சிறப்புக் கட்டுரை: உக்ரைன் போருக்குப் பின் உலகம் எப்படி இருக்கும்?

politics

b> டி.கே.அருண்
ஒரே ஆற்றில் இரண்டு முறை காலை வைக்க முடியாது என்று சொல்வார்கள். ஏனெனில், ஆற்றில் ஓடும் நீர் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது உலகப் பழமொழி. ஆனால், சில நிகழ்வுகள் ஒட்டுமொத்த உலகையே மொத்தமாக மாற்றிவிடும். பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைனில் ரஷ்யா ராணுவத் தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிகழ்வும் உலகையே மாற்றுமா?
ரஷ்யா – உக்ரைன் போரால் பங்குச் சந்தைகள் சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, உணவு விலை உயர்வு எனப் பல்வேறு நெருக்கடிகள் உருவாகியுள்ளன. ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஆனால் இந்தத் தடைகள் ரஷ்யாவுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை.
ரஷ்யாவுக்குப் போர் என்பது புதிதல்ல. இரண்டாம் உலகப் போரின்போது சோவியத் யூனியன் சுமார் 2 கோடி முதல் 4 கோடி உயிர்களை இழந்தது. ஆனாலும் இரண்டாம் உலகப் போர் தேசப்பற்றுக்கானது என இன்றும் ரஷ்யர்கள் நம்புகின்றனர். சோவியத் யூனியன் இழந்த உயிர்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். உக்ரைனைச் சேர்ந்த சுமார் 50 – 70 லட்சம் பேர் பலியாகினர்.
இரண்டாம் உலகப் போரின்போது ஸ்டாலின்கிராட் முற்றுகை 872 நாட்களுக்கு நீடித்தது. அப்போது சுமார் 10 லட்சம் பேர் பலியாகினர். ஸ்டாலின்கிராட் முற்றுகையின்போது முதன்முதலாக ஜெர்மன் ராணுவம் சரணடைந்தது. இந்தச் சண்டையின்போது சுமார் இரண்டு லட்சம் ரஷ்யர்கள் பலியாகினர்.
ஸ்டாலின்கிராட், லெனின்கிராட் இரு சண்டைகளின்போதும் சோவியத் படைகளுடன் சேர்ந்து பொதுமக்களும் போராடினர். ராணுவ வீரர்களுக்கு பொதுமக்கள் உணவு உள்ளிட்டவற்றை வழங்கினர். இந்தியர்களுக்கு நிஜ போரின் அனுபவம் கிடையாது. ஆனால் ரஷ்யர்களின் மனதில் போர் சூழல் ஆழப் பதித்துள்ளது.
இது உக்ரைனியர்களுக்கும் பொருந்தும். தற்போது உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் உக்ரைனுக்கு நேட்டோ நேரடியாக உதவி வழங்க முடியாமல் கைவிட்டுவிட்டது. இதனால், ரஷ்யாவின் பலமான ராணுவத்துக்கு முன் உக்ரைன் தவித்துவருகிறது.
உக்ரைனுக்குள் நேட்டோவை அனுமதித்தால் தனது எல்லைகளுக்கு ஆபத்து என ரஷ்யா தன்னைத் தற்காத்துக்கொள்ள முயற்சி செய்கிறது. இந்தப் போரினால் புவியரசியலில் பல வித மாற்றங்கள் இருக்கும். நேட்டோவுக்கு வெளியே தனது அரசியல் இருப்பை வளர்த்துக்கொள்ள ஐரோப்பா முயற்சி செய்யும்.
அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதாலும், ஆஸ்திரேலியாவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்திலிருந்து பிரான்ஸ் வெளியேறியதாலும் அமெரிக்கா மீது ஐரோப்பிய நாடுகள் கடுப்பில்தான் உள்ளன. இதுவரை நேட்டோவில் அமெரிக்காவும் பிரிட்டனும் அதிக ஆயுதங்களை வழங்கிவந்த நிலையில் தற்போது உக்ரைனுக்கு ஜெர்மனி ஆயுதம் வழங்கிவருகிறது. ஐரோப்பாவுக்குத் தனிப்படை வேண்டுமென பிரான்ஸ் அதிபரும் அழுத்தம் கொடுத்துவருகிறார்.


**இந்தியாவுக்கு உறுத்தல் ஏற்படுத்திய திருப்பம்**
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, உக்ரைன் போர் விளைவாக ரஷ்யாவும் சீனாவும் நெருக்கமாகிவிட்டன. இது மேற்குலக நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவை சீனா வாங்கும். ஸ்விஃப்ட் சர்வதேசப் பரிவர்த்தனை அமைப்பிலிருந்து ரஷ்யா நீக்கப்பட்டுள்ளதால் சீனா தனது பரிவர்த்தனைத் தொழில்நுட்பத்தை ரஷ்யாவுக்கு வழங்கும். இதற்கு கைம்மாறாக ஆசியாவில் சீனாவின் செயல்களுக்கு ரஷ்யா உதவும். இதற்கு மத்தியில்தான் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை எதிர்க்காமல் நடுநிலையாக இருந்துகொண்டது இந்தியா.
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்திவருவதால் சீனாவுக்கு தைரியம் அதிகரிக்கும். தைவானில் சீனா தாக்குதல் நடத்துமா என்ற அச்சம் ஆசிய நாடுகளில் உருவாகும்.
ஆசியாவுக்குள் நுழைய அமெரிக்கா முயற்சி செய்யுமா? அப்படி முயற்சி செய்தாலும் அமெரிக்காவை நம்ப முடியாது. ஏனெனில் உக்ரைன், ஆப்கானிஸ்தான் இரு நாடுகளையும் அமெரிக்கா சிக்கவைத்து ஏமாற்றிவிட்டது. ஆயுத உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் தென்கொரியா வளர்ந்துகொண்டே வருகிறது. ஜப்பானும் தனது ராணுவ பலத்தை ஆய்வு செய்ய வேண்டி வரும்.
உக்ரைன் போரால் கிரிப்டோகரன்சிகளும் லாபம் பெற்றுள்ளன. கிரிப்டோகரன்சி மூலமாக உக்ரைனுக்கு சர்வதேச அளவில் போருக்கு ஆதரவு கிடைத்துவருகிறது. மேலும், தொழில்நுட்பம் அறிந்த உக்ரைனியர்கள் கிரிப்டோ வடிவில் தங்கள் சொத்துகளை சுருட்டிக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அதேபோல, மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையை சமாளிக்க ரஷ்ய நிறுவனங்கள் கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்தி வருகின்றன.
கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா இரண்டாவது மிகப்பெரிய நாடாக உள்ளது. ஹைட்ரோகார்பன் மூலம் ரஷ்யாவுக்குக் கிடைக்கும் வருவாயை முடக்க மேற்கு நாடுகள் முயற்சி செய்கின்றன. பொருளாதாரத் தடை விதித்தாலும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்காமல் இருப்பது நீண்ட நாட்களுக்கு சாத்தியமா என்பது கேள்விக்குறியே. மேலும், ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் இயற்கை எரிவாயு வாங்கிவருகின்றன. ரஷ்யாவின் எரிவாயுவைக் கைவிடுவது ஐரோப்பிய நாடுகளுக்கே இழப்பு.
இன்னொரு பக்கம் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் எனக் கூறும் அமெரிக்கா, ரஷ்யாவிடமிருந்து யுரேனியம் வாங்குகிறது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலையும் எரிசக்தி விலையும் அதிகரித்துவிட்டன. மறுபுறம் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை சீனாவும் இந்தியாவும் வாங்கிவருகின்றன.
ஆக, ரஷ்யாவின் வருவாயை முடக்க வேண்டுமெனில் கச்சா எண்ணெய் சாராத சோலார் சக்தி, காற்றாற்றல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், முதலீடு செய்வதுமே ஒரே வழி. மேலும், வெனிசுலா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஆர்டர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா மீது அமெரிக்கா தொழில்நுட்பத் தடை விதித்துள்ளதால் சீனா முக்கியத் தொழில்நுட்பங்களில் சுயசார்பை எட்ட தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. தற்போது இதேபோன்ற தடை ரஷ்யாவிலும் ஏற்பட்டுள்ளதால், முக்கியத் தொழில்நுட்பங்களில் சீனாவும் ரஷ்யாவும் சுயசார்பை எட்டுவதற்கு முயற்சி செய்வார்கள்.
நேட்டோ பக்கம் போகாமல் உக்ரைன் நடுநிலையாக இருந்துகொண்டால் போரை நிறுத்துவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அவ்வகையில் போர் முடிவுக்கு வந்தால் நேட்டோ தங்களை ஏமாற்றிவிட்டதாக உக்ரைனியர்கள் மனதில் ஆழப் பதிந்துவிடும். போர் காரணமாக உக்ரைனிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பியோடியவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் விசாவும் கிடைத்துவிட்டது.
குறைவான கல்வியறிவு பெற்ற உக்ரைனியர்களோ அண்டை நாடான போலந்துக்குச் சென்று பண்ணை வேலைகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், போலந்தைச் சார்ந்தவர்கள் ஏராளமாக மேற்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்பு நிமித்தமாகப் புலம்பெயர்ந்துவிட்டனர்.
ஐரோப்பிய யூனியனில் உக்ரைனுக்கு உறுப்பினர் அந்தஸ்து வழங்க ஐரோப்பா முயற்சி செய்யும். ரஷ்யா அதை விரும்பாவிட்டாலும் எதிர்ப்பு தெரிவிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
போருக்குப் பின் உலக அரசியலில் ரஷ்யாவின் இருப்பும், மரியாதையும் வேறு விதமாக மாறியிருக்கும். இரு துருவங்களாக மாறிவிட்ட உலக அரசியலில் இந்தியா அமெரிக்காவின் பக்கம் நிற்பது சந்தேகம். ஆனால், இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்சினை இருப்பதால் அமெரிக்காவைக் கைவிடுவது இந்தியாவுக்குக் கடினம். ஆக, உக்ரைன் போர் உலகில் பல விஷயங்களை மாற்றிவிடும்.
டி.கே.அருண் ஆசிரியர், தி எகனாமிக் டைம்ஸ்

*
நன்றி: [moneycontrol](https://www.moneycontrol.com/news/opinion/the-world-after-the-ukraine-war-8230451.html)
தமிழில்: புலிகேசி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *