தும் அதற்கான ஆரம்ப கட்ட ரெஸ்பான்ஸ் கூட திமுகவிடம் இருந்து கிடைக்கவில்லையாம்

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *