மாணவி தற்கொலை- நடுநிலையான விசாரணை இல்லை: அண்ணாமலை

politics

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் நடுநிலையான விசாரணை இல்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் பயின்ற அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அரசியலாக மாறியது. முதலில் தன்னை மதமாற்றம் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதாக மாணவி கூறும் வீடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிர்ந்திருந்தார்.

இதனால் இந்த விவகாரம் அரசியல் களத்தில் பரபரப்பானது. மாணவிக்கு நீதி கேட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து மற்றொரு புதிய வீடியோ ஒன்று வெளியானது. அதில் பேசும் அந்த மாணவி ஹாஸ்டல் வார்டன் சகாயமேரி தன்னை கணக்கு வழக்கு பார்க்கச் சொல்லி அழுத்தம் கொடுத்ததால் படிக்க முடியவில்லை. இதனால் மதிப்பெண் குறைந்துவிடுமோ என்று எண்ணி இந்த முடிவுக்கு வந்தேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் பொய்யான தகவலைப் பரப்பி அதன் மூலம் மத கலவரத்தைத் தூண்டும் வகையில் அண்ணாமலை செயல்பட்டதாக அவரை கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். கடந்த ஜனவரி 27 ஆம் தேதி சோசியல் மீடியாக்களில் #arrestannamalai என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

இதையடுத்து மாணவியின் தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேசிய பாஜக 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் சொந்த ஊரான வடுகபாளையத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோர் இன்று சென்றிருந்தனர்.

மாணவியின் பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய அவர்கள் ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். பின்னர் மாணவியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, மாணவியின் குடும்பம் தங்களது பெரிய சொத்தை இழந்துவிட்டது. போலீஸ் விசாரணை பற்றி தான் இந்த குடும்பத்தினர் அதிகமாகக் கருத்து தெரிவித்தனர். காவல்துறையினரின் விசாரணை மாணவியின் பெற்றோர்களுக்கு மனக்கஷ்டத்தை கொடுத்து வருகிறது. நீதியைக் கொண்டு வர இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, இவர்கள்தான் குற்றவாளிகள் என முடிவு செய்து விசாரணை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

எப்போதுமே ஒரு துரதிருஷ்டவசமான சம்பவத்தை வைத்து, அரசியல் ஆதாயம் தேடி அதனை உடனடியாக தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லும் திமுக போன்று பாஜக நடந்து கொள்ளாது.

இந்த மாணவி, அவர் பேசியுள்ள வீடியோ, மாணவியின் தாய் தந்தை, ஊர் மக்கள் கொடுத்த வாக்குமூலம் ஆகியவற்றையெல்லாம் வைத்துத்தான் பாஜக போராடிக் கொண்டிருக்கிறது.

தமிழக உளவுத்துறை இந்த விவகாரத்தை ஒரு போராட்டமாக எடுத்துக்கொண்டு, குறிப்பாகச் சென்னையில் உள்ள அதிகாரிகள் தங்களுடைய தனிமனித பிரச்சினையாக எடுத்துக்கொண்டு, மாற்றிப் பேசி, மத சாயத்தைப் பூசி இவ்வளவு தூரம் நாடு முழுவதும் இந்த பிரச்சனை வெடித்திருக்கிறது என்றால் உளவுத்துறையின் தகுதியின்மை தான் இதற்கு காரணம்.

தமிழக முதலமைச்சருக்குக் கூட தவறான விளக்கத்தைக் கொடுத்து இருக்கிறார்கள் என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு.

சம்மந்தமே இல்லாமல் பள்ளி கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டவர்கள் இவ்விவகாரத்தைப் பற்றி பேசுகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணை இன்னும் முடியவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த சூழலில் நடுநிலைமையான விசாரணை வேண்டும், சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

இதுபோன்ற சூழலில் ஆளும் பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் பேசக்கூடாது. தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி கிடைக்குமா என எனக்கு மட்டுமின்றி பலருக்கும் கேள்வி எழுகிறது.

பாஜக எந்த ஒரு மதத்தினருக்கும் எதிரானது கிடையாது. தனி மனிதர்கள் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் செய்திருக்கக்கூடிய இந்த தவறுக்காக நியாயம் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது முதல்வர், மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என்று சொல்லுவார். எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை வேண்டும் என்று காலை முதல் இரவு வரை கூறுவார். எனவே மாணவியின் மரணத்தில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நடுநிலையான விசாரணை நடைபெற வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

மாணவி தற்கொலை விவகாரத்தில் காவல்துறை நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை. அரசியல் தலையீடு உள்ளது.

அடிப்படை ஆதாரம் இல்லாமல் நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்தது. அனிதாவை வைத்து அரசியல் செய்தது திமுக. ஆனால் நாங்கள் தஞ்சை மாணவிக்கு ஆதாரத்துடன் தான் நீதி கேட்கிறோம் அனிதாவிற்கு ஒரு நியாயம் தஞ்சை மாணவிக்கு ஒரு நியாயமா? என்று கேள்வி எழுப்பினார்.

**-பிரியா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *